சனி

பப்பாளி சாகுபடியும் அதன் பயன்களும்

  • சத்து நிறைந்த கனி வகைகளில் பப்பாளியும் ஒன்று. தொடர்ந்து காய்க்க கூடியது. இதன் ஆயுள் காலம் சுமார் இரண்டு ஆண்டுகள்.
  • பப்பாளி நாற்று விடும்போதே நடவு வயல் சுற்றி அகத்தி செடிகளை நெருக்கமாக விதைத்து விடுவதால் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.
  • தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் வளரும் தன்மை உடையது. ஏக்கருக்கு கிட்டத்தட்ட 20கிராம் விதைகள் வரை தேவை. இடைவெளி ஆறு முதல் ஏழு அடி வரை. மண் அனைப்பது மூலம் செடிகள் சாயாமல் தடுக்கலாம்.
  • அதிகம் பயன்பாடு உள்ள ரகங்கள் ரெட் லேடிராயல் ரெட்ஜின்டா மற்றும் கோவை ஆராய்ச்சி நிலைய ரகங்கள். சொட்டு நீர் பாசனம் சிறந்தது. அனைத்து பட்டங்களிலும் நடவு செய்யலாம்.
  • பிளாஸ்டிக் பைகள் மற்றும் tray க்களில் நாற்று விடலாம். கண்டிப்பாக நாற்று விடும்போதே வேப்பம் புண்ணாக்கு தொழு உரத்தோடு கலந்து இடுவதால் வேர் அழுகலை தடுக்கலாம். மண்புழு உரம் இடுவதால் மகசூல் அதிகரிக்கும்.
  • நாற்பது முதல்  அறுபது நாள் நாற்று நடுவது சிறப்பு. தொடர்ந்து காய்ப்பதால்   நுன்னூட்ட சத்துக்கள் அதிகம் தேவை, ஆதலால் நாற்று விடும்போது, செடிகளை நடவு வயலில் நடும் போது மற்றும் மாதம் ஒரு முறை கண்டிப்பாக வேரில் இட வேண்டும். இதனால் அதிக திரட்சியான காய்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். உயிர் உரங்கள் கட்டாயம் இடவேண்டும் ஏழாம் மாதம் முதல் காய்ப்பு வர ஆரம்பிக்கும்.
  • சில ரங்களின் காய்களில் இருந்து பால் எடுக்க படுகிறது. இது சில கிரீம் களில் பயன் படுத்த படுகிறது. அதனால் உபரி வருமானம்.
  • ஏக்கருக்கு இருபது டன்கள் தொழு உரம் மற்றும் மண் புழு உரம் மாதம் ஒருமுறை இட வேண்டும். மேம்படுத்தப்பட அமிர்த கரைசல் வாரம் ஒரு முறை.
  • பதினைந்து நாள் ஒரு முறை சொட்டுநீர் பாசனத்தில் கோமியம், சுண்ணாம்பு தூள்  இவற்றை கலந்து விடுவதால் வேரில் ஏற்படும் நோய்களை முற்றிலும் தடுக்கலாம்.
  • இவற்றை அதிகமாக தாக்கும் நோய்கள் மஞ்சள் வைரஸ் மற்றும் மாவுப்பூச்சி. கற்பூரகரைசல்  வாரம் ஒரு முறை தெளிப்பதால் இவை நெருங்காது.
  • வாரம் ஒரு முறை அறுவடை. அதாவது ஆறு மாதங்களுக்கு பிறகு. ஏக்கருக்கு கிட்டத்தட்ட அறுபது டன்கள் வரை அறுவடை. இயற்கை முறை சாகுபடியால் மூன்று வருடங்கள் வரை மகசூல் கிடைக்க வாய்ப்பு.
  • இதன் பழங்களில் அதிக வைட்டமின் சத்துகள் உள்ளதால் நிலையான சந்தை வாய்ப்பு. வெளிநாடுகளில் அதிக தேவை.
  • தொகுப்பு: ஸ்ரீதர் ( இயற்கை வேளாண் ஆர்வலர், மேலும் பல இயற்கை வேளாண் முறைகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வெற்றியும் கண்டவர்)
    தொடர்புக்கு: 9092779779

அமுத கரைசல் தயாரிக்கும் முறை


நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும் அமுத கரைசல்


நுணுக்கமான புரிதலுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் அணுகினால், விவசாயம் நிச்சயம் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தத் தகவலில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? என்று மற்றவரிடம் கேட்காமல், மற்றவர் கேட்க நீங்களே முன்னுதாரணமாகுங்கள். இயற்கை நம் தாய். தாய் என்றுமே பிள்ளைகளை காக்கவே செய்வாள். அந்த தாய் பூமியைக் காப்பதில் முதல் அடி எடுப்போம் நம் அமுத கரைசலுடன்.
அமுத கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அது நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும். அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
அமுத கரைசலை பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
தயாரிக்கும் முறை
நாட்டுப்பசு சாணம் = 10 கிலோ
நாட்டுப்பசு கோமியம் = 10 லிட்டர்
வெல்லம் = 250 கிராம்
தண்ணீர் = 200 லிட்டர்
முதலில் நாட்டுப்பசுஞ் சாணம்  மற்றும் நாட்டுப்பசு கோமியம் (பசும் சாணம் புதியதாக இருத்தல் வேண்டும், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு அதில்  வெல்லம் மற்றும் தண்ணீரைச்  சேர்க்க வேண்டும். இந்தக்  கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அந்த கலவையில் கொசுக்கள் முட்டையிடுவதைத் தவிர்க்க பிளாஸ்டிக் (அ) அட்டையை வைத்து மறைத்துக் கொள்ளலாம்.

பயன் படுத்தும் முறை
  • ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம்.
  • வாய்க்கால் மற்றும் சொட்டு நீரிலும் கலந்து விடலாம்.
  • அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.
  • பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
  • பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.
  • பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.
  • வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.
  • இதனை 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த கலவையைக் கலக்குவதன்மூலம் நொதித்தல் அதிகமாகும். மேற்பரப்பில் இருக்கும் தெளிந்த நீரை உபயோகிக்க வேண்டும். மேலும் இக்கரைசலைத் தெளித்த 2 மணி நேரத்திற்கு அதன் மிதமான மணம் பயிர்களின் மேல் இருக்கும்.