புதன்

சிறந்த சத்துணவின் முக்கியத்துவம்

 திசு வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பராமரிக்கவும், உடலின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும் தேவையான ஆற்றலை உணவு நமக்கு அளிக்கிறது. சத்துணவே ஆரோக்கியத்துக்கு மூலைக்கல்லாகும். எனவே, உடலுக்குத் தேவையான சத்துக்களைத், தேவையான அளவுக்கு, உட்கொள்ளும் உணவு வழங்க வேண்டும். சிசு, குழந்தை, தாய் ஆகியோரின் மேம்படுத்தப்பட்ட நலத்தோடும், நோய்களோடு எதிர்த்துப் போராட வலிமையான நோய்த்தடுப்பு அமைப்போடும், பாதுகாப்பான மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறப்போடும், பரவா நோய்களின் (நீரிழிவு, மாரடைப்பு, இதய- குருதிக் குழாய் நோய்கள் போன்றவை) குறைந்த ஆபத்துக்களோடும், ஆயுட்காலத்தோடும் சத்துணவு தொடர்புடையது. முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலை மட்டுமே கொடுப்பது வருங்காலத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு முக்கியம் வாய்ந்ததாகும். வயிற்றுப்போக்கு, மூச்சுக்குழல் தொற்றுக்கள், திடீர்க் குழந்தை இறப்பு நோய்கள், ஒவ்வாமைகள் (ஆஸ்துமா போன்றவை), உடல்பருமன், பிற்கால வாழ்க்கையில் 1 & 2 –ம் வகை நீரிழிவுகள் ஆகிய ஆபத்துக்களைக் குறைக்கும் பலவிதமான நன்மைகள் தாய்ப்பாலுக்கு உண்டு. அது அன்னைக்கு பிற்கால வாழ்க்கையில் மார்பு, கருப்பை புற்றுக்கள், இடுப்பு முறிவு ஆகியவற்றில் இருந்து காப்பளிக்கிறது. தற்கால ஆராய்ச்சிகள் நீண்ட நாள் தாய்ப்பாலூட்டலுக்கும், பின்மாதவிடாய் இதய இரத்தக் குழாய் நோய் ஆபத்துகளுக்கும்  இடையில் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகின்றன.

இளம் வயது சத்துணவுக் குறைவே மூன்றில் ஒரு பங்கு இளங்குழந்தை மரணத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. தப்பிப் பிழைப்பவர்கள் வளர்ச்சிக் குன்றிப்போகின்றனர். வாழ்க்கையில் அவர்களின் நோய்த்தடுப்பு ஆற்றலும், உடல் உழைப்புத் திறனும், கல்வி வளர்ச்சித் திறனும், வளர்ந்தபின் வேலைத்திறனும் பாதிக்கப்படுகின்றன.  பின்னர் சத்தற்ற உணவும், ஊட்டச்சத்தின்மையும் பரவா நோய்களான (NCDs)  இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று, மாரடைப்பு, இரத்த ஓட்டத் தடை இதயநோய் போன்றவற்றிற்குக் முக்கிய காரணங்கள் ஆகின்றன.

ஆதாரம்: தேசிய சுகாதார இணையதளம்

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்- இதயம்

  பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


கர்ப்பக் கால கவனிப்பு

 கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!

கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்

கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.