சனி

லாபம் கொடுக்கும் நாட்டு மாடுகள்...

 நாட்டு மாடுகளை வளர்த்து லாபம் ஈட்டி வரும் பலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையைச் சேர்ந்த அகமது.

‘‘தீவனத்துக்காகவும் பராமரிப்புக்காகவும் அதிக தொகை செலவிட்டு அதிக பால் கறந்து சம்பாதிப்பதை விட, நாட்டு மாடுகளை வளர்த்து குறைவான செலவில் நிறைவாக சம்பாதிப்பதுதான் புத்திசாலித்தனம். அத்துடன், நம்ம பாரம்பர்ய மாடுகளையும் அழியாம காப்பாத்த முடியும்’’ என்று சொல்லும் அகமதுவின் பால் பண்ணை, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகே உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் உள்ளது


நான், ஒரு நாள் பண்ணைக்கு வந்தப்போ, அங்க இருந்த ஆடு, மாடுகளோட எண்ணிக்கையை கணக்குப் போட்டேன். வாங்கின எண்ணிக்கையும் அப்போ இருந்த எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அபரிமிதமான அளவுக்கு ஆடு, மாடு, கோழிகள்னு பெருகியிருந்தது. எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. அப்பதான், கால்நடை வளர்ப்புல முறையா ஈடுபட்டா நல்ல லாபம் கிடைக்கும்னு புரிஞ்சது. அதுக்குப் பிறகு நிறைய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். வெளிநாடு, வெளி மாநில விவசாயிகள்கிட்டயும் பேசி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். அப்போ, கலப்பின மாடுகளை விட நாட்டு மாடுகள்தான் பல விதத்துலயும் நல்லதுனு புரிஞ்சுக்கிட்டு... நாட்டு மாடுகளைத்தான் வளர்க்கணும்னு முடிவு செய்தேன். நம்ம ஊர்ல இருக்கிற நாட்டு மாடுகள் அதிகளவு பால் கொடுக்காது. அதனால, வடமாநிலங்கள்ல இருந்து, காங்கிரேஜ், தார்பார்க்கர், சாஹிவால், கிர், சிவப்பு சிந்தி, ராட்டினு ஆறு ரகங்கள்ல 30 மாடுகளை வாங்கிட்டு வந்து... 2011-ம் வருஷம் பண்ணையை ஆரம்பிச்சேன். அப்பறம் கொஞ்ச கொஞ்சமா மாடுகளை வாங்கினது, இங்க கிடைச்ச குட்டிகள்னு... இப்போ, மொத்தம் 160 மாடுகள் இருக்கு இதுல கன்னுகளும் அடக்கம்என்ற அகமது, பண்ணையில் இருக்கும் மாடுகளை ரக வாரியாக நமக்கு அடையாளம் காட்டினார்.

மாடுகளுக்காக மொத்தம் 35 ஏக்கர்ல கோ-4, அகத்தி கீரை, முயல்மசால், சுபாபுல்னு தீவனம் இருக்கு. வழக்கமா, கோ-4 தீவனத்தை சாகுபடி செய்யும் போது, 2 அடிக்கு 2 அடி இடை வெளியில் சாகுபடி செய்வாங்க. ஆனா, இங்க 50 சென்டி மீட்டருக்கு 50 சென்டி மீட்டர் இடைவெளியில நடவு செய்திருக்கோம். ஒவ்வொரு பாத்தியையும் தனித்தனியாக அடையாளப் படுத்தியிருக்கோம். அதனால, புல்கரணை இழப்பு, வளர்ச்சிக் குறைவு...னு பிரச்னை வந்தா, எந்தப் பாத்தினு பார்த்து உடனே சரி செய்ய முடியுது. அதனால, தீவன உற்பத்தி குறையவே குறையாது

கோமாரியிலும் தாக்குப் பிடித்த நாட்டு மாடுகள்!

காலை, சாயங்காலம் ரெண்டு வேளையும் பசுந்தீவனம், வைக்கோல், அடர்தீவனம்னு கொடுப்போம். தினமும் 3 மணி நேரம் மேய்ச்சலுக்கும் விடுறோம். அதனால, மாடுகள் நல்லா நோயில்லாம வளருது. நாட்டு மாடுகளுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமா இருக்கு. போன வருஷம் இந்தப் பகுதியில கோமாரி நோய் பரவி, பல மாடுகள் இறந்தப்பவும், எங்க நாட்டு மாடுகளுக்கு பெரியளவுல பாதிப்பில்லைஎன்ற அகமது, நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

மாதம் 12,500 லிட்டர் பால்!

“160 மாடுகள்ல 50 கன்றுக்குட்டிகள். 50 மாடுகள் பருவத்துல இருக்கு. எப்பவும் 60 மாடுகள் வரை கறவையில இருக்கும். ஒரு மாடு 8 லிட்டர் பால்ல இருந்து, 13 லிட்டர் வரை பால் கொடுக்குது. தினம் சராசரியா 400 லிட்டர் பால் கிடைக்குது. மாதம் 12 ஆயிரம் லிட்டர் பால். அதை வியாபாரிகள் மூலமாகவும், நேரடியாகவும் விற்பனை செய்றோம். ஒரு லிட்டர் பால் 70 ரூபாய்னு விற்பனையாகுது. இதன் மூலம் மாதம், 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில், தீவனம், பராமரிப்புச் செலவுகள் போக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை லாபமா கிடைக்கும். வருஷத்துக்குனு கணக்கு பார்த்தா 42 லட்ச ரூபாய் லாபம்.

கிடா கன்னுகளை 2 வருஷம் வளர்த்து விற்பனை செய்றப்போ, ஒரு மாடு 30 ஆயிரம் ரூபாய்னு விலை போகும். அந்த வகையில வருஷத்துக்கு 20 மாடுகளை விற்பனை செய்றோம். அதுல 6 லட்ச ரூபாய் வருமானம் வருது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவுகளைக் கழித்தால், வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் லாபம். மொத்தமா பார்த்தா மாடுகள் மூலமா, வருஷத்துக்கு இப்போதைக்கு 45 லட்ச ரூபாய் லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு


பால்பண்ணையை வெற்றிகரமாக நடத்த அகமது சொல்லும் ஆலோசனைகள் இங்கே...

அதிகமான எண்ணிக்கையில் மாடுகள் வைத்திருப்பவர்கள், மாடுகளைக் கட்டி வைக்காமல் மேய்ச்சலில் விட்டு வளர்த்தால், மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். பசுந்தீவனங்களை மாடுகளுக்கு நேரடியாகக் கொடுக்காமல், வலையில் கட்டி தொங்க விட்டால், மாடுகள் நாக்கால் இழுத்து உண்ணும். இதன் மூலம் தீவன சேதாரத்தை வெகுவாகக் குறைக்கலாம். தினமும் கறவை மாடுகள் மீது தண்ணீர் தெளித்து பிரஷ் மூலம் தேய்த்து சுத்தப்படுத்திய பிறகு தண்ணீர் விட்டு கழுவும்போது, குளிக்க வைக்கும் தண்ணீர் அதிகளவில் மிச்சமாகும்.


கோ-4 தீவனத்துக்கு இடையில் ஊடுபயிராக உளுந்து பயிரிட்டால் களை பிரச்னை இருக்காது. ஒரு மாட்டுக்கு 40 முதல் 50 சதுர அடியில் கொட்டகையும், 250 சதுர அடி உலாவுவதற்கான இடமும் கொடுத்து, சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டும். மாடுகளுக்குத் தேவையான போது மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்தினால், எதிர்ப்புச் சக்தி அதிகமாவதுடன், செலவும் குறைவாக இருக்கும்”.

1 கருத்து: