நோயறிகுறிகள்
அலைக்கழிக்கும் மனக்கோளாறின் இயல்புகள் வருமாறு:
1. அதிகமான கவலை அல்லது அச்சத்தை உருவாக்கும் வலிமையான எண்ணங்களும் படிமங்களும் (மனக்கோளாறு).
2. மனக்கலக்கத்தைத் தணிக்க அல்லது சமன்செய்யும் நோக்கத்தோடு தொடர்ந்து செய்யப்படும் சடங்குகள் அல்லது நடத்தைகள் அல்லது மனச்செயல்கள் (அலைக்கழிப்பு)
தனியாகவோ அல்லது இணைந்தோ நிகழ்வன. உதாரணமாக, ஒருவர் தனது கைகள் அழுக்காக இருப்பதாகத் தொடர்ந்து எண்ணினால் (மனக்கோளாறு) அந்த மனக்கலக்கத்தைத் தணிக்க அவர் தம் கையை அடிக்கடி கழுவுவார் (அலைக்கழிப்பு).
அலைக்கழிக்கும் மனக்கோளாறு உடையவர் கடுமையான மனக்கலக்கத்தோடு கீழ்க்கண்டவைகளிலும் ஈடுபடுவார்:
- அதிகமாகக் கழுவுதலும் சுத்தம் செய்தலும், திரும்பத் திரும்பச் சோதனை செய்தல், பொருட்களைப் மிகையாகப் பதுக்குதல்
- குறிப்பிட்ட எண்களைத் தவிர்த்தல் (உ-ம்: இரட்டைப்படை அல்லது ஒற்றைப்படை) அல்லது சில எண்களைக் குறித்த அலைக்கழிப்பு.
- கதவை சில குறிப்பிட்ட தடவைகள் திறந்து பூட்டுவது அல்லது வேறு சில நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட முறைகள் செய்வது போன்ற சடங்காச்சாரமான செயல்பாடுகள்.
- அலைக்கழிக்கும் மனக்கோளாறுகள் கொண்ட ஒருவருக்கு, அவர் சிந்திக்க விரும்பாத போதும் கூட தொடர் பாலியல், வன்முறை அல்லது மத எண்ணங்கள் தோன்றி அலைக்கழிக்கும்.
இந்த அறிகுறிகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்று பெரும்பாலும் துன்பப்படுபவர்கள் அறிந்து கொள்வார்கள். அவற்றைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமால் மேலும் துயரத்துக்கு உள்ளாவார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டது போல் உணர்வார்கள். இவ்வறிகுறிகள் அவர்களது நேரத்தில் பெரும்பான்மையை ஆக்கிரமிக்கும். இதனால் உணர்வுபூர்வ, சமூக, நிதிசார்ந்த மற்றும் பிற சிக்கல்கள் உருவாகும்.
அலைக்கழிக்கும் மனக்கோளாறை உறுதியாகக் கண்டறிய வேண்டுமானால் இவ்வறிகுறிகள் நிலையாகத் தொடர்ந்து வருபவையாகவும், ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருப்பவையாகவும் இருக்க வேண்டும். வேறு மருத்துவக் கோளாறுகளின் வெளிப்பாடுகளாகவோ (இரண்டாம் நிலை), போதைப்பொருளின் விளைவாகவோ இருக்கக் கூடாது.
உடல்வடிவ அதிருப்திக் கோளாறு (Body Dysmorphic Disorder): இக் கோளாறால் துன்பப் படுபவர்கள், உடல் வடிவிலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறுப்பின் வடிவத்திலும் தாங்களாகவே ஒரு குறையை எண்ணிக்கொள்வார்கள் அல்லது கற்பனை செய்து கொள்வார்கள். உடல் தோற்றத்தில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும் குறைகளால் ஏற்படும் மனக்கவலையை மறைக்க தொடர் உடல் மற்றும் மன நடவடிக்கைகளில் ஈடுபடுவர். எடுத்துக்காட்டாக, பிறருக்கு அத்தகைய குறை தென்படாவிட்டாலும் ஒருவர் தனது மூக்கு ஒரு புறமாக சாய்ந்திருப்பதாக நம்புவது.
மறைப்பெண்ணக் கோளாறு (Hoarding disorder) : பொருளின் மதிப்பும் பயன்பாடும் எவ்வாறு இருந்தாலும் இக்கோளாறு உடையவர்களுக்குப் பொருட்களைப் பிரிவது என்பது மிகவும் கடுமையான ஒன்றாகும். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணர்வியல், உடலியல், சமூகவியல், பொருளியல் ஏன், சட்டவியல் பிரச்சினைகள் கூட விளையலாம். சிலருடைய குறிப்பான சில பொருட்களைச் சேகரிக்கும் பொழுதுபோக்கில் இருந்து இது வேறுபட்டது. இக் கோளாறு உடையவர்கள் ஏராளமான பொருட்களை சேகரித்து, வீட்டிலும் பணி இடத்திலும் செயலாற்றும் முக்கிய இடங்களை நிறைத்து விடுவார்கள். அவ்விடம் எதற்காக இருக்கிறதோ அதற்காக அதைப் பயன்படுத்த முடியாமல் போகும்.
முடி பிடுங்கும் கோளாறு (Trichotillomania or Hair pulling disorder): இக் கோளாறு உடையவர்களுக்குத் தங்கள் முடியையே பிடுங்கி எடுக்கும் உணர்வு தோன்றும். அவ்வுணர்வை அடக்கும் போது மனக்கலக்கம் ஏற்படும். முடியைப் பிடுங்கும் போது மனக்கலக்கம் குறையும். இதனால் படிப்படியாகத் தலையில் உள்ள முடி காணத்தக்க அளவுக்குக் குறையலாம். சில வேளைகளில் அவர் முடியைப் பிடுங்கி உண்ணலாம். தகுந்த காரணம் இன்றி முடி குறைதலோ வயிற்று வலியோ உண்டாகும் போதே இவர்களுக்கு இந்நோய் இருப்பது மருத்துவ ரீதியாகக் கண்டறியப்படும்.
தோல் உரிக்கும் கோளாறு (Excoriation (Skin-Picking) Disorder) : தொடர்ந்து அடிக்கடி தோலை உரிப்பதே இக் கோளாறின் இயல்பு. இதனால் தோல் புண்கள் உண்டாகும். இப்பழக்கத்தை நிறுத்த பல முறை முயன்றாலும் இக்கோளாறு கொண்டவரால் இதை நிறுத்த முடியாது. இதன் விளைவாகப் பெரும்பாலும் தொற்று, வடு, மற்றும் உருச்சிதைவு ஆகிய மருத்துவச் சிக்கல்கள் ஏற்படலாம்.
காரணங்கள்
அலைக்கழிக்கும் மனக்கோளாறும் அதனோடு தொடர்புடைய பிற கோளாறுகளும் சிக்கலான பல காரணிகளைக் கொண்ட உயிர்-உளவியல்-சமூகக் காரணங்களின் விளைவாகும். அவை இதய நோய்கள் அல்லது நீரிழிவு சர்க்கரை நோய் வகை-1 போன்ற கூட்டுக் கோளாறுகள் ஆகும். மரபியல், உயிரியல், உளவியல், சமூகவியல், வளர்ச்சிக் காரணிகளின் சிக்கலான இடைவினையின் விளைவாக ஏற்படுகின்றன என்று அண்மைக்கால ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. ஆகவே, ஒருவருக்கு அலைக்கழிக்கும் மனக்கோளாறும் தொடர்புடைய பிற கோளாறுகளும் பின் வரும் காரணிகளின் சேர்க்கையால் ஏற்படலாம்:
- செரோட்டோனின் (Serotonin), நார்-எப்பிநெஃப்ரைன் (Nor-epinephrine), காபா (GABA) போன்ற மூளையில் உள்ள நரம்புக்கடத்திகளான வேதிப்பொருட்களின் சமநிலை குறைதல்
- உணர்ச்சி அல்லது மனநிலையை முறைப்படுத்துதல் அல்லது அச்ச எதிர்வினையை உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளுக்குக் காரணமான மூளையின் சில பகுதிகளில் கூடுதல் அல்லது குறை செயல்பாடுகள் நிகழ்தல்.
- மரபியல் காரணிகளின் தொடர்பு இருப்பதால் அலைக்கழிக்கும் மனநோயாளிகளின் உறவினர்களுக்கு அலைக்கழிக்கும் மனநோய் அல்லது தொடர்புடைய கோளாறுகள் அல்லது அலைக்கழிக்கும் மனக்கோளாறு அம்சங்கள் ஏற்படும் அபாயம் 3-5 மடங்கு அதிகரிக்கிறது.
- குழு ஏ பீட்டா ஹீமோலிட்டிக் ஸ்ட்ரெப்ட்டோகாக்கி கிருமியால் சிறு வயதில் ஏற்படும் தொற்றின் பங்கு இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.
- அலைக்கழிக்கும் மனநோய் மற்றும் தொடர்புடைய கோளாறுகளின் அறிகுறிகளை அழுத்தம் நிறைந்த சூழல்கள் பொதுவாக உருவாக்குகின்றன அல்லது கூட்டுகின்றன.
- உளவியல் பகுப்பாய்வுக் கொள்கை, அலைக்கழிக்கும் மனக்கோளாறும் தொடர்புடைய பிற கோளாறுகளும், பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களின், குறிப்பாகக் குத உளப்பாலியல் வளர்ச்சிக் கட்டத்தின், கூட்டுத் தன்னுணர்வற்ற உளவியல் முரண்பாடுகளோடு தொடர்புடையதாகப் பார்க்கிறது. ஆனால் நடத்தைவியல் கொள்கைகளோ, மனக்கோளாறை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தூண்டுதல் என்றும், அவற்றால் தூண்டப்பட்ட மனக்கலக்கத்தைக் குறைக்க உருவாக்கப்படும் கற்றல் சார் நடத்தைகளே அலைக்கழிப்புகள் என்றும் கருதுகிறது.
நோய்கண்டறிதல்
அலைக்கழிக்கும் மனக்கோளாறும் தொடர்புடைய கோளாறுகளும் கீழ்வருமாறு கண்டறியப்படலாம்
1. அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகளும் போன்றே அறிகுறிகளைக் காட்டும் வேறு மருத்துவ நிலைமைகளையும் போதை மருந்தின் விளைவுகளையும் முதலில் இல்லை என உறுதிப்படுத்துதல்.
2. மருத்துவ ரீதியான அறிகுறிகள், விவரமான நோய்வரலாறு, மனநிலைச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் உளவியல் மதிப்பீட்டாய்வு.
நோய்மேலாண்மை
அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகள் சிகிச்சை அளிக்கக் கூடியவையே. பெரும்பான்மையான நோயாளிகள் தகுந்த, முறையான சிகிச்சைக்குப் பின் நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
நோய்க்கடுமை மற்றும் நோயாளியின் விவரங்கள் (உ-ம். வயது/பால்/உடல் எடை/சமூக ஆதரவு/உளவியல் மனப்பாங்கு/கடந்தகால வரலாறு/ குடும்ப நோய்வரலாறு/ நோயாளிக்கு இருக்கும் பிற உடல் அல்லது மன நலக் கோளாறுகள்) ஆகியவற்றைப் பொருத்து அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய பிற கோளாறுகளால் வருந்துவோரின் நோய் மேலாண்மை மாறுபடும். நடத்தையியல் சிகிச்சையுடன் மருந்துகளையும் பயன்படுத்தும் போது பலன் சிறப்பாக இருக்கும்.
பொதுவாக குணப்படுத்தும் சிகிச்சை முறை கீழ்வருவனவற்றின் சேர்க்கையாக அமையும்:
1. மருந்துகள்: இதில் பல எதிர்-மனக்கலக்க மற்றும் எதிர்-மனச்சோர்வு மருந்துகள் அடங்கும்.
SSRI-கள் (தேர் செரோடோனின் மறுபயன்பாடு தடுப்பான்கள்). உ-ம்: ஃப்ளுக்ஸிடைன் (Fluoxetine), ஃப்ளூவோ ஆக்சமைன் (Fluvoxamine), செர்ட்ராலைன் (Sertraline), பரோக்ஸிடைன் (Paroxetine) போன்றவை.
- மிதமானதில் இருந்து கடுமையான அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகளுக்கு தற்போது இவைகளே சிறந்த மருந்துகளாகக் கருதப்படுகின்றன.
- பொதுவாக மனச்சோர்வு அல்லது மனக்கலக்கத்துக்கும் பயன்படுத்தப்படும் அளவில் இருந்து சற்று கூடுதலான அளவு பயன்படுத்தப்படுகிறது.
- இவை மூளையில் உள்ள நரம்புக்கடத்தியான செரோடோனினை ஒழுங்கமைத்து அவற்றின் பலன்களை 2-3 வாரத்தில் காட்டுகிறது.
- இவற்றை ஒரு நிபுணரின் வழிகாட்டுதலின் படியே உட்கொள்ள வேண்டும். தேவையற்ற பக்கவிளைவுகள் இருந்தாலோ அல்லது அறிகுறிகள் மோசமானாலோ உடனடியாக அறிவிக்க வேண்டும்.
- பொதுவாக, பழைய எதிர்மனச்சோர்வு மருந்துகளோடு ஒப்பிடும்போது, SSRI-கள் பாதுகாப்பான மருந்துகளாகும். இருக்கக்கூடிய பக்க விளைவுகள் இலேசானதாகவும் தாமாகவே கட்டுப்படுவனவாகவும் இருக்கும். உதாரணமாக, தலைவலி, குமட்டல், நெஞ்செரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை. ஆனால் தேவையற்ற பக்கவிளைவு/மாற்றம் உடலிலோ அல்லது மனதிலோ தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
- நோயாளிகள் தாங்களாகவே மருந்துகளை உட்கொள்ளவோ நிறுத்தவோ கூடாது. இதனால் பிரச்சினை பெரிதாகலாம்; தொடர்பறல் நோய்க்குறி அல்லது மனக்கலக்கம் முரண்பாடடைவதோ அல்லது மனக்கலக்கம்/தற்கொலை எண்ணம் அதிகரிக்கவோ செய்யலாம்.
- நோயின் கடுமையைப் பொருத்து மருந்துகளை அதிக நாட்களுக்கு உட்கொள்ள வேண்டி இருக்கும்.
- SSRI-கள், எதிர்-மனச்சோர்வு மற்றும் எதிர்-மனக்கலக்க மருந்துகள் பழக்கமாக மாறுபவைகள் அல்ல.
செரோடோனின் – நோர்பைன்ஃப்ரைன் மறுபயன்பாடு தடுப்பான்கள்: (Serotonin-Norepinephrine Reuptake Inhibitors (SNRIS)) தெஸ்வென்லாஃபேக்ஸைன்(Desvenlafaxine), வென்லாஃபேக்ஸைன் (Venlafaxine), டியூலாக்ஸ்டின் (Duloxetin) ஆகிய எதிர்-மனச்சோர்வு மருந்துகள் சில அலைக்கழிக்கும் மனக்கோளாறுகள் மற்றும் தொடர்புடைய பிற கோளாறுகளின் கூடுதல் சிகிச்சைக்கு பயனுள்ளவையாக இருக்கும்.
TCA-க்கள் (டிரைசைக்ளிக் எதிர் - மனச்சோர்வு மருந்துகள்) உ-ம்: குறிப்பாகக் குளோமிப்ரமைன் (Clomipramine)
செரோடோனினைத் தவிர்த்து, இந்த பழைய எதிர்-மனச்சோர்வு மருந்தும் அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய பிற கோளாறுகளுக்கும் தகுந்த மருந்தாகக் கருதப்பட்டது. இவை பிற நரம்புகடத்திகள் மீதும் செயல் புரியக்கூடியவை. முதன்மை மருந்தாகத் தற்போது பயன்படுத்தப் படவில்லை என்றாலும், சில நோயாளிகளுக்கு அல்லது சில சமயங்களில் சிகிச்சையைப் பலப்படுத்த இரண்டாம்நிலை மருந்தாக இது இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பென்சோடயாசெப்பைன்கள் (Benzodiazepines(BZDs)
குளோனாசிபம் (Clonazepam), லோராசிபம் (Lorazepam), எட்டிசோலாம் (Etizolam), டையாஸ்பாம் (Diazepam), ஆக்ஆஸ்பாம் (Oxazepam), கார்டியாசெப்பாக்சைடு (Chordiazepoxide).
கடுமையாகவும் குறுகிய காலத்திற்கும் இருக்கும் அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய பிற கோளாறுகளுக்கு BZD-களும் பயன்படுத்தப்படுகின்றன. SSRI-கள் பலனளிக்கத் தொடங்கும் வரை குறுகிய கால நிவாரணம் அளிக்க இவை இணைந்து வழங்கப்படுகின்றன.
இவைகள் பழக்கமாக மாறக்கூடிய மருந்துகள் ஆகும். எனவே தவறாக பயன்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்டது. இவற்றை ஒரு நிபுணரின் மேற்பார்வையின் கீழேயே குறுகிய காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
செரோட்டோனின் டோப்போமைன் முதன்மை இயக்கிகள் (Serotonin dopamine agonists (SDAs): உ-ம். சில நோயாளிகளுக்கு சிகிச்சையைப் பலப்படுத்த கூடுதல் மருத்துவமாகவும், தங்களுக்கு இருக்கும் அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகளைப் பற்றிய புரிதல் இல்லாத நோயாளிகளுக்கும், அல்லது இருநோய் பாதிப்பு உளநோய் அறிகுறிகள் இருக்குமானாலும், ரிஸ்பெரிடோன் (Risperidone), பயன்தருவதாக உள்ளது.
மின் - அதிர்வு சிகிச்சை(Electro-convulsive therapy (ECT): மருந்துகளால் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு சில சமயம் இது பயன் உள்ளதாக இருக்கும்.
தலையோட்டின் குறுக்காகத் தொடர் காந்தத் தூண்டல் (Repetitive Trans Cranial Magnetic Stimulation (rTMS) : ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகள் சில நோயாளிகளுக்கு அறிகுறிகளை மேம்படுத்துவதில் பயன் இருப்பதைக் காட்டுகிறது. தொடர் ஆராய்ச்சிகள் தேவை.
உளவியல்சார் மூளையறுவை (Psychosurgery)
முற்றிலும் சிகிச்சைக்குப் பலன் கிட்டாதபோது வெண்நார்த்துமித்தல் (cingulotomy), உறைத்துமித்தல் (capsulotomy) போன்ற அறுவைசிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவற்றால் நோய் குணமாகாது என்றாலும் சிகிச்சைக்கு பலன் கிடைக்க இவை உதவும்.
ஆழ் மூளைத் தூண்டல் (Deep brain stimulation) என்பது OCD-சிகிச்சைக்காக ஆய்வில் இருந்து வரும் இன்னொரு உத்தியாகும்.
பிற மருந்துகளான பஸ்பிரோன் (Buspirone), ப்யுப்ரோபியோன் (Bupropion) ஹைட்ரோகுளோரைடு (Hydrochloride), மிர்டாசாபின் (Mirtazapine), வால்ப்ரோயேட் (Valproate), கார்பமாசிபைன் (Carbamazepine) லித்தியம் (Lithium) ஆகியவை சேர்த்துக் கொடுக்கும் மருந்துகளாக சில நோயாளிகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
குறிப்பு: மருந்துகளை ஒரு நிபுணரின் வழிகாட்டுதல் படியே உட்கொள்ள வேண்டும். தேவையற்ற பக்க விளைவுகளோ அல்லது மோசமாகும் அறிகுறிகளோ ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
2. உளவியல் சிகிச்சைகள் (Psychotherapies)
அ. அறிவுசார் நடத்தை சிகிச்சை: (Cognitive behavioural therapy) இத்தகைய உளவியல் சிகிச்சை அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகளுக்கு மிகவும் பலனளிக்கும் சிகிச்சை ஆகும். இதில் சிகிச்சை அளிப்பவர், நோயாளி தமது கோளாறுக்குக் காரணமான காரணிகளைப் புரிந்துகொண்டு கையாள பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி உதவுகிறார். அறிவுசார் தவறுகள் சரிபடுத்தப் படுகின்றன. நடத்தை உத்திகளைப் பயன்படுத்தி விரும்பத் தகாத நடத்தைகள் குறைக்க அல்லது நிறுத்தப்படுகின்றன. ஆழ் மூச்சு போன்ற தளர்த்தல் உத்திகளைப் பயன்படுத்தி மனக்கலக்கத்தால் ஏற்படும் உடலளவிலான வெளிப்பாடுகள் கட்டுப்படுத்தப் படுகின்றன.
ஆ. ஆதரவு உளவியல் சிகிச்சை (Supportive psychotherapy) : நோயாளியுடன் ஆதரவு சிகிச்சை உறவை வளர்த்துக் கொண்டு பலவிதமான உளவியல் சிகிச்சை உத்திகளின் மூலம் நோயாளியிடம் ஒரு ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும் அணுகுமுறையை இந்த உளவியற் சிகிச்சை மேற்கொள்ளுகிறது.
இ. குடும்ப சிகிச்சை (Family therapy) : குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு அன்பானவர்களின் அலைக்கழிக்கும் மனக்கோளாறைப் புரிந்து கொள்ள குடும்ப உளவியல் சிகிச்சை உதவும். இதன் மூலம், அலைக்கழிக்கும் மனக்கோளாறும் தொடர்புடைய பிற கோளாறுகளும் அதிகமாகாத வண்ணம் புதிய தொடர்பு மற்றும் இடைவினைக்கான வழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் சிகிச்சைக்கு இணக்கம் ஏற்பட்டு விளைவும் மேம்படுகிறது.
ஈ. குழு சிகிச்சை (Group therapy) : இதில் OCD-யும் தொடர்புடைய பிற கோளாறுகளையும் கொண்ட சம்பந்தமில்லாத தனிநபர்களுக்கு இந்த உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பலனளிக்கும் சிகிச்சையை அளிக்கவும் ஆதரவை உருவாக்கவும் முடியும்.
முதன்மை சிகிச்சைகள் தவிர பிற துணை சிகிச்சைகளான இசை, கலை சிகிச்சைகளும், பலவிதமான தியான முறைகளும் சுவாச உத்திகளும் சில நோயாளிகளுக்கு உதவும்.
தடுப்புமுறை
OCD மற்றும் தொடர்புடைய கோளாறுகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றாலும் அவற்றின் சிக்கல்களைத் தடுக்க முடியும். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆரோக்கியமான உடல் மற்றும் மன வாழ்க்கை முறையைத் தழுவிக் கொள்ளுவதனாலும் மனவழுத்தத்தை சிறந்த முறையில் கையாளக் கற்றுக் கொள்ளுவதின் மூலமும் நோயின் போக்கையும் விளைவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அவற்றில் அடங்குவன:
- தினமும் உடல்பயிற்சி செய்தல்
- பிரச்சினை தீர்ப்பதைக் கற்றல்
- கால மேலாண்மை
- வாழ்க்கையில் விஷயங்களை முன்னுரிமைப்படுத்த கற்றல்
- சுகாதாரமான தூக்கம்
- தன்முனைப்புப் பயிற்சி
- ஆரோக்கியமான உணவு
- பொழுதுபோக்குகளை இணைத்துக்கொள்ளுதல். உ-ம். இசை, நடனம், கலை போன்றவை
- சமூக ஆதரவு அமைப்பில் பங்குபெற்று வளர்த்தல்
- மனந்திறந்து பேச நெருக்கமானவர்களை சம்பாதித்தல்
- குழந்தைகளுக்கு நிலையான பாதுகாப்பான வீட்டுச் சூழலை வழங்குவதால் OCD மற்றும் பிற தொடர்புடைய கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைக்கப்படும்.
- OCD மற்றும் பிற தொடர்புடைய கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு முக்கியமானதாகும். இதனால் ஆரம்ப கட்டத்தில் அறிந்து மருத்துவம் அளிக்க முடியும். மேலும் சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு சிகிச்சையால் மேம்பட்ட விளைவுகள் உண்டாகும்.
நோய் மேலும் மோசமாகாமல் தடுப்பதற்கும், சிகிச்சையின் சிறந்த பலனைப் பெறவும் ஆரம்ப கட்ட நோய்கண்டறிதல் அவசியமாகும். இதைப் பின்வரும் வகையில் நிறைவேற்றலாம்:
- மன ஆரோக்கியத்தை பற்றிய உணர்வை சமுதாயத்துக்கு ஊட்டுதல்
- உடல்நலத்தைப் போலவே மனநலமும் மனிதனுக்கு முக்கியமானது என்ற உண்மையை வலியுறுத்தல்.
- மனநலம் குன்றியவர்களுக்கு ஏற்படும் சமூக ஒதுக்கத்தைக் குறைத்தல். சமுதாய பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றால் இதைச் செய்யலாம்.
- நோயாளியும் அவரது நலம்பேணுவோரும் சிகிச்சையை சரிவரக் கடைபிடித்து, முறையாக சிகிச்சையை மேற்கொண்டால் நோய் மேலும் மோசமாகி சிக்கல்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
நினைவில்கொள்ளவும் (Remember): மனநலப் பிரச்சினைகளுக்கு ஆரம்பக் கட்ட சிகிச்சையே சிறந்த பலனையும் தரமான வாழ்க்கையையும் அளிக்கும். சரியான சிகிச்சையின் மூலம் பெரும்பாலான அலைக்கழிக்கும் மனநோய் மற்றும் பிற தொடர்புடைய கோளாறுகளைக் கொண்டவர்களாலும் நல்ல வாழ்க்கையைத் தொடர முடியும்.
ஆதாரம் : National health website
Good
பதிலளிநீக்கு