ஞாயிறு

போத்து முறையில் மரங்களை வேகமாக வளர்க்க முடியும்

 மரங்களை விரைவில் வளர்க்க வகை செய்யும் தொழில் நுட்பம் குறித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உழவர் சந்தை துணை வேளாண் அலுவலர் அய்யப்பன்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே, பாப்பநாயக்கன்பட்டி சொந்த ஊர். திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படித்தேன்.


புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்துார் கிராமத்தில், ஆனந்த ராவ் என்பவர், ஆலமரக் கிளையை வெட்டி, போத்து முறையில் நடவு செய்து, பண்ணையை சோலைவனமாக மாற்றினார். அந்த பகுதியில் பணியாற்றிய போது, ஆனந்த ராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம் தான், போத்து முறை நடவு பற்றி தெரிந்தேன்.


போத்து என்றால், எங்கள் பகுதியில், மரத்தின் கிளை என, பொருள். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை போன்ற மரங்கள், போத்து முறைக்கு ஏற்றவை; உதியன், வாதமடக்கி வேகமாக வளரும் தன்மை கொண்டவை. இந்த முறைக்கு தேர்வு செய்யப்படும் மரங்கள், 10 ஆண்டுகள் வளர்ந்தவையாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், கை மணிக்கட்டு கனத்தில், அதிக வளைவு இல்லாமல், நேராக இருக்க வேண்டும். அது, ௮ - ௧௦ அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் கொப்புகளை வெட்டி அகற்றி விட வேண்டும். மரத்திலிருந்து நடவுக்காக வெட்டும் கிளையை, கரும்பு வெட்டுவது போல, சரிவாக வெட்ட வேண்டும்.


இன்று நடப் போகிறோம் என்றால், முந்தைய நாளில் கிளைகளை வெட்ட வேண்டும். நடவுக்கு தாமதமானால், கிளையின் அடிப்பகுதியில் ஈரத்துணி சுற்றி, நிழலில் வைக்கலாம். முன்னதாக, ௪ அடி ஆழம், ௪ அடி சுற்றளவுக்கு குழி தோண்ட வேண்டும். அந்த குழியை, ஒரு வாரம், அப்படியே விட வேண்டும். நடவிற்கு முந்தைய நாள் மாலை, ஒரு குடம் தண்ணீரை அந்த குழியில் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில், ௫ கிலோ மக்கிய தொழு உரத்துடன், மேல் மண்ணை கலந்து, குழிக்குள், ௧.௫ அடி உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அந்த குழிக்குள், மரக்கிளை நட்டு, சுற்றிலும் நன்றாக மண் மிதித்து, மண்ணை குவியல் போல வைக்க வேண்டும்.


இல்லாவிட்டால், காற்றின் சலனம், நீர் சலனத்தால், வேர் பிடித்தல் தாமதாகும். கிளையின் உச்சிப் பகுதியில், பசுஞ்சாணத்தை உருண்டை போல பிடித்து வைக்க வேண்டும். அடுத்த, ௪௫ - ௫௦ நாட்களில் இலைகள் துளிர் விடும். வெப்பம் குறைந்த, ஆடி துவங்கி, மார்கழி வரை, இந்த முறையில் மரங்களை நடவு செய்யலாம். இதனால், மரமாக வளரும் காலம் குறைந்து, விரைவில் பலன் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பின், கிராமங்களுக்கு சென்று, போத்து தொழில் நுட்பத்தில் நிறைய மரங்கள் வளர்க்க உள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக