சனி

முயல் வளர்ப்பு


முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பு எதற்காக?
 
 
குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது.
சாதாரண தீவனத்தை உட்கொண்டு அதனை சிறந்த இறைச்சியாக மாற்றும் திறன்
இறைச்சிக்காகவும், உரோமத்திற்காகவும், தோலுக்காகவும் வளர்க்கலாம்.
 
நிலமற்ற விவசாயிகள், படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்

முயல் வளர்ப்பின் பயன்கள் என்ன?

முயல் வளர்ப்பின் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான தரமான  இறைச்சியை உற்பத்தி செய்து செலவை குறைக்கலாம்
முயல்களுக்கு தீவனமாக எளிதில் கிடைக்கும் இலை, தழைகளையும், வீட்டில் வீணாகின்ற காய்கறிகளையும், குறைந்த அளவு தானியங்களையும் கொடுக்கலாம்
இறைச்சி முயல்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இறைச்சி
முயல்கள் மூன்று மாத வயதில் 2 கிலோ உடல் எடையை அடைகின்றன.
முயல்களின் குட்டி ஈனும் திறன் மிக அதிகம்
முயல் இறைச்சியில் மற்ற இறைச்சிகளை விட அதிக அளவு புரதச் சத்தும் (21%) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (8 %) உள்ளது. அதனால் முயல் இறைச்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது
இறைச்சி வகை இனங்கள்
அதிக எடை உள்ள இனங்கள் (4-6 கிலோ எடை)
வெள்ளை ஜெயண்ட்
சாம்பல் ஜெயண்ட்
பிளமிஸ் ஜெயண்ட்


          வெள்ளை ஜெயண்ட் - அதிக எடையுள்ள இனம்
நடுத்தர எடை உள்ள இனங்கள் (3-4 கிலோ எடை)
நியூசிலாந்து வெள்ளை
நியூசிலாந்து சிவப்பு

கலிஃபோர்னியா
குறைந்த எடை உள்ள இனங்கள் (2-3 கிலோ எடை)
சோவியத் சின்சில்லா
டச்சு வகை
           சோவியத் சின்சில்லா - குறைந்த எடையுள்ள இனம்

முயல் வளர்ப்பு முறைகள்


புறக்கடை முயல் வளர்ப்பு
முயல்களை புறக்கடை வளர்ப்பில் வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவில் கொட்டகை அமைத்தால் போதுமானது. முயல்களை கடுமையான வெய்யில் மற்றும் மழை போன்ற தட்பவெப்ப நிலைகளிலிருந்து பாதுகாக்கவும்மற்ற விலங்குகளிடமிருந்து (பூனை, கீரி மற்றும் நாய்) பாதுகாக்க கொட்டகை அமைப்பது முக்கியம்
ஆழ்கூள முறை
இம்முறையில் முயல்கள் வலைகள் தோண்டாதிருக்க கான்கிரீட்டிலான தரை அவசியம். உமி, வைக்கோல் அல்லது மரத்தூள் போன்றவற்றினை ஆழ்கூளமாக 4 முதல் 6 அங்குல உயரத்திற்கு இட வேண்டும். இவ்வகையில் 30 இளம் முயல்களுக்கு மேல் ஒன்றாக வளர்க்ககூடாது.  குறைந்த எண்ணிக்கையில் முயல் வளர்க்க விரும்புவோர்களுக்கு ஆழ்கூள முறை வளர்ப்பு ஏற்றது.  குறிப்பாக ஆண் முயல்களை தனிமைப்படுத்தி வளர்க்கவேண்டும். இல்லாவிடில் அவை
ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்ளும். இம்முறை தீவிர முறை வளர்ப்புக்கு ஏற்றதல்ல. நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். இளங்குட்டிகள் பராமரிப்பும் கடினம்
 

தீவன மேலாண்மை


முயல்கள் அனைத்து வகையான தானியங்களையும் (சோளம், கம்பு மற்றும் இதர தானியங்கள்) பயறு வகைகளையும்  (கொண்டை கடலை) நன்றாக சாப்பிடும். மேலும் இலை, பயறு வகை தாவரங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், அகத்தி, தட்டைப்பயறு போன்றவற்றையும் சமையலறை கழிவுகளான காய்கறி கழிவுகள் மற்றும் கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கள் மற்றும் அவற்றினுடைய இலைகளை விரும்பி உண்ணும்.

முயல்களின் உணவில் இருக்கவேண்டிய சத்துக்கள்




சத்துகளின் விபரம்
வளர்ச்சிக்கு
பராமரிப்பிற்கு
சினைக்கு
பால் சுரப்பிற்கு
செரிமானம் ஆக்கூடிய எரிசக்தி (கிலோ கலோரி)
2500
2300
2500
2500
புரதச்சத்து(%)
18
16
17
19
நார்ச் சத்து(%)
10-12
12-14
10-12
10-12
கொழுப்பு சத்து(%)
2
2
2
2

தீவன மேலாண்மையில் கவனிக்க வேண்டியவை



முயல்களின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அவற்றை அடர் தீவனம் மட்டும் கொண்டு வளர்க்க முடியாது
முயல்களுக்கு சரியான நேரத்தில் தீவனம் கொடுக்க வேண்டும். நேரம் தவறினால் முயல்கள் பரபரப்படைந்து உடல் எடை குறையும்
முயல்கள் பகல் நேரங்களில் அதிக வெப்பநிலை காரணமாக தீவனம் சாப்பிடாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். மேலும் இரவு நேரங்களில் அவை சுறுசுறுப்பாக இருக்கும். எனவே பசுந்தீவனங்களை இரவு நேரங்களில் தீவனம் அளிப்பது முயல்கள் அவற்றை வீணாக்காமல் சாப்பிடுவதற்கு ஏதுவாகும். முயல்களின் இந்த பழக்கத்தால்  அடர் தீவனத்தினை காலை நேரங்களில் அளிக்கலாம்
அடர் தீவனத்தினை குச்சி தீவனமாக அளிக்கலாம். குச்சி தீவனம் கிடைக்காத இடங்களில் தூள் தீவனத்தினை தண்ணீரில் பிசைந்து சிறிய உருண்டைகளாக கொடுக்கலாம்
ஒரு கிலோ எடையுள்ள முயலுக்கு நாள் ஒன்றுககு 40 கிராம் அடர் தீவனமும் 40 கிராம் பசுந்தீவனமும் கொடுக்கவேண்டும்
முயல்களுக்கு பசுந்தழைகளை புதிதாக அளிக்க வேண்டும். வாடிய தழைகளை  முயல்கள் விரும்பி உண்ணாது. தரையில் பசுந்தழைகளை போடாமல் பக்க வாட்டில் சொருகி வைப்பது முயல்கள் அவற்றை நன்கு சாப்பிடும்
சுத்தமான சுகாதாரமான குடிநீர் முயல்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்

வகை
தோராயமான உடல் எடை
தீவன அளவு ஒரு நாளுக்கு
கலப்பு தீவனம்
பச்சை காய்கறி
வளர்ந்த ஆண் முயல்
4-5 கிலோ
100 கிராம்
250 கிராம்
வளர்ந்த பெண் முயல்
4-5 கிலோ
100 கிராம்
300  கிராம்
பால் கொடுக்கும் முயல் மற்றும் சினை முயல்கள்
4-5 கிலோ
150 கிராம்
350 கிராம்
குட்டிகள்
600-700 கிராம்
50-75 கிராம்
150 கிராம்

மாதிரி அடர் தீவனக்கலவை



மூலப்பொருட்கள்
அளவு
உடைத்த மக்காச்சோளம்
30 பாகம்
உடைத்த அரைத்த கம்பு
30 பாகம்
கடலைப்பிண்ணாக்கு
13 பாகம்
கோதுமைத் தவிடு
25 பாகம்
தாது உப்புக் கலவை
1.5 பாகம்
உப்பு
0.5 பாகம்

பெண்முயல் - 5-6 மாதங்கள்
ஆண் முயல்-  5-6 மாதங்கள் (ஆண்முயல்களும் 5-6 மாதங்களில் பருவத்தினை அடைந்தாலும் ஒரு ஆண்டிற்குப் பிறகு இனவிருத்திக்கு பயன்படுத்தினால் அதிகப்படியன தரமான குட்டிகள் கிடைக்கும்)

இனவிருத்திக்கான முயல்கள் தேர்வு செய்யும் முறைகள்
முயல்களை 5 முதல் 8 மாத வயதில் அதன் முழு உடல் எடையினை அடைந்த பின்பே இனவிருத்திக்காக தேர்வு செய்ய வேண்டும்
இனவிருத்திக்காக தேர்வு செய்யப்படும் ஆண் மற்றும் பெண் முயல்கள் அதிக குட்டிகள் ஈனப்பட்ட ஈற்றிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்
நல்ல ஆரோக்கியமான முயல்களையே இனவிருத்திக்காக தேர்வு செய்ய வேண்டும். ஆரோக்கியமான முயல்கள் நல்ல சுறுசுறுப்புடன் நன்கு உணவு உண்பதுடன் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். மேலும் ஆரோக்கியமான முயல்கள் தங்கள் உடல் பகுதியினை சுத்தமாக வைத்திருக்கும். அவற்றின் உரோமம் சுத்தமாகவும் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
ஆண் முயல்களை தேர்வு செய்யும் போது மேற்கூறிய பண்புகளுடன் அதன் விதைப்பையில் இரண்டு நன்கு வளர்ந்த விதைகள் உள்ளனவா என்பதனை பார்த்தே வாங்க வேண்டும்
ஆண்முயல்களை தேர்வு செய்யும் பொழுது பெண் முயல்களுடன் இனச்சேர்க்கை செய்வதன் மூலம் அதன் ஆண்மை பண்பினை ஓரளவிற்கு அறியலாம்
 

பெண் முயலின் சினைப்பருவ அறிகுறிகள்


பொதுவாக முயல் இனங்களில் சினைப்பருவ சுழற்சி காணப்படுவதில்லை. எப்பொழுதெல்லாம் பெண் முயல் ஆண்முயலினை இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கிறதோ அப்பொழுது அவை சினைப்பருவத்தில் உள்ளதாக கணக்கில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் பெண்முயலின் சிவந்த பெண் குறிகள் அவை சினைப்பருவத்தில் உள்ளதை குறிக்கும்.  ஆண்முயலுடன் பெண் முயலை அருகில் வைக்கும் போது பெண் முயல்கள் சினைப்பருவத்திலிருந்தால் அதன் முதுகு நடுப்புறம் வளைந்து உடலின் பின் பகுதி உயர்ந்த நிலையில் நிற்கும். அதே சமயம் பெண் முயல்கள் சினைப்பருவத்தில் இல்லாவிடில் உடல் குறுகி கூண்டின் ஒரு மூலையில் அமர்ந்து விடும். சில சமயங்களில் பெண் முயல்கள் ஆண் முயல்களை தாக்கத் துவங்கும்.

இனச்சேர்க்கை

முயல்களுக்கான சில இனவிருத்தி விபரங்கள்

ஆண் பெண் விகிதம்
1:10
முதல்இனச்சேர்க்கையின்போதுவயது
5-6 மாதங்கள்
முதல்இனச்சேர்க்கையின்போதுதாயினுடையஉடல்எடை
2.25 முதல் 2.5 கிலோ
சினைப்பருவம்
28-31 நாட்கள்`
தாயிடமிருந்துகுட்டிகளைப்பிரிக்கும்வயது
6 வாரங்கள்
குட்டிபோட்டபின்புமீண்டும்இனச்சேர்க்கைக்குஅனுமதித்தல்
6 வாரங்களுக்குப்பின் குட்டிகளைப் பிரித்த பின்பு
விற்பனைவயது
12 வாரங்கள்
விற்பனையின்போதுஉடல்எடை
சுமார் 2 கிலோ அல்லது மற்றும் அதற்கு மேல்
சினை அறிகுறிகள் காணப்படும் பெண் முயலின் ஆண் முயல் இருக்கும் கூண்டிற்கு எடுத்துச்சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். சரியான பருவத்தில் இருக்கும் பெண் முயல் வாலை தூக்கி ஆண் முயலினுடைய இனச்சேர்க்கையினை ஏற்றுக்கொள்ளும். இனச்சேர்க்கை நடந்தவுடன் ஆண் முயல் 'கிரீச்' என்ற சப்தமிட்டு ஒருபுறமாகவோ அல்லது பின்புறமாகவோ விழும். இதுவே சரியான இனச்சேர்க்கையினுடைய அறிகுறியாகும். ஒரு ஆண் முயலினை ஒரு வாரத்தில் 3 முதல் நாட்களுக்கு மேல் இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தக்கூடாது. அதை போல் ஆண் முயலினை ஒரே நாளில் 2 அல்லது 3 முறைக்கு மேல் இனவிருத்திக்கு பயன்படுத்தக்கூடாது. ஆண் முயல்களுக்கு போதுமான ஓய்வும் நல்ல சத்தான உணவும் சிறப்பான இனச்சேர்க்கைக்கு அவசியமாகும். பண்ணையில் 10 பெண் முயல்களுக்கு 1 ஆண் முயல் என்ற விகிதத்தில் வைத்திருக்க வேண்டும். ஓரிரு அதிகப்படியான ஆண் முயல்கள் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் இனவிருத்தி சமயங்களில் ஆண்முயல்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இந்த முயல்களை மாற்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்
இறைச்சி முயலின் சினைக்காலம் - 28 -31 நாட்கள் ஆகும். இனச்சேர்க்கை செய்த நாளிலிருந்து 12 முதல் 14 வது நாளில் முயலின் அடிவயிற்றினை தடவிப்பார்த்து சினைப்பட்டதை அறியலாம். இதற்காக தாய் முயல் கூண்டின் மேல் வைத்து அது அமையதியடைந்த பின்னர், பின் கால்களுக்கு இடையில் வயிற்றப்பகுதியில் கை விரல்களால் மெதுவாக தடவிப்பார்த்தால் சிறிய நெல்லிக்கனி போன்ற உருண்டையான சதைக்கோளம் விரல்களில் தட்டுப்பட்டால் சினைப்பட்டதை உறுதி செய்யலாம். பதிநான்காம் நாள் சினை இல்லா முயல்களை மீண்டும் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். மூன்று முறைக்கு மேல் இனச்சேர்க்கை செய்த பின்னும் சினைப்படாத முயல்களை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
சினைப்பட்ட முயல்களின் உடல் எடை சிறிது அதிகரித்து கணப்படும். சினைப்பட்ட 25 நாட்களுக்குப்பின் 500 முதல் 700 கிராம் வரை அதிகரித்து காணப்படும். இந்த எடை அதிகரிப்பினை முயல்களை தூக்கும் போதே உணரலாம். சினைப்பட்ட முயல்களை இனச்சேர்க்கை செய்யும் போது இனச்சேர்க்கையாகாது

சினை முயல்களை பராமரிக்கும் முறைகள்


பதிநான்காம் நாள் சினை பரிசோதனையில் சினை என்று உறுதி செய்யப்பட்ட முயல்களுக்கு அதன் தீவனத்தின் அளவினை தினசரி100 கிராம் என்ற அளவில் இருந்து 150 கிராம் என்ற அளவிற்கு அதிகரிக்க வேண்டும். இனச்சேர்க்கை செய்த நாளிலிருந்து 25 வது நாளிலிருந்து குட்டி போடும் கூண்டிற்கு மாற்ற வேண்டும். குட்டி போடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே குட்டி போடும் பெட்டியினை கூண்டில் வைக்க வேண்டும். நன்கு வெய்யிலில் காய்ந்த தேங்காய் நார் அல்லது வைக்கோலினை குட்டி போடும் பெட்டியில் வைக்க வேண்டும். தாய் முயல்கள் இந்த நார் பொருட்களுடன்  குட்டி போடுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக தன் அடிவயிற்றிலுள்ள பஞ்சு போன்ற உரோமத்தினை பிடுங்கி குட்டி போடுவதற்கான ஒரு கூட்டினை அமைக்கும். இந்த நேரத்தில் முயல்களை தொந்தரவு செய்யக்கூடாது. வெளிஆட்களை குட்டி போடும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது.
பெரும்பாலும் அதிகாலை வேலைகளில் தான் முயல்கள் குட்டி போடும். சராசரியாக 15 முதல் 30 நிமிடங்களில் முயல்கள் குட்டிகளை ஈன்று விடும். தாய் முயல்களே குட்டிகளை சுத்தம் செய்து விடும். தாய் முயல்கள் குட்டிகளை பராமரிக்கும் பணியினை அதிகாலையிலேயே செய்து விடும். குட்டி போடும் பெட்டியினை தினமும் காலையில் சோதனை செய்ய வேண்டும். சோதனை செய்யும் போது குட்டிகள் இறந்திருந்தால் அவற்றினை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். சோதனையின் போது தாய் முயல் பரபரப்படையும். எனவே தாய் முயலினை சோதனையின் போது அப்புறப்படுத்தி விடுவது நல்லது

பிறந்த முயல் குட்டிகள் பராமரிப்பு


பிறந்த குட்டிகள் கண் மூடி உரோமமில்லாமல் இருக்கும். அவை குட்டி ஈனும் பெட்டிக்குள் தாய் முயலால் உருவாக்கப்பட்ட உரோம மெத்தையில் ஒன்றாக படுத்திருக்கும். தாய் முயல் சராசரியாக ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பால் கொடுக்கும். பொதுவாக அதிகாலை நேரத்தில் தாய் முயல்கள் பால் கொடுக்கும். வலுக்கட்டாயமாக நாம் பாலூட்டச்செய்தால் முயல்களில் பால் சுரப்பு இருக்காது. நன்கு பால் குடித்த குட்டிகள் தோல் சுருக்கமின்றி மினுமினுப்பாக காணப்படும். சரியாக பால் குடிக்காத குட்டிகள் தோல் வறண்டு சுருக்கமாகவும் உடல் வெப்பம் குறைந்து சோம்பலுடனும் காணப்படும்

செவிலித்தாய் வளர்ப்பு முறை


சாதாரணமாக ஒரு முயலில் 8 முதல் 12 பால் காம்புகள் இருக்கும். இக்காம்புகளின் எண்ணிக்கைக்கு மேல் குட்டிகள் ஈனப்படும்போது சரிவர பால் கிடைக்காமல் குட்டிகள் இறக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் தாய் முயல்கள்  குட்டிகள் ஈன்ற பின்பு இறந்து விடுதல், தாய்மை பண்பற்ற தாய்க்கு பிறந்த குட்டிகள் மற்றும் கூண்டினை விட்டு கீழே விழுந்த குட்டிகள் எந்த தாய்க்குரிய குட்டி என்பதில் சந்தேகம் ஏற்படும் தருணங்களில் குட்டிகள் செவிலித்தாய் மூலம் வளர்க்கலாம்

குட்டிகளை செவிலித்தாய்க்கு மாற்றும் போது கவனிக்கவேண்டியவை


ஒரு செவிலித்தாய்க்கு மூன்று குட்டிகளுக்கு மேல் மாற்றக்கூடாது
பிறந்த குட்டிகளுக்கும் செவிலித்தாயின் குட்டிகளுக்கும் வயது வித்தியாசம் 48 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது

குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்தல்


இளங்குட்டிகள் பொதுவாக 3 வாரங்களுக்கு குட்டி போடும் பெட்டியினுள் இருக்க வேண்டும். அதன்பின் பெட்டியினை எடுத்து விடலாம்.  சுமார் 4 முதல் 6 வார வயதில் குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். குட்டிகளை பிரிக்கும் போது தாய் முயல்களை பிரித்துவிட்டு குட்டிகளை அதே பெட்டியில் மேலும் ஓரிரு வாரங்கள்  வைத்திருந்து அதன் பின் பாலின வாரியாக பிரித்து ஒரு கூண்டு அறைக்கு  இரண்டு குட்டிகள் வீதம் வைத்து வளர்க்க வேண்டும். தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கான உணவில் திடீரென மாற்றங்கள் செய்யக்கூடாது

இளங்குட்டிகளில் இறப்பு விகிதத்தினை குறைக்கும் முறைகள்


குட்டிகள் பிறந்த நாள் முதல் 15 நாட்கள் வரை தாயின் பராமரிப்பில் வளரும். அதற்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கும்.  இக்கால கட்டங்களில் குட்டிகளின் இறப்பிற்கு பெரும்பாலும் தாய் முயல் காரணமாக இருக்கும். பதினைந்து நாட்களுக்குப் பிறகு குட்டிகள் உணவு மற்றும் குடிநீரனை சாப்பிட துவங்கும் போது நோய்கள் பரவ வாய்ப்பாகிறது. குடிநீர் மூலம் பரவும் நோய்களே அதிகம். எனவே நன்கு கொதிக்க வைத்து சூடு ஆறிய குடிநீரினை குட்டிகளுக்கு கொடுக்க வேண்டும். குடிநீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலவையினை 10 லிட்டர் குடிநீருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து 20 நிமிடங்களுக்கு பின்பு பெரிய மற்றும் குட்டி முயல்களுக்கு அளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்

ஆரோக்கியமான முயல்களின் அறிகுறிகள்


தோல் மற்றும் உரோமம் பொலிவுடன் காணப்படும்
ஓரிடத்தில் நில்லாமல் துறுதுறுவென்று இருக்கும்
தீவனம் போட்டவுடன் உடனே தின்று விடும்
கண்கள் பளபளப்புடனும் எவ்வித நீர்க்கசிவுகளும் இன்றி காணப்படும்
முயல்களின் புழுக்கைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்
முயல்களினுடைய உடல் எடை சீராக அதிகரிக்கும்

நோய் முயல்களின் அறிகுறிகள்


சோர்வாகவும் தளர்ச்சியுடனும் காணப்படும்
முயல்கள் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படும்
அதிகமாக முடி கொட்டல் காணப்படும்
முயல்கள் அங்கும் இங்கும் திரியாமல் ஒரே இடத்தில் அடைந்து காணப்படும்
முயல்களின் தீவனம் எடுக்கும் அளவு குறைவாக காணப்படும்
முயல்களின் மூக்கு, வாய், மலத்துவாரம் மற்றும் கண்களிலிருந்து நீர் அல்லது சளி போன்ற திரவம் வடிந்து கொண்டிருக்கும்
உடல் வெப்பநிலை அதிகரித்து வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்

முயல்களில் ஏற்படும் நோய்கள்


நீர்க்கோப்பு நோய்

குறைவான காற்றோட்ட வசதி, புழுக்கமான முயல் கொட்டகை, சுகாதாரமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை முயல்களை இந்நோய் தாக்கத்திற்கு உட்படுத்துகின்றன. தாய் முயலிடமிருந்து குட்டிகளுக்கு இந்நோய் பரவுகிறது.
அறிகுறிகள் : நிரந்தர தும்மல் மற்றும் இருமலால் முயல்கள் முன்னங்கால்களால் மூக்கை துடைத்துக்கொண்டே இருக்கும். முயல்கள் மூச்சு விடும் போது கிலுகிலுப்பை போன்ற ஒலி உண்டாக்கும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் பெருமூச்சு வாங்குதல் போன்றவையும் காணப்படும். நீர்க்கோப்பு நோயுடன் இணைந்து தோலுக்கடியில் சீழ்க்கட்டி உண்டாதல், கழுத்து கோணல் நோய் போன்றவற்றையும் இக்கிருமி ஏற்படுத்துகிறது.
சிகிச்சை : பெரும்பாலும் சிகிச்சை பலனளிப்பதில்லை. பாதிக்கப்பட்ட முயல்கள் குணமடைந்தாலும் அவை நோய்க்கிருமிகளை மற்ற முயல்களுக்கும் பரப்புவதால் இந்நோயினால் பாதிக்கப்பட்ட முயல்களை பண்ணையிலிருந்து நீக்கி விடுவதே நோயினைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.

கழுத்துக்கோணல் நோய்


நீர்க்கோப்பு நோயினால் பாதிக்கப்பட்ட முயல்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன. இந்நோய் நடுக்காது மற்றும் மூளை ஆகியவற்றை பாதிக்கிறது. காதுகளின் நடுச்சவ்வு பாதிப்படைந்து காதுகளிலிருந்து சீழ் வடிவதால் அதிக வலியின் காரணமாக நோய் தாக்கிய முயல்கள் தலையை ஒரு புறமாக திருப்பிக் கொள்ளும். நீர்க்கோப்பு நோயினை முற்றிலும் குணப்படுத்துவதன் முலம் இந்நோயினை தவிர்க்கலாம்

கழிச்சல் நோய்



முயல்களில் கழிச்சல் நோயானது பல்வேறு வகையான நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. இந்நோய்க்கிருமிகள் திடீரென தீவனத்தை மாற்றுவதாலும் முக்கியமாக மாவுச்சத்து உள்ள தீவனத்தை அதிகமாக தருவதாலும், நோய் எதிர்ப்புசக்தி குறைகின்ற சமயங்களிலும் சுகாதாரமற்ற தீவனம் மற்றும் தண்ணீரினை தொடர்ந்து தருவதாலும் கழிச்சலை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட முயல்கள் வயிறு உப்பியும், தோல் மற்றும் உரோமங்கள் பொலிவிழந்தும் அதிகமான வயிற்றுப்போக்கினால் மிகுந்த நீரிழப்பு உண்டாகி துவண்டு போய் காணப்படும்

சிகிச்சை
தீவனத்தை படிப்படியாக மாற்றுதல், மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள தீவனத்தை தருதல், மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்

மடி நோய்
பாலூட்டும் முயல்களுக்கு இந்நோய் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட மடியானது சூடாகவும், சிவந்தும், வீங்கியும் காணப்படும். தகுந்த எதிர் உயிரி மருந்துகளைக் கொண்டு இந்நோயினை கட்டுப்படுத்தலாம்

பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்


டெர்மடோபைசிஸ் எனும் வகையினை சேர்ந்த பூஞ்சைகள் முயல்களில் படை மற்றும் சொறி நோயினை உண்டாக்குகின்றன. இப்பூஞ்சைகள் முயல்களின் காது மற்றும் மூக்குப்பகுதியில் திட்டு திட்டாக முடி உதிரச் செய்து சொறியினை உண்டாக்கும். அரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட முயல்கள் முன்னங்கால்களால் காது மற்றும் மூக்குப் பகுதிகளை தொடர்ந்து சொறிவதினால் அப்பகுதிகளில் புண்கள் ஏற்படும். பின்னர் மற்ற  பாக்டிரியாக்களின் பாதிப்பினால் சீழ் உண்டாகும்.
சிகிச்சை :

கிரிசியோபல்வின் அல்லது பென்சைல் பென்சோயேட் களிம்பினை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். கிரிசியோபல்வின் மருந்தினை 0.75 கிராம் அளவு ஒரு கிலோ தீவனத்துடன் கலந்து இரண்டு வாரங்களுக்கு முயல்களுக்கு கொடுப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்

நோயினைத் தடுக்க முயல் பண்ணை சுகாதாரம்



முயல் பண்ணையானது உயரமான இடத்தில் நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்
முயல் கூண்டுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
முயல் கொட்டகையினை சுற்றி மரங்கள் இருப்பது அவசியம்
முயல் கொட்டகைக்கு வருடம் இரு முறை சுண்ணாம்பு பூச வேண்டும்
வாரம் இரு முறை கூண்டுகளுக்கு கீழே சுண்ணாம்புக் கரைசலை தெளிக்க வேண்டும்
கோடைக்காலங்களில் கூண்டுகளின் மேலும் முயல்களின் மேலும் நீர் தெளித்து கொட்டகையின் வெப்பத்தை குறைத்தால் அதிக வெப்பத்தால் முயல்களில் ஏற்படும் இறப்பினை தவிர்க்கலாம்
நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை முயல்களுக்கு குறிப்பாக குட்டி போட்ட மற்றும் இளவயது முயல்களுக்கு கொடுக்க வேண்டும்
பாக்டிரியாக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த டெட்ராசைக்கிளின் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் வீதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும்
Thanks: Tamilnadu Vivasayam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக