வியாழன்

கால் வலி போக்கும் - கல்தாமரை

 முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன.

சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.

எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும், இல்லாவிடில் எலும்பு சந்திப்புகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன. சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.

சுமைலாக்ஸ் செய்லானிகம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர்மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும், தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம், இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களால் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்.

Thanks- Dr. J. Jeyavenkadesh

கண்களைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்

 

இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். கண்நோய் உள்ளவர்கள் அந்த வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல் இவைகள் சரியாகும்.
உடல் சூட்டினால் அல்லது கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து காணப்படுவது உண்டு. இதற்கு புளியம்பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
மருதோன்றி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கண் சிவப்பு நீங்கும்.
நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்வலி நீங்கும்.
கண் பார்வைத் தெளிவு பெற கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
மிளகு, சீரகம் இவற்றில் சிறிதளவு எடுத்து பொடி செய்து, எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண்ணிலிருந்து நீர்வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் நெய்யையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலப்படும், பார்வை தெளிவடையும்.
மல்லித்தழை மற்றும் கேரட்டை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தினமும் குடித்துவர கண் நரம்புகள் பலப்படும்.

Thanks- சிறகு இதழ்

கபம் வெளியேறுவதற்கான மூலிகைகள்

 

கபம் என்றால் என்ன?

மனித உடலில் உள்ள ஈரபதத்தின் அளவே கபம் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வகையான நீர் கோர்வை என்றும் கூறலாம். குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொள்ளும் போது உடலில் கபம் அளவு அதிகரிக்கிறது.

தலையிலும் மார்பிலும் தங்கியிருக்கும் கபம் உட்புறங்களில் அடைத்துக் கொள்வதால் மூச்சு விடுவதற்குக் கஷ்டமான நிலை உருவாகிறது. அதை வெளியேற்றுவதற்கு உடல் தும்மலை ஏற்படுத்துகிறது. ஆனாலும் உறைந்த கபம் வெளியேறாமலிருப்பதால் மூச்சுவிடும்போது விசில் சத்தமும் படபடப்பும் ஏற்படுகிறது. உறைந்த கபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை மருந்துகளைப் பொடித்து சூரணம் செய்து தேன் குழைத்துச் சாப்பிட்டலாம்.

மூலிகைகளும் அதன் தயாரிப்பு முறையும்

பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலரிசி, இலவங்கப்பட்டை, சிறுநாகப்பூ, ஜாதிக்காய், விலாமிச்சைவேர், சுக்கு, கருஞ்சீரகம், காரகில், மூங்கிலுப்பு, ஜடாமாஞ்சி, அல்லிக்கிழங்கு, திப்பிலி, சந்தனம், அஸôரூன், வெட்டிவேர், வால்மிளகு ஆகிய இந்த பதினெட்டு மருந்துகளும் வகைக்கு 10 கிராம், சீனா கல்கண்டு இவற்றில் பச்சைக்கற்பூரத்தையும் கல்கண்டையும் தவிர மற்றவற்றைத் தனியே இடித்து மெல்லிய கண்ணுள்ள சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

பிறகு அந்தத் தூளில் பச்சைக்கற்பூரத்தைத் தூளாக்கிச் சேர்த்து கல்வத்திலிட்டு அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பிறகு கல்கண்டுத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பச்சைக்கற்பூரத்திற்குப் பதிலாக சிலர் நாட்டு கட்டிச் சூடத்தைச் சேர்த்துக்கொள்வது வழக்கம்.

பெரியவர்கள் 1/2 - 1 ஸ்பூன் அளவு எடுத்தால் சூரணத்தின் அளவைவிட ஒரு மடங்கு கூடுதலாகத் தேன் குழைத்து காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். குழந்தைகள் 1 சிட்டிகை முதல் கால் டீ ஸ்பூன் வரை சூரணம் சாப்பிடலாம். அவர்களுக்கும் தேன் ஒரு மடங்கு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மழை பனி நாட்களில் ஏற்படும் சளி உபாதை, நீர்க் கோர்வை, தொண்டைக் கமறல், மார்புச் சளி, இருமல், இடுப்புப்பிடிப்பு, முதுகுப் பிடிப்பு, அஜீரணமான மலப்போக்கு, வாயில் ருசியின்மை, குடல் வலுவிழந்து அடிக்கடி மலம் கட்டியும் இளகியும் மாறி மாறிப் போவது முதலியவற்றுக்கு நல்லது.

மூலநோய் வறண்டு வலி கொடுத்தால் இதைச் சாப்பிட்டால் வலி குறையும். சளி வெளியேறாமல் வறண்டு விலாப்புறம் முதுகு, மார்பு, தலை முதலிய இடங்களில் வலியுடன் இருமலுமிருந்தால் நெய் அல்லது பாலுடன் சாப்பிட நல்லது. இந்த சூரணத்திற்குக் "கர்பூராதி சூரணம்' என்றும் பெயருண்டு. ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

ரேவல் சீனிக்கிழங்கு 100 கிராம், வேப்பம்விதை 40 கிராம், சதகுப்பை 20 கிராம், சோம்பு 20 கிராம், கருஞ்சீரகம் 20 கிராம். இந்தச் சரக்குகளை வெயிலில் நன்கு காய வைத்து ஒன்றாக இடித்து சூரணம் செய்து சிறு கண் சல்லடையில் சலித்து சீசாவில் பத்திரப்படுத்தவும்.

தலையில் நீர்க்கோர்வையினால் ஏற்படும் தலைவலி, நீர்முட்டல், கண்ணீர் கசிதல், சளியினால் காய்ச்சல் முதலிய நிலைகளில் 1 - 2 டீ ஸ்பூன் சூரணத்தைத் தண்ணீருடன் கலந்து இரும்பு அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கரண்டியிலிட்டு இளந்தீயில் சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் நெற்றிப்பொட்டு, நெற்றியிலும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும். ஒரு நாளில் இரண்டு முறை போடலாம். மண்டை நீரை வற்ற வைத்து வேதனையைக் குறைத்துவிடும்.

செய்யக் கூடாதவை

மாப்பண்டங்கள், புதுஅரிசி, இனிப்புகள், எண்ணெய்ப் பலகாரம், ஐஸ் கலந்த பானங்கள், ஐஸ்கிரீம், தயிர், புலால், குளிர்ந்த தண்ணீர், குளிர்ந்த காற்றில் பயணம், ஜன நெருக்கடியிலும், நீர்த்தேக்கமுள்ள பகுதியில் வசிப்பது, பகலில் படுத்து உறங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

மூல நோய்க்கு நல்ல மருந்து காட்டுக்கருணை

 நாம் மலம் கழிக்க தாமதப்படுத்தும்பொழுதும் அல்லது மலவாயில் இறுக்கம் ஏற்படும்பொழுதும் மலக்கடலில் தங்கியுள்ள மலமானது இறுகி, சுற்றியுள்ள மலக்குடல் திசுக்களையும், நுண்ணிய ரத்தக்குழாய்களையும் அரிக்க ஆரம்பிக்கின்றன.


மலத்திலுள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளும், அமோனியா, பொட்டாசியம், நைட்ரஜன் போன்ற வேதிப்பொருட்களும் மலக்குடலை சேதப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி மியூகஸ் என்னும் சளிச்சவ்வையும் பாதித்து மலக்குடல் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.


இவ்வாறு ஏற்பட்ட வீக்கமானது மலக்குடலின் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தத்தை தேங்கவைத்து, குழாய்களை வெடிக்கவைத்து விடுகின்றன. அத்துடன் அந்த ரத்தக்குழாய்களில் குழிப்புண்களோ, வளர்ச்சிகளோ ஏற்பட்டு மூலமாக மாறுகின்றன. சில நேரங்களில் ரத்தக்கசிவை ஏற்படுத்த ரத்த மூலமாக மாறுகின்றன. வீக்கங்கள் மற்றும் சதை வளர்ச்சிகள் வெளியே பிதுங்கி, உள் மற்றும் வெளிப்புறமாக மாறுகின்றன. இவ்வாறு கவனிக்கப்படாத குழிப்புண்களானது மலவாய்பகுதியை சுற்றியுள்ள சதைகளை குடைந்து, தோலைவிட்டு வெளியேறி, துளைப்புண்களாக மாறி, பவுத்திர நோயாகவும் உருவெடுக்கின்றன.


இதனால் மூலநோயாளியாக மாறி, உட்காரவும் எழவும் சிரமப்பட்டு அன்றாட காலைக்கடன்களை கழிக்கவே பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. மூலநோய் வராமல் தடுக்க நார்ச்சத்து மிகுந்த, கொழுப்புச்சத்து குறைந்த, காரமில்லாத உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் நீண்டநேரம் அமருவதை தவிர்த்து, போதுமான நீர் அருந்தவேண்டும். புரோட்டா, அசைவ உணவுகள், பொரித்த உணவுகளையும், இரவில் வயிறுமுட்ட உணவு உண்பதையும் தவிர்க்க வேண்டும். மலத்தையும் அபான வாயுவையும் அடக்கக்கூடாது. வாயுவை பெருக்கக்கூடிய கிழங்குகளையும், வறுத்த காரமான பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.


கீரை, காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும். விரைவில் தூங்கி அதிகாலை எழ வேண்டும். கணினி, சமையல் வேலை போன்ற உஷ்ணத்தைப் பெருக்கக்கூடிய பணிகளை போதுமான இடைவெளி விட்டு செய்ய வேண்டும். மூலத்தை நீக்கி, மூலநோய் வராமல் காக்கும் அற்புத கிழங்கு காட்டுக்கருணை. இதன் வேர்கிழங்கில் 76 சதவீதம் ஸ்டார்ச் அமைந்துள்ளது. மூலநோயில் தோன்றும் கட்டி, வீக்கம், சீர் மற்றும் கழிச்சலை நீக்கக்கூடியவை. ஆசனவாய் பகுதியிலுள்ள தோலில் தோன்றும் சிறு சிறு வெடிப்புகளையும் ஆற்றக்கூடியவை.


காட்டுக்கருணை, காராக்கருணை, புளியம்பிரண்டை, நாப்பிரண்டை, மருள்கிழங்கு, கற்றாழை வேர், சமையல் கருணை, மாம்பருப்பு, தோல் நீக்கிய சுக்கு, கடுக்காய்த்தோல், கொடிவேலி வேர்ப் பட்டை, கோரைக்கிழங்கு, சரக்கொன்றை புளி ஆகியவற்றை சம அளவு எடுத்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் போட்டு உலர்த்தி இடித்து, சலித்து, லேசாக நெய்யில் பிசறி, இளவறுப்பாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இத்துடன் 2 பங்கு கருப்பட்டி தூளையும் கலந்து வைத்துக்கொள்ளலாம். இந்தச்சூரணத்தை காலை மற்றும் இரவு 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர மூலநோய் நீங்கும். சிலருக்கு லேசாக நாக்கில் அரிப்பு ஏற்படலாம். இதனை தவிர்க்க காட்டுக்கருணை, காராக்கருணை, நாப்பிரண்டை, சமையல் கருணை, கோரைக்கிழங்கு ஆகியவற்றை நல்லெண்ணெயில் லேசாக வதக்கி, பின் பொடித்து லேகியமாக செய்து கொள்ளலாம். சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் கருணை லேகியத்தை வாங்கி 5 முதல் 10 கிராமளவு தினமும் 2 வேளை சாப்பிடலாம்.


ஆதாரம்: தினகரன் ஆரோக்கியம்