பப்பாளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தொடக்கத்திலேயே கண்டறிந்து முறையாக கட்டுப்படுத்தி, உரிய மகசூல் பெறலாம்.
விட்டமின் சத்துகள் நிறைந்தும், மலிவு விலையில் கிடைக்கும் பழம் என்பதாலும் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றதாக பப்பாளி உள்ளது. ஆண்டுக்கு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் அளவில் பப்பாளி மகசூல் கிடைக்கிறது.
நோய் அறிகுறிகள்
பப்பாளியில் மாவுப்பூச்சிகள் இலை மற்றும் காய்களில் தாக்குகிறது. இப்பூச்சிகள் தாக்கப்பட்ட இடங்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும். மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும்.
அதன் மேல், சிவப்பு மற்றும் கறுப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம், இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் கேப்னோடியம் என்றழைக்கப்படும் கருநிற பூசணம் படர்ந்திருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
- மாவுப்பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளைத் தனியாக எடுத்து அழித்து வயல்களைச் சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும் போதே தேவையான பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
- ஒரு லிட்டர் தண்ணீரில், 5 மில்லி லிட்டர் வேப்பங்கொட்டைச்சாறு (ஏக்கருக்கு 10 கிலோ) என்ற அளவில் தண்ணீரில் கரைத்து, அந்த கலவையைப் பாதிக்கப்பட்ட இலை மற்றும் காய்ப் பகுதிகளில் தெளிக்க வேண்டும்.
- அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து, அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல், தயோமீத்தாக்சாம் என்ற மருந்தை 2 கிராம் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
- குளவி ஒட்டுண்ணியான அசிரோபேகஸ் பப்பாயினை வயலில் விட்டு (ஏக்கருக்கு 50 எண்கள்) கட்டுப்படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளைக் கையாண்டால், பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.
நல்ல பதிவு
பதிலளிநீக்கு