இந்தக் கேள்வியை சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள். உறுதியாக லாபமே தராத தொழில் என்று ஏதேனும் இருக்கிறதா… என்ன?
ஒருவேளை, அப்படி ஒன்று இருந்தால் அதனை யாராவது தொடங்குவார்களா?
ரோட்டோர இட்லிக் கடை தொடங்கி, விமானத்தில் பறக்க டிக்கெட் விற்பது வரை எல்லாத் தொழில்களிலுமே லாபம் ஈட்டியோர் ஏராளம். அதுபோல் அனைத்துத் தொழில்களிலும் நட்டம் அடைந்தோரும் ஏராளம்.
லாபம் தரும் தொழில், நட்டம் தரும் தொழில் என்ற வேறுபாடு தொழிலில் கிடையாது. சில நேரங்களில் பழைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது அல்லது பழைய பாணியில் தொழிலை நடத்தும் போது உறுதியாக நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு. சான்றுக்கு கேசட் பிளேயர், பேஜர் போன்ற காலாவதியான தொழில்நுட்பம் கொண்ட பொருட்களை தற்போது விற்பது என்பது மூடத்தனம். இதை நம்மில் யாரும் மேற்கொள்ளப் போவதும் இல்லை.
இதே கேள்வியை நாம் இப்படி மாற்றி யோசித்துப் பார்க்கலாம்… வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொழில்கள்; வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொழில்கள் என்று பார்த்தால் அதற்கென ஒரு பட்டியலே உண்டு.
வருமானம் மிகக் குறைவாக இருக்கக்கூடிய விமானப் பயணச் சீட்டு புக்கிங், பங்கு வர்த்தக புரோக்கிங் மற்றும் வினியோகத் துறை போன்றவற்றில் தற்போது போட்டி காரணமாக லாபம் குறைந்து வருகிறது.
இந்தத் தொழில்களில் நாம் 10 வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்தாலோ அல்லது பொருட்களை விற்றாலோ அதில் ஒரே ஒரு வாடிக்கையாளர் நமக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டால் மீதமுள்ள ஒன்பது பேரிடமும் சம்பாதித்த வருமானத்தை இழக்கக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
எனவே, இது போன்ற துறைகளில் காலடி வைக்கும்போது, சற்று கூடுதல் கவனம் தேவை. மாறாக, ரியல் எஸ்டேட், தங்கநகை விற்பனை போன்ற துறைகளில், தொடர்ந்து பொருட்களின் விலை ஏறுமுகமாகவே இருப்பதால் இவற்றில் ஈடுபடுவதற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் சில வெற்றி வாய்ப்புகள் உள்ள தொழில் மாதிரிகள் இதோ…
விற்பனைக்கு உத்தரவாதம் தரக்கூடிய தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கிக்கொள்ள எந்த நிறுவனமேனும் உத்தரவாதம் தரும்மேயானால் அந்தத் தொழிலில் நம்பி இறங்கலாம்.
மாறாக வேறு சில நிறுவனங்கள் தம்மால் தயாரிக்க முடியாத பொருட்களைத் தயாரிப்பதற்கு வெளியில் அவுட் சோர்ஸ் செய்யக்கூடும். அது போன்ற தொழில்களிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
சான்றிற்கு இந்தியாவின் முன்னணி செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தம்முடைய தொழிற்சாலைகளை மூடி விட்டு, செருப்புகள் உற்பத்தி செய்யும் பணியை வேறு சில நிறுவனங்களிடம் அவுட் சோர்ஸ் செய்யத் தொடங்கி விட்டது.
இது போன்ற பணிகளை மேற்கொள்கின்றபோது பொருளை சந்தைப்படுத்தும் சிரமம் தொழில்முனைவோருக்கு கிடையாது.
தமிழகத்தில் மிகப்பெரிய கிரைண்டர் விற்பனை நிறுவனம், முன்னணி பிஸ்கட் நிறுவனம் போன்றவை கூட தமது தொழிற்சாலைகளை மூடிவிட்டு உற்பத்திப் பொறுப்பை வெளியில்தான் கொடுக்கின்றன. இது போன்ற தொழில்களில் லாப விகிதம் மிகவும் குறைவு என்பதையும் தொழில் முனைவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, ரவை, எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்தால் அவற்றிற்கு வெற்றி வாய்ப்புக்கான விகிதம் அதிகம். ஏனெனில் இந்தப் பொருட்களுக்கான வாடிக்கையாளர்களைத் தேடி நாம் வெகு தூரம் அலைய வேண்டியதில்லை.
மேலும் இவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்பதால் உடனடியாக விற்காவிட்டாலும் இழப்புக்கான வாய்ப்புக்கள் குறைவே!
இதுபோன்ற வெற்றி வாய்ப்புகள் மிகுந்த தொழில்களில் போட்டிகளும் அதிகம்; லாபமும் குறைவாகத்தான் இருக்கும்.
செய்து கொண்டிருக்கும் தொழிலில் 50 முதல் 60 விழுக்காடுப் பணத்தை கச்சாப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கே சிலர் செலவழிக்கக் கூடும். எனவே, அந்தக் கச்சாப் பொருளையே நீங்கள் தயாரிக்கத் தொடங்கினால், உறுதியாக 50 முதல் 60 விழுக்காட்டு பணம், வருமானமாகக் கிடைக்கும்.
சான்றிற்கு, உணவகம் வைத்திருக்கிற விவசாயி காய்கறிகளையும், கீரைகளையும் தாமே விளைவித்தால் உறுதியாக அவருக்கு அது லாபம் தரக்கூடியதாக இருக்கும். வாடிக்கையாளருக்கும் சுவையான, சத்தான உணவு கிடைக்கும்.
சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்காக தனியாக உணவகம், சிகை அலங்கார நிலையம் போன்றவற்றை சொந்தமாக நடத்தி வருகிறது. நாளிதழ் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் தினத்தந்தி நாளிதழ், தாமே சொந்தமாக சன் பேப்பர் மில் என்கிற காகித ஆலையை நடத்தி வருகிறது.
இதுபோல நீங்களும் எந்தக் கச்சாப் பொருளைக் கொள்முதல் செய்ய அதிகம் செலவழிக்கிறீர்களோ அந்தக் கச்சாப் பொருளையே உற்பத்தி செய்ய முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கலாம்.
இது இன்னொரு கோணத்திலும் பயன்தரும். ஒருவர் புதிதாக பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். அந்தப் பத்திரிகையை அச்சடிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க, அவரே புதிய அச்சகம் ஒன்றையும் தொடங்கினார். நாட்கள் செல்லச் செல்ல பத்திரிக்கை விற்பனையின்றி நலிவடைந்தது. ஆனால் அச்சகத்திற்கு ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கின.
கோவை மாநகரில் ஒரு தொழில்முனைவர் பேக்கரி கடையைத் தொடங்கினார். கடையில் இன்னும் கொஞ்சம் இடம் காலியாக இருந்ததால் தேநீர் கடையையும் உடன்தொடங்கினார். பேக்கரி விற்பனை அவ்வப்போது மந்தமாக இருந்தாலும் கூட தேநீர் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி சொந்த கட்டிடத்தைக் கட்டி அதன் ஒரு பகுதியில் சாஃப்ட்வேர் வடிவமைப்பு பணியைத் தொடங்கியது. மற்றொரு பகுதியை வாடகைக்கு விட்டது. சில ஆண்டுகள் கழிந்த நிலையில் சாஃப்ட்வேர் கம்பெனி நலிவடைந்தது. ஆனால் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரித்தமையால் கட்டடத்தின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது. வாடகை வருமானமும் அதிகரித்தது.
தொடர்ந்து உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட்டின் மதிப்பை மனதில் கொண்டு தான் இன்ஃபோசிஸ், விப்ரோ, சின்டெல், காக்னிசன்ட், டி.சி.எஸ், விரிச்சுசுவா, உள்ளிட்ட பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிலத்தை விலைக்கு வாங்கி கட்டிடம் கட்டி சொந்த இடத்தில் தங்களுடைய தொழிலை மேற்கொள்கின்றனர்.
தொழிலின் மூலம் லாபம் கிடைப்பது ஒருபுறம் இருக்க ரியல் எஸ்டேட் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருவதால் நிறுவனத்திற்கு இரட்டை லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுபோன்று, முதலீட்டை இரண்டு கூறுகளாகப் பிரித்து முதலீடு செய்தால் சில நேரங்களில் ஒன்று தோல்வியைத் தழுவினாலும், மற்றொன்று கை தூக்கி விடக்கூடும். சில நேரங்களில், இரண்டின் மூலமும் லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
Thanks இராம்குமார்