வெள்ளி

சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமரிக்க எளிய வழிமுறைகள்

கூந்தல் என்பது தலைசார்ந்தது மட்டுமல்ல, தலையாயதும் இதுதான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழகுக் கிரீடமாய் இருப்பது கூந்தல்தான். பெண்களின் பேரழகு கூந்தலை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது.

அழகான முகம், சிறிய கண்கள், மலர்ந்த விழிகள், மாறாத புன்னகை, சிவந்த மேனி, சித்திரம் போல் மங்கை இவள். ஆறடி கூந்தல் தரையில் படரும் அழகோ தனிதான்.அழகின் அத்தனை அம்சங்கள் இருந்தாலும், கூந்தல் வளர்ச்சி குறைவென்றால் பெண்களைப் பொறுத்தவரை, அது ஓர் பேரிழப்புதான்.

கருப்பாய் இருக்கிறாள். ஆனால் கூந்தலின் நெடிய வளர்ச்சி அவளை மிடுக்காய் அல்லவா நடைபோட வைக்கிறது.நானும் எடுப்பாய் இருக்கிறேன். ஆனால் கூந்தல் மட்டுமோ அரைத்து வழித்த துவையல் போல கையளவு உள்ளதே... என்றும் ஏக்கமுறும் பெண்கள்தான் எத்தனை எத்தனை?.

கூந்தலை வளர்க்க ஆசைப்பட்டு 100-க்கும் மேற்பட்ட கூந்தல் தைலங்களை வாங்கி வெறுத்துப்போன மங்கையர்கள் எத்தனை எத்தனை?.இன்று இந்தியா முழுமையும் கணக்குப் பார்த்தால் 3000-க்கும் அதிகமாக தலைமுடிக்கான தைலங்கள் (hair oil) தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

அனைத்தும் தனக்கே உரிய வாடிக்கையாளர்களை கொண்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. கூந்தல் தைலம் மட்டுமே, முடிக்கொட்டுதலை நிறுத்தவோ, முடி வளர்ச்சியை அதிகப்படுத்திடவோ முடியாது.

கூந்தல் உதிர்வதற்கு பல்வேறு உடல்நலக் காரணங்களும், உணவுப் பிரச்சினைகளும் உள்ளன. எனவே ஒரு பாட்டில் தைலத்தை (hair oil) தேய்த்துவிட்டு ஓரடி கூந்தல் உடனே வளரவில்லையே என ஏங்கவேண்டாம்.ஆடவரைவிட பெண்டிரை வெகுவாய் வாட்டும் தலைமுடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகியவை தீர சிறப்பான மருந்துகளையும், இனிவரும் பக்கங்களில் பட்டியலிட இருக்கிறேன்.

எதுவுமே உடனே வளர்ந்துவிடுவதில்லை. முடியும்தான். கொஞ்சம் பொறுமையாய் இருந்து, மயிர் வளமாகும் வரை காத்திருங்கள்.

முடிப்பிரச்சினை எதனாலெல்லாம் உண்டாகும்?.

1. வயதுமுதிர்ச்சி, போஷாக்கு குறைந்த உணவு, நெடுநாள் பட்டினி இவைகளால் முடிகொட்டலாம்.

2. அடிக்கடி தலைக்கு குளிக்காமல், தலையில் அழுக்கு சேர்வதாலும் அழுக்கு சீப்புகளை உபயோகிப்பதாலும் தலைமுடி கொட்டலாம்

3. அதிக வீரியமுள்ள நவீன மருந்துகளை (western) உபயோகிப்பதால் உண்டாகும் ஒவ்வாமையினால் (allergy) தலைமுடி உதிரலாம்.

4. பெண்களின் கர்ப்பக்காலத்தில் கொடுக்கப்படும் மருந்துகளினாலும் முடிகொட்டுதல் உண்டாகும்

5. அதிக உஷ்ணத்தில் அலைதல், வெப்பம் மற்றும் நெருப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடுதல், தலைமுடியை உலரவைக்க, மின்சாரத்தில் இயங்கும் முடி உலர்த்தியை (hair dyer) அடிக்கடி உபயோகித்தல் போன்றவற்றாலும் தலைமுடி கொட்டும்.

6. உப்பு தண்ணீரில் (salt water) அடிக்கடி குளிப்பதாலும், பொடுகு (dandruft) உண்டாகி முடி கொட்டலாம்.

இதுவரை தலைமுடி பிரச்சினைகள் பற்றி பார்த்து வந்த நாம் கூந்தலின் வகைகளையும் அதை பராமரிக்கும் வழிமுறைகளையும் நாளை காண்போமா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக