சனி

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-13

ஆஸ்துமாவுக்கு நொச்சி!


Verbenaceae
மூன்று அல்லது ஐந்து கூட்டு இலைகளை எதிர் அடுக்கில் பெற்ற சிறுமர வகையைச் சேர்ந்தது. இலைகள் வெகுட்டல் மணம் உடையவை. இலை சிறு நீர் பெருகுவதற்கும் நோய் நீக்கி உடலைத் தேற்றுவதற்கும் மாதவிலக்கை ஒழுங்கு செய்வதற்கும் நுண் புழுக்களைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. பட்டை, காய்ச்சல் போக்கும். தமிழகம் முழுவதும் தானாகவே வளரும்.
வேறு பெயர்கள்: அக்கினி, அதிக நாரி, அணிஞ்சில், அதிகனசி, அதி கற்றாதி, அதியூங்கி, அரி, கொடிவேலி, சிற்றாமுட்டி, செங்கோடு வேலி, முள்ளி.
வகைகள் : கருநொச்சி, வெறி நொச்சி.
கருநொச்சி : இலைகள், பட்டைகள் கருப்பு நிறமாக அமைந்து இருக்கும். இதன் இலைகள் உள்ளங்கையளவு நீள அகலத்தில் இருக்கும்.
ஆங்கிலத்தில் : vitex negundo, liss; Verbenaceae.
மருத்துவ குணங்கள்:
நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.
நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.
நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.
நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். (இச்சா பத்தியத்துடன், பாகற்காய், அகத்தி, மீன், கருவாடு நீக்கி உணவு உட்கொண்டு தீவிர ஆசையைத் தவிர்க்க வேண்டும்).
நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.
நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.
நொச்சி இலைச் சாறு 5 மில்லியளவு எடுத்து பசுங் கோமியம் 5 மில்லியளவுடன் கலந்து 2 வேளை குடித்து வர கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குணமாகும்.
நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.
நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.

சளித்தொல்லைக்கு கருந்துளசி!

-
Health Benefits of Holy Basil in Siddha Medicine - Food Habits and Nutrition Guide in Tamil
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம்.
சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.
'ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
நன்றி:மூலிகை மருத்துவர்


Engr.Sulthan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக