ஞாயிறு
இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு
வருமான வாய்ப்பு
சூரியசக்தி மின்சாரத்தை விற்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் திட்டத்தை செயல்படுத்த, ‘டெடா’ எனப்படும், தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Electricity Regulatory Authority) அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரம் வாயிலாக வருவாய்:
மத்திய அரசு, விவசாயிகளுக்கு, மின்சாரம் வாயிலாக வருவாய் கிடைக்க, ‘பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக் ஷா (Prime Minister Kisan Urja Surak Shah)’ என்ற, திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில், சூரியசக்தி மின் நிலையம் (Solar Power Station) அமைக்கப்படும். அவற்றில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, மோட்டார் பம்ப் (Motor pump) இயக்கி, விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். விவசாயி பயன்படுத்தியது போக, உபரி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்கலாம். இதனால், மழை இல்லாத காலங்களில், பயிர் சாகுபடி பாதித்தாலும், மின்சார விற்பனை வாயிலாக வருவாய் (Revenue) கிடைக்கும்.
செலவில்லாமல் வருமானம்:
பிரதமரின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், டெடா நிறுவனம், மின் வாரியத்துடன் இணைந்து, 20 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளில், தலா, 7.50 குதிரை திறன் (7.50 Horse Power) மோட்டார் பம்ப் இயங்கும் வகையில், 11 கிலோ வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான மொத்த செலவில், மத்திய, மாநில அரசுகள், தலா, 30 சதவீதம் மானியம் (Subsidy) வழங்கும். விவசாயிகள் ஏற்க வேண்டிய, 40 சதவீத செலவு தொகையை, டெடா நிறுவனமே ஏற்கும். விவசாயிகள், 1 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. இதனால், செலவு பணத்தை ஈடுகட்ட, சூரியசக்தி மின்சாரத்தை, 1 யூனிட், 4.53 ரூபாய்க்கு வாங்க, மின் வாரியத்திற்கு உத்தரவிடுமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், டெடா மனு செய்தது. மனுவை விசாரித்த ஆணையம், 1 யூனிட், 2.28 ரூபாய் என்ற விலையில், 25 ஆண்டுகளுக்கு வாங்க, மின் வாரியத்திற்கு (Electricity Board) உத்தரவிட்டுள்ளது.
சூரியசக்தி மின்சாரம் கிடைக்காத சமயங்களில், விவசாயிகள், வழக்கம் போல, மின் வாரியத்தின் இலவச மின்சாரத்தை பயன்படுத்தலாம். விவசாயிகள் வழங்கும் உபரி மின்சாரத்திற்கு, ஆரம்பத்தில், 1 யூனிட்டிற்கு, 50 காசு ஊக்கத்தொகை (Incentive) வழங்கவும், பின், படிப்படியாக அதிகபட்சம், 1 ரூபாயாக வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில், இத்திட்டத்திற்கான பயனாளிகள், விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக