ஞாயிறு

சணல் பைகள் தயாரிப்பு

 பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை, சணல் பைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. துணிப்பைகள் அளவுக்கு விலை அதிகமாக இல்லாமலும் அதே அளவுக்கு உழைக்கும் தன்மையோடும் இருப்பது சணல் பைகளின் ப்ளஸ் பாயின்ட்! இத்தனை வரவேற்பு இருக்கும்போது அந்தத் தொழிலில் இறங்கிவிடுவது நல்ல முடிவாகத்தானே இருக்கமுடியும்.

இதற்கு முதலீடு என்று பார்த்தால் பெரிய அளவில் ஏதுமில்லை. ஐந்தாயிரம் ரூபாய்க்கு தையல் இயந்திரமும், பத்துக்கு பத்து இடமும் இருந்தால் போதும். மற்றபடி பைகள் தயாரிப்பதற்கான நூல், கைப்பிடி போன்றவை பெரிதாக செலவு வைக்கக்கூடிய விஷயங்கள் இல்லை.

இந்த சணல் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான சணல் ஷீட்கள் பல சைஸ்களில் கிடைக்கின்றன. இந்த ஷீட்கள் தயாராவது மேற்கு வங்காளத்தில்தான் என்றாலும் இதன் டீலர்கள் தமிழ்நாடு அளவில் பரவலாக இருக்கிறார்கள். ஒரு மீட்டர் ஷீட் 50 ரூபாய் முதல் 120 ரூபாய்வரை தரத்துக்கு ஏற்ப கிடைக்கிறது. 200 மீட்டர் அளவுள்ள ரோலாக மொத்தமாக வாங்கும்போது விலை கொஞ்சம் குறைவாகவே கிடைக்கிறது. பல நிறங்களிலும் கிடைக்கும் இந்த சணல் ஷீட்களை டீலர்களிடம் பேசி வாங்கிக்கொண்டால் பை தயாரிக்கத் தொடங்கிவிடலாம்.

சாதாரண பைகள் என்பதைத் தாண்டி இப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் சணல் பைகள் உபயோகிப்பது ஃபேஷனாகவே இருக்கிறது. அவர்களது ரசனைக்கு ஏற்றபடி பல மாடல்களில் பைகளைத் தயாரிப்பது லாபத்துக்கு வழி வகுக்கும். செல்போன் கவரில் இருந்து விசிட்டிங் கார்ட் வரை சணல் தயாரிப்புகளில் சாத்தியமாக இருக்கிறது. இதனால் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.

ஒரு பை தைப்பதற்கு நூல், கைப்பிடி, சணல் ஷீட் போன்றவற்றின் விலை மற்றும் தைப்பவரின் சம்பளம் என்று எல்லாவற்றையும் கணக்கிட்டால் அதிகபட்சம் பதினைந்து ரூபாய் ஆகும். இந்த பை சாதாரணமாக 50 முதல்75 ரூபாய்க்கு விலைபோகிறது. இதிலேயே ஏதாவது டிஸைன்கள், மாடல்கள் போன்றவற்றை உருவாக்கினால் அதற்கேற்ப விலையை ஏற்றிக் கொள்ளலாம்.

ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 பைகளைத் தயாரிக்கலாம். டிஸைன் கொண்டவை என்றால் ஒரு நாளைக்கு 20 முதல் 30 பைகள் வரை தயாரிக்கமுடியும். இந்தப் பைகளில் ஸ்கிரீன் பிரின்ட் செய்துகொடுத்து இன்னும் அதிக வருமானம் பார்க்கமுடியும். மாதத்துக்கு பத்தாயிரம் ரூபாய் வருமானம் என்பது சர்வ நிச்சயமான ஒன்றாக இருக்கும் தொழில் இது!

இப்போது விற்பனையாகும் மாடல்கள் என்றால் ஷாப்பிங் பைகள், வாட்டர் பாட்டில் வைக்கும் பைகள், ஃபேன்ஸி பைகள், தோல் பை மாடல்கள், செல்போன் வைக்கும் பைகள்,  விசிட்டிங் கார்ட்கள், கோட் போன்றவை. 20 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை சணல் பொருட்கள் விற்பனையாகின்றன.

தயாரிப்பெல்லாம் சரிதான். இதை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்று தோன்றலாம்.

இப்போது எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் துணிக் கடைகளிலுமே சணல் பைகளுக்குத் தனியான தேவை இருக்கிறது. அவர்களுடைய பொருட்களை வைத்துக் கொடுப்பதற்கு பிளாஸ்டிக் பைகளைப் போலவே சணல் பைகளையும் விரும்பி வாங்குகிறார்கள். உங்கள் ஏரியாவில் உள்ள துணிக்கடைகளிலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் பேசி ஆர்டர் பிடிக்கலாம்.

அதேபோல், திருமணம் போன்ற விழாக்களில் தாம்பூலப் பைகள் கொடுப்பதற்கு இப்போது சணல் பைகளையே அதிகம் நாடுகிறார்கள். அதுபோன்ற திருமணம் நடத்தித் தரும் கான்ட்ராக்டர்களைப் பிடித்தால் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். அதோடு, ஃபேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், கைவினைப்பொருட்கள் விற்பனைக் கூடங்களிலும் போய் பேசி, அங்கு உங்கள் பைகளை டிஸ்ப்ளே செய்ய வைத்து பிஸினஸைப் பெருக்கலாம்.

லீவு முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது, பள்ளிகளுக்குச் சென்று மொத்தமாக ஸ்கூல் பைகளுக்கு ஆர்டர் பிடிக்கலாம். மேலும், கம்பெனிகளை அணுகி அவர்களது விழாக்களுக்கு ஃபைல்கள், பைகள் போன்றவற்றைத் தயாரித்து தரலாம். விழாக்கள் நடக்கும் போது அங்கு ஸ்டால் போட்டும் விற்பனையைப் பெருக்கலாம். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வியாபார வாய்ப்புகள் நிறைந்து கிடக்கும் தொழில் இது.

சணல் களத்தில் இறங்குங்க... சல்லுனு காசை அள்ளுங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக