சனி

அமுத கரைசல் தயாரிக்கும் முறை


நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும் அமுத கரைசல்


நுணுக்கமான புரிதலுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் அணுகினால், விவசாயம் நிச்சயம் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தத் தகவலில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? என்று மற்றவரிடம் கேட்காமல், மற்றவர் கேட்க நீங்களே முன்னுதாரணமாகுங்கள். இயற்கை நம் தாய். தாய் என்றுமே பிள்ளைகளை காக்கவே செய்வாள். அந்த தாய் பூமியைக் காப்பதில் முதல் அடி எடுப்போம் நம் அமுத கரைசலுடன்.
அமுத கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அது நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும். அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
அமுத கரைசலை பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
தயாரிக்கும் முறை
நாட்டுப்பசு சாணம் = 10 கிலோ
நாட்டுப்பசு கோமியம் = 10 லிட்டர்
வெல்லம் = 250 கிராம்
தண்ணீர் = 200 லிட்டர்
முதலில் நாட்டுப்பசுஞ் சாணம்  மற்றும் நாட்டுப்பசு கோமியம் (பசும் சாணம் புதியதாக இருத்தல் வேண்டும், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு அதில்  வெல்லம் மற்றும் தண்ணீரைச்  சேர்க்க வேண்டும். இந்தக்  கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அந்த கலவையில் கொசுக்கள் முட்டையிடுவதைத் தவிர்க்க பிளாஸ்டிக் (அ) அட்டையை வைத்து மறைத்துக் கொள்ளலாம்.

பயன் படுத்தும் முறை
  • ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம்.
  • வாய்க்கால் மற்றும் சொட்டு நீரிலும் கலந்து விடலாம்.
  • அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.
  • பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
  • பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.
  • பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.
  • வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.
  • இதனை 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த கலவையைக் கலக்குவதன்மூலம் நொதித்தல் அதிகமாகும். மேற்பரப்பில் இருக்கும் தெளிந்த நீரை உபயோகிக்க வேண்டும். மேலும் இக்கரைசலைத் தெளித்த 2 மணி நேரத்திற்கு அதன் மிதமான மணம் பயிர்களின் மேல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக