சனி

நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

உலாவு தளத்துடன் கூடிய கூண்டுமுறை:
இந்த நவீன நாட்டுக்கோழி வளர்ப்பு முறை, குஞ்சு பொரித்த காலத்திலிருந்து அவைகளின் தினசரி வளர்ச்சி, அப்போது அவைகளின் உயிர் பாதுகாப்பு என்பனவற்றிற்கும், தட்பவெப்ப கால மாறுபாட்டால் உண்டாகும் வைரஸ் நோய்களினின்றும், வருமுன் காப்பு என்ற கவசத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு எல்லாவித நோய் களிலிருந்தும் செல், பேன் மற்றும் வயிற்றுப்பூச்சி முதலிய ஒட்டுண்ணிகளிலிருந்தும் காப்பாற்றி தொழிலில் தோல்வியில்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளது.
உலாவு தளத்தின் உட்புறத்தளம், காரைகள், மண் போன்றவைகளால் நிரப்பப்பட்டு கெட்டிக்கப்பட்டு பசுஞ்சாணியால் மெழுகிவிடப்படும். மழை காலங்களில் தரை, நனையாத முறையில் பாலிதீன் அல்லது உரச்சாக்கு மேல் கூரையாக தற்காலிகமாக மறைக்கப்படும். உலாவு தளத்தின் நாட்புறமும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கோழிக் கூண்டுகள் அருகில் வேப்ப மரங்கள் வளர்க்கப்பட்டால் நோய்கள், காற்று, வெயில் என்பனவற்றினின் றும் கோழிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக் கும். பாம்புகள் வராமல் தடுக்க, நாகதாளிச் செடியையும் வசம்புச் செடியையும் ஓரமாகப் பாத்தியமைத்து வளர்த்தால் மேலும் நல்ல பயனைத் தரும்.
கோழிகள் சில வேளைகளில் கீரைகள், பசும்புல் என்பனவற்றையும் உணவாக உட்கொள்ளும். அத்தேவையைப் பூர்த்தி செய்ய மண் சட்டிகளில் உரத்தோடு கலந்த மண்ணை நிரப்பிக் கீரைகளை வளர்த்து, வளர்ந்த பின் சட்டியுடன் உலாவு தளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் வைக்க, அவை ஒரு இயற்கை சூழலை உருவாக்கி, கோழிகளின் இனவிருத் தித்திறனை அதிகப்படுத்தும். கோழிகளும் சில வேகைளில் மாமிச பட்சணியே. மேற்படி தேவையைப் பூர்த்திசெய்ய சிறு பெட்டிகளில் ஓடு தளத்தில் தினசரி கூட்டி சுத்தம் செய்யும் கோழிக்கழிவுகள், இறைக்கப் பட்ட தீவன தானியங்களின் கழிவுகள் ஆகியவற்றை நல்ல மண்ணுடன் கலந்து நிழலில் ஈரப் பதத்துடன் இருக்கும்படி செய்து நான்கைந்து மண்புழுக்களை விடலாம். அவை அக்கழிவுகளை நல்ல உரமாக்குவதுடன் பல்கிப்பெருகி கோழிகளுக்கு ஏற்ற மாமிசத் தீவனமாகவும் மாறும். மேலும் பெட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் மண்புழு உரம் அரை கிலோ 10 முதல் 15 ரூபாய் வீதம் விற்கப்பட்டு மேல் வருமானத்தைப் பெருக்கும்.
உலாவு தளத்தின் உட்புற, வெளிப்புற வலைகளில் அமைக்கப்படும் இன்னும் ஒரு முக்கிய பெட்டி உள்ளது. அது முட்டையிடும் பெட்டி அல்லது கூண்டு என்பது நான்கு பக்கமும், கோழிச்சல்லடையால் சுற்றி வளைத்து அடிக்கப்படுகிறது. இது தரையிலிருந்து இரண் டரை, மூன்றரை அடி உயரத்தில் கீழிருந்து கீரிப் பிள்ளை, நரி, நாய் மட்டுமின்றி பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும் தாக்கப்படா வண்ணம் காத்துக் கொள்கிறது. சவுக்குச் சட்டங் கள் பொருத்தப்பட்டு இரவில் பனி, மழை, காற்று இவைகளால் பாதிக்கப்படாமல் நல்ல உறுதியான மேல் கூரை அமைக்கப்பட்டு அமைதியுடன் கோழிகள் ஓய்வுபெற வசதியளிக்கிறது.
மேற்கண்ட முறையில் ரன் எனப்படும் உலாவுதளம் ஒரு கோழிக்கு 3 க.அடி என்ற முறைப்படி இடம் ஒதுக்கப்பட்டு நல்ல உறுதியான சவுக்கு கம்புகள் நடப்பட்டு, பூமியிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயர 4 பக்கம் அகலமான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, அதன் மேல் சட்டங்கள் பொருத் தப்பட்டு, நான்கு பக்கமும் கோழிச்சல்லடையால் தரையிலிருந்து சுமார் ஆறரை முதல் ஏழு அடி உயரமும், அளவுக்கு அரை அங்குல கோழிச்சல்லடையால் சுவர் போன்ற அமைப்பும், அவைகளுக்கு மேல் கோழிகள் பறந்துவிடாமல் தடுக்க மேற்பகுதியும் சல்லடையால் வேயப்படுகிறது. கோழி வளர்ப்போர் உள்ளே சென்றுவரக் கதவும் அமைக்கப்படுகிறது.
தூசிக்குளியல்: மேற்படி அமைப்பினுள் கோழிகளின் தீவனப் பாத்திரம், குடிநீர் பாத்திரம் என்பன வெயில் தாக்காத வண்ணம் சிறுசிறு ஓலைக் கூரைகளுடன் அமைக்கப்படுகின்றன. கோழிகளுக்கு டஸ்ட் பாத் செய்யக்கூடிய குறுமணல், சாம்பல், பூச்சிக்கொல்லி பவுடர் கொண்ட கலவையுடன் அகன்ற வாய் கொண்ட குழியமைப்பும் அமைக்கப்படுகிறது. இது கோழியின் மேல் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற பெரிதும் உதவுகிறது.

தீவன பாத்திரம்: தீவன பாத்திரம் எப்போதும் கோழிகள் விரும்பி உண்ணும் தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாணம், சோளம், வெ.சோளம், தவிடு, பிண்ணாக்கு போன்ற உணவுகளால் நிரப்பப்பட வேண்டும்.
குடிநீர் பாத்திரம்: குடிநீர் பாத்திரம் கோழிகள் குடிக்கும் தண்ணீர் அசுத்தமடையா முறையிலும் அதே நேரத்தில் குடிநீர் குறைவில்லாமல் கிடைக்கவும் வகை செய்யும் முறையில் அமைக்கப்பட வேண்டும். மேற்படி பாத்திர அமைப்பு முறை குடிக்க குடிக்க குறையா வண்ணம் தண்ணீர் வர வசதியுடையதாக இருக்க வேண்டும்.
முட்டையிடும் பெட்டி: 10 கோழிகள் கொண்ட பண்ணைக்கு ஒரு அடி அகலமும், ஒண்ணேகால் அடி நீளம், ஒன்றரை அடி ஆழம் கொண்ட அரை அங்குலப் பலகைகளான 6 முதல் 7 பெட்டிகள் நடுவில் பிரிக்கும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். பூட்டு போட்டு பூட் டக் கூடியவையும், பாதுகாப்பான முறையிலும் வெளியிலிருந்து திறந்து முட்டைகளை சேகரிக்கக்கூடிய முறையில் அமைய வேண் டும். உலாவு தளத்தின் சுவரின் மேல் உறுதியாக நிற்கவும் வளைச்சுவர் மற்றும் சட்டங்களுடன் இடைவெளி விடாமலும் அமைக்கப்பட வேண்டும். நாள்தோறும் இடப்படும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படவும் வேண்டும்.
முட்டைகள் பாதுகாப்பு: ஒரு புது மண்பானையில் பாதிக்குமேல் வரை குறுமணலால் நிரப்பப் பட்டு அதன்மேல் முட்டைகள் வைக் கப்பட வேண்டும். பானை அகல வாய் கொண் டதாகவும் அதன் வாயை அரை வளை மூடி போடப்பட வேண்டும். காற்றோட்டமும், ஈரப் பதமும் உள்ள இருண்ட இடத்தில் மேற்படி முட்டைகள் அடை வைக்கப்பட்டு நல்லவிதமாக குஞ்சுகள் பொறிக்கப்பட வேண்டும்.
கோழிகள் தேர்வு: நல்ல ஆரோக்கியமானகோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக் காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும். வேகமான நடை, வேகமான ஓட் டம், தேவைக் கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாக சேவல்கள் இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாக இருக்கும். நல்ல அகலமான நெஞ்சும், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும். கோழியின் சுகத்தை கொண்டையில் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மா ரகக் கோழிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இயற்கை முறை அடைவைப்பு: இயற்கை முறை அடை வைப்புக்கு லேசான பாரமுள்ள, அகன்ற நெஞ்சும், இறகுகள் அடர்ந்தும், அடையில் படுத்தபடி இருக்கும் நாட்டு பெட்டை கோழிகள் ஏற்றவை. சிறகுகள் அடர்ந்தும் அகலமாகவும் இருப்பது முட்டைகளை சுழற்றவும், நல்ல அரவணைப்புக்கும் உகந்தவை.

முட்டை அடைவைத்த 7வது நாளிலேயே முட்டை கருக்கூடிய முட்டையா இல்லையா எனக்கண்டறிந்து கருக்கூடா முட்டையை சாப்பிட பயன்படுத்தலாம். இதனைக் கண்டறிய ஒரு நோட்டு அட்டையில் முட்டை அளவுக்கு ஓட்டை போட்டு அட்டையின் மேற்பகுதியில் டார்ச் அடித்தோ (அ) மின் விளக்கினை வைத்தோ பார்க்கும்போது வெளிச்சத்தில் முட்டையின் கரு கறுப்பாகவும், அதிலிருந்து ரத்தக்குழாய்கள் சிவப்புக்கோடுகள் போன்றும் தோன்றும். கரு வளர்ச்சி இல்லாத முட்டைகளில் வெளிச்சம் அப்படியே வெளியேறுவதால் மஞ்சள் நிறமாக இருக்கும். அடை முட்டைகளின் எண்ணிக்கை அந்தந்த கோழிகளின் உடல் எடைக்குத் தகுந்தாற்போல் 10 முதல் 12 முட்டைகள் வரை மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு அதிகமாக இருந்தால் கரு கூடாமல் போய்விடும்.

அடைவைக்க ஏற்ற முட்டைகள்: மிகச்சிறியதும், மிகப்பெரியதுமான முட்டைகள் பொறிப் புக்கு ஏற்றவை அல்ல. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட அளவே நல்லது. அவற்றின் எடை ஏறத்தாழ 55 கிராமிலிருந்து 58 கிராம் இருக்கலாம். கோழிகளில் வெள்ளை முட்டை இடுபவை, லேசான காவிநிற முட்டை இடுபவை என இரு வகைகள் உள்ளன. அடை வைக்கும்போது எல்லா முட்டைகளும் ஒரே நிறமாக இருப்பது நல்லது. காவி நிற முட்டைகளில் மிதமான காவி முட்டைகளும், வெகு காவி முட்டைகளும் பொறிப்புக்கு ஏற்றவை. கோழி லேசாகக் கீறலிட்ட முட்டைகள், லேசாக உடைந்தவை மற்றும் ஓடில்லா முட்டைகள் பொறிப்பதற்கு ஏற்றவையல்ல. முட்டைகளை அளவுக்கு மீறி குலுக்குவதால் முட்டையினுள் காற்றுக்குமிழ்கள் உருவாகி பொறிப்பைப் பாதிக்கும்.
அழுக்கடைந்த முட்டைகள்: அழுக்கடைந்த முட்டைகளை ஏதாவது தட்டையான கருவியால் சுரண்டி சுத்தம் செய்யவும். சுத்தமில்லாத முட்டைகளை அடை வைக்க வேண்டாம். இட்ட முட்டைகளைப் பாதுகாத்து சீக்கிரமே அடை வைக்க வேண்டும். நாள் கடத்த வேண்டாம்.
அடைவைக்க ஏற்ற காலம்: தமிழகத்தில் வருடத்தில் அதிக சூடான மூன்று மாதங்களைத் தவிர்த்து மற்ற எல்லா மாதங்களிலும் அடை வைக்கலாம்.
அடை வைக்க சிறந்த நேரம்: அந்தி சாயும் நேரம், மாலை 7 மணிக்கு மேல் நல்லது. முதல் நாளிலேயே அதிக அளவு நேரம் அடை படுக்க வைப்பது நல்லது. மேற்கண்ட நேரத்தில் வைக்கப்படும் முட்டைகள் 21ம் நாள் மாலை வேளை பொரிப்பதால் இரவு முழுக்க தாயுடன் இருப்பதும், அதிக நேரம் தங்குவதும் குஞ்சுகளுக்கு பலத்தையும் நல்ல உடல் நிலையும் தரும்.
அடை வைக்கும் கூடை அல்லது பெட்டி: 8 அங்குல உயரமும் (ஆழமும்) 15 அங்குல விட்டமும் உள்ள பிரம்பு கூடைகள், மரப் பெட்டிகள், மண்பானைகள் என்பன அடை வைக்க ஏற்றவை. முதலில் மேற்கண்ட பாத்திரங்களில் முக்கால் பங்கு மணலாலும், அடுப்புச் சாம்பலாலும் நிரப்பப்பட வேண்டும். அவைகளுக்கு மேல் மெத்தென்ற வைக்கோல், காய்ந்த இலை, தழைகள், புல் போன்றவை நிரப்பப் பட்டு நன்கு அமுக்கி விடப்பட வேண்டும். இப்போது அகன்ற குழி போன்ற அமைப்பு உருவாகும். பின் பீஎச்சி 10மூ அல்லது எறும்பு மருந்து ஏதாவதொன்று தூவப்பட வேண்டும். அதன்பின் முட்டைகளை முட்டை ஒன்றுக்கும் மற்ற முட்டைக்கும் கால் அங்குலம் இடைவெளி விடப்பட்டு முட்டைகள் வைக்க வேண்டும். அதன்பின் அடை வைக்கவிருக்கும் கோழியின் உடல் சாம்பல் கலந்தசோடியம் புளோரைட், பவுடர் போன்றவற்றால் தூசிக்குளியல் செய்யப்பட்டு முட்டைகளின் மேல் இருத்த வேண்டும். முட்டையின் அகலமான பகுதி மேல் நோக்கியும் கூர்மையான பகுதி கீழ்நோக்கியும் அடுக்க வேண்டும்.

அடைக்கோழிபராமரிப்பு

அடை வைக்குமுன்னர், அடை வைக்கப்படும் கோழிக்கு நல்ல தீவனம், குடிநீர் நிறைவாக அளிக்கப்பட வேண்டும். அடை காக்கவிருக்கும் கோழி ஒழுங்காக அடை காக்குமா என்பதை கண்டறிய நல்ல வழியொன்று உள்ளது. முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு டம்மி முட்டைகளை வைத்து அடைகாக்க வைக்கலாம். கோழி ஒரே நிலையில் தொடர்ந்து இருந்துவிட்டால் கவலை வேண்டாம். டம்மி முட்டைகளை அகற்றிவிட்டு நல்ல முட்டைகளை வைக்கலாம். கோழிக்குத் தினசரி இருமுறை நல்ல குடிநீரும் தானியங்களும் கொடுக்கப்பட வேண்டும். தானியங்களுடன் சுண்ணாம்புக்கல் கொடுக்கப்பட வேண்டும். கொழகொழப்பான ஆகாரம் கொடுக்கக்கூடாது. ஏனெனில் கோழி வயிற்றுப் போக்கால் அவதிப்படும். இது முட்டைகளை அழுக்காக்கிவிடும். அடைகாக்கும் கோழிக்கு ஒரு நாளில் ஒரு முறையாவது வெளியில் வந்து கால்களை, இறக்கைகளை அடித்து ஓடியாட வழி வகுக்க வேண் டும். இது கோழிகளுக்கும் நல்லது, காக்கப்படும் முட்டைகளுக்கும் நல்லது. இந்தப்பயிற்சி தினசரி 20 நிமிடங்கள் தேவை. சில நேரங்களில் கோழிகள் பிடிவாதமாக நகர மறுக்கும். அப்போது கோழியின் அடிவயிற்றில் கையை விட்டுமுட்டைகள் இறக்கைகளுக்கு அடியில் இருக்கிறதா என கவனித்து, இருந்தால் மெதுவாக நீக்கி கோழியை வெளியே விடவேண்டும்
அடைவைத்த முட்டைகள் பராமரிப்பு
முட்டைகள் தினசரி கண்காணிக்கப்பட வேண்டும். அதிக குளிரான நாட்களில் (102 டிகிரி பாரன்ஹீட்) வெந்நீர் தெளிக்கப்பட வேண்டும். பொரிக்க இரண்டு நாட்களுக்கு முன் அடைகாக் கும் பெட்டியினுள்ளும் முட்டைகள் மேலும் சல்பர் பவுடர் மெதுவாகத் தூவிவிட வேண் டும். எலிகளிடமிருந்து முட்டைகள் பாதுகாக் கப்பட வேண்டும்.

குஞ்சுகளின் வளர்ப்பு


வளர்ந்த கோழிகளுக்கு 3 ச.அடி தேவை எனும்போது 10-12 குஞ்சுகளுக்கு குஞ்சுக்கு ஒரு சதுர அடியும், குஞ்சுகளுக்கும் 15 ச.அடி கோழிக்கும் தேவை. அதன்படி 10 குஞ்சு பொரித்த கோழிகளுக்கும் 15 x 10=150 ச.அடி அளவில் தேவை. மேற்படி பரண் அமைப்பு காலையிலிருந்து மாலையும், இரவிலும் உபயோகப்படும் முறையில் அமைத்துக் கொண்டால் சிக்கனத்தைக் கடைபிடிக்கலாம். 10 தாய்க் கோழிகளுடன் 21 நாள் வைத்திருந்து பின் கோழியை தனியே பிரித்து சேவலுடன் சேர்த்து விடலாம். கோழிகள் யாவும் இப்படி பிரிக்கப்பட்டவுடன், குஞ்சுகளின் ஓடுதளத்திலுள்ள தடுப்புகளை எடுத்துவிட்டு எல்லா குஞ்சுகளையும் ஒரே கவனிப்புடன் வளர்க்கலாம். ஏற்கனவே தாயுடன் இருந்த குஞ்சுகளுக்கு இரவில் மட்டும் கதகதப்புக்காக மின்சார பல்புகள் தொங்கவிடலாம். அதுவும் அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே. பின்னர் அதையும் அகற்றிவிடலாம். குஞ்சுகளுக்குப் போடும் தீவனத்தை அதாவது கம்பு, சோளம் போன்றவற்றை உடைத்துப் போடலாம். மற்றவைகளை இரண்டாக உடைத்துப் போடலாம். 3 மாத வளர்ப்புக்கு ஏற்றாற்போல், நோய் வருமுன் காப்பு செய்தல், கோழிப்பேன், வயிற்றுப் பூச்சித் தொல்லைக்கு மாதாமாதம் மருந்து கொடுக்க வேண்டும்.

செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்


குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இது இலகுவானது. கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம் அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து பயன்படும். இவற்றின் மூலம் அதிகமாகக் குஞ்சு பொரிக்க முடியும். கூடுதல் முட்டையும் பொரிக்கலாம். 100லிருந்து 150 முட்டைகள் கூட அடை வைக்கலாம். சில குஞ்சு பொரிப்பகம் விலைக்கு உள்ளது. சில 100 முட்டை கொள்ளளவுள்ள பொரிப்பகம் சுமார் 5000 ரூபாயிலிருந்து விலைக்கு கிடைக்கிறது. தற்போது தானியங்கி முறையிலும் வருகின்றது. கோழிகளில் அடை வைப்பதுபோல், மேற்படி பொரிப்பகமும், வாத்து முட்டை, வான்கோழி முட்டை, பொரிக்க வைக்கலாம்.

கோழிகளைத்தாக்கும் அக ஒட்டுண்ணிகளும் தடுப்பு முறைகளும்



அக ஒட்டுண்ணிகள் வளரும் கோழிகளில் வளர்ச்சி குறைவையும் முட்டையிடும் கோழிகளில் முட்டைகளின் உற்பத்தியையும் வெகுவாக பாதிக்கின்றன. இவை கோழிகளில் அதிக அளவு இறப்பை ஏற்படுத்துவதில்லை. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் இதற்கான முறையான தடுப்பு முறைகளைக் கையாள்வதில்லை. பொதுவாக இவ்வகையான அக ஒட்டுண்ணிகள் கோழிகளின் உணவுப்பாதை மற்றும் சுவாசப்பாதையில் அதிகம் காணப்படுகின்றன. சில சமயம் கோழிகளின் கண்களில் கூட இவைகாணப்படும். கோழிகளில் உருண்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள் மற்றும் தட்டைப்புழுக்கள் என மூன்று வகையான அக ஒட்டுண்ணிகள் காணப்படுகின்றன. கோழிகளில் அக ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த கோழிகளுக்கு கிருமி நீக்க மருந்துகளை தகுந்த இடைவெளியில் அளிக்க வேண்டும். கோழிகளுக்கு முதலாவதாக 7 வார வயதில் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். அதற்கு பின்பு 4 முதல் 6 வார இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
குடற்புழு மருந்துகளை தண்ணீரில் கலந்து அளிக்க வேண்டும். சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் அல்போமார் அல்லது சோமார் மருந்தை 100 கோழிகளுக்கு 15 மில்லி வீதம் மூன்று நாட்கள் அளிக்க வேண்டும். குடற்புழு நீக்கம் கோழிகளில் அழற்சியை ஏற்படுத்துமாகையால் கோழிகளுக்கு அழற்சியைத் தடுக்கும் மருந்துகளை (ஸ்டிரஸ்வெல்) 100 கோழிகளுக்கு 5 மில்லி வீதம் குடற்புழு நீக்கம் செய்வதற்கு முன்பும், பின்பும் அளிக்க வேண்டும். பொதுவாக கோழிப்பண்ணைகளில் குடற்புழு தாக்கத்தைக் குறைக்க பண்ணையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். கோழிக்கொட்டகையில் உள்ள ஆழ்கூளத்தை அடிக்கடி மாற்றிவிட வேண்டும். கோழிகளுக்கு சத்தான விலங்கு புரதங்களை அளிப்பதன் (மீன்தூள்) மூலம் கோழிகளில் ஒட்டுண்ணிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். மேற்கூறிய பராமரிப்பு முறைகளைப் பின்பற்றி கோழிகளில் அக ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தினால் கோழிகளில் சீரான வளர்ச்சி மற்றும் முட்டை உற்பத்தியை உறுதி செய்யலாம் என்பது திண்ணம்

கோடைகால பராமரிப்பு


கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது.
வணிக அளவில் வளர்க்கப் படும் இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது.
கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன.
தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில் குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம்.
தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன.
முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.

குளிர்கால பராமரிப்பு



சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்பு சக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளை வளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும். மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போது காற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமான தாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும்.

கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது, எண்ணிக்கை, எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகி கெட்டியாகிவிடும். மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதன் விளை வாக கோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல், வளர்ச்சி குன்றி, எடையும் குறைந்து காணப் படும். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டு கிளறிவிடுவது நல்லது. முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப் பிறகு 10 செ.மீ. உயரத்திற்கும் கோழி வீட்டில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவை கிளறிவிட வேண்டும்.

100 கோழிகளுக்கு சுமார் 25 லிட்டர் குடிநீர் தேவைப் படும். இளம் கோழிக் குஞ்சு களுக்கு முக்கிய மான எதிரி அசுத்த மான தண்ணீர் ஆகும். இளம் குஞ்சுகளின் ஆரம்பகால இறப்பு நல்ல குடிநீரை உபயோகப் படுத்தாததினால் ஏற்படுகிறது. ஆகவே சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து குடிநீரை எடுக்கிறோமோ அந்த இடத்தில் எந்தவித கலப்படமும் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக சாக்கடை கலப்படம் அல்லது தொழிற்சாலை கழிவு கலக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஆழ்கிணறு நீராக இருந்தால் கொதிக்க வைக்காமல் அப்படியே நன்கு உபயோகிக்கலாம். அதே சமயம் கிணற்று நீராக இருந்தால் அதனை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து கொடுப்பது நல்லது.

தரமான பிளீச்சிங் பவுடரை ஆயிரம் லிட்டருக்கு 4 முதல் 7 கிராம் என்ற அளவில் தண்ணீர் அளிப்பதற்கு 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பு கலந்து அவ்வித நீரை கோழிகளுக்கு அளிக்கலாம். கிணறுகளில் பிளீச்சிங் தூள் போடவேண்டுமென்றால் ஒரு கன அடி நீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். குடிநீரை செம்பு, பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில வைத்திருந்து பின்னர் உபயோகப் படுத்தினால் குடிநீர் குளிர்ந்த நிலையில் இருக்காது.

இளம் வயது குஞ்சுகளுக்கு, சிறிதளவு தண்ணீர் வெதுவெதுப் பான நிலையில் அளிக்க வேண் டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக குளிர் காரணமாக குடிநீர் குளிர்ந்து விடுவதால் அதை மாற்றி வெதுவெதுப்பான குடிநீர் அளித்திட வேண்டும். அதேபோல் காலையில் குடிநீர் மாற்றும் பொழுதும் புதிதாய்க் கொதித்து ஆறிய வெது வெதுப்பான குடிநீரையே அளிக்க வேண்டும். காலையில் சில நேரங்களில் எட்டு மணி வரையிலும் குளிர் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண் டும். இல்லாவிட்டால் குஞ்சுகள் அதிக அளவில் இறக்க நேரிடும்.
இளம் குஞ்சுகளுக்கு கொடுக்கப்படும் செயற்கை வெப்பத்தின் கால அளவை குளிர்காலங்களில் மேலும் இரட்டிப்பாக்கி 2 வாரங்கள் கொடுக்க வேண்டும். அதே போல அடைகாப்பானின் மேல் உள்ள மின்சார பல்பின் வாட் அளவை குஞ்சுகளின் தேவைக் கேற்ப அதிகப்படுத்த வேண்டும். மின்சார பல்பின் உயரத்தையும் குஞ்சுகளின் நிலையை அறிந்து கூட்டவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.
வீட்டின் இரு பக்கங்களிலும் கோணிப்பைகளை திரையாக்கி சாரல் மற்றும் பனி உள்ளே வராமல் இரவு முழுவதும் தொங்க விட வேண்டும். அதிக சக்தி வாய்ந்த மின் விளக்குகளை இரவு முழுவதும் எரியவிட வேண்டும். மேற்கூறிய முறை களை முறை யாக பின்பற்றினால் குளிர்காலத் தில் கோழிப்பண்ணை களில் எவ்வித பாதிப்பும் இல்லா மல் பண்ணையை மேம்படுத் தலாம்
Thanks: TN Vivasayam.

8 கருத்துகள்:

  1. chandrakala1/16/2013

    அருமையான விளக்கம் நண்பரே. நாட்டுக்கோழி வளர்ப்புக்கான சந்தேகங்கள் தீரும் வகையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் .நன்றி .

    பதிலளிநீக்கு
  2. இயற்கை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு , வெள்ளாடு வளர்ப்பு , இயற்கை விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள,
    மற்றும் நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி குஞ்சுகள், வெள்ளாடு விற்பனைக்கு உள்ளது. அணுகவும் ஸ்ரீ காவிய பார்ம்ஸ் – அலை பேசி:8903979039

    பதிலளிநீக்கு
  3. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான விளக்கம் தந்திருக்கிறீர்கள். இந்தத் தகவல்கள் கோழி வளர்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி...

    பதிலளிநீக்கு
  5. நாட்டு கோழி வளர்ப்பிற்கு தேவையான நவீன பஞ்ச காவ்யா கிடைக்கும். இலவச சேம்பிளுக்கு 8526542126

    பதிலளிநீக்கு
  6. நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
    தொடர்புக்கு -9944209238

    பதிலளிநீக்கு
  7. நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
    தொடர்புக்கு -9944209238

    பதிலளிநீக்கு