சனி

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-8, சுண்டை.

1. மூலிகையின் பெயர் :- சுண்டை.
2. தாவரப்பெயர் :- SOLANUM TARVUM.
3. தாவரக்குடம்பம் :- SOLANACEAE.
4. வேறு பெயர்கள் :- கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி. முதலியன.
5. பயன் தரும் பாகங்கள் :
- இலை, காய், வத்தல், மற்றும் வேர் முதலியன.
6. வளரியல்பு :- சுண்டை ஒரு பெருஞ்செடி இனத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5 அடி முதல் 10 அடி உயரம் கூட வளரக்கூடியது. எல்லா வித மண் வளத்திலும் வளரக்கூடியது. இதற்கு ஆங்கிலத்தில் TURKEY BERRY என்று சொல்வார்கள்.
சுண்டையில் இரு வகையுண்டு. மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம வெளியிலும் வளர்வதை ஆனைச்சுண்டை அல்லது பால் சுண்டை என்றும் சொல்வர். அகன்ற இறகாக உடைந்த நேர் அடுக்கில் அமைந்த இலைகளையும் வெண்நிரப் பூங் கொத்துக்களையும், உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும். பச்சைக் காய்கள் பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
பழம் காய்ந்தால் வத்தலாக மாறிவிடும். ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும். காய் சற்று கசப்புடையது. வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். இது உலகெங்கும் உள்ளது. இதன் தாயகம் புளோரிடா என்றும் மேற்கிந்தியாவிலும் பின் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அவாய், பசிபிக்தீவுகளிலும், நடு அமரிக்காவிலும், தென் அமரிக்காவிலும், பிரேசிலிலும் பரவியதாகக் கூறுவர். இதை இன விருத்தி செய்ய விதைமூலமாகவும், கிளைகளை வெட்டி வைத்து முறைப்படி வளர்த்தியும் பயிரிடுவார்கள்.

7. மருத்துவப் பயன்கள் :- சுண்டை கோழையகற்றியாகவும், வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், சுண்டைக் கசாயம் பாம்புக்கடி வீரியம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கக் கூடியது. மலேசியாவில் இதன் விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள். வியட்னாமில் இதன் இலையை மாதவிடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.

பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.

உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்ச்சளி, நீரிழுவு தீரும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.

இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்.

இதன் வத்தலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.

வசம்பு.

1. மூலிகையின் பெயர் :- வசம்பு.

2. தாவரப்பெயர் :- ACORUS CALAMUS.

3. தவரக்குடும்பம் :-
AROIDACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- வேர் மற்றும் இலைகள்.

5. வேறுபெயர்கள் :-
பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான்.

6.வளரியல்பு :-
வசம்பு ஆறு, ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு. இதன் பிறப்பிடம் தென் கிழக்கு அமரிக்கா. இது இந்தியாவில் மணிப்பூரிலும், நாகமலையிலும் கேராளாவிலும் அதிகமாக வளர்கிறது.
சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் நீர் பிடிப்புள்ள பகுதிகள் மிகவும் ஏற்றவை. வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன் படுகிறது.
இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும். வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையுடையவை. இதன் தண்டு வேர் பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற்பகுதி சாம்பல் நிறத்துடனும் இருக்கும்.
வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி நீளம் வரை படரும். வேர்கள் தான் வசம்பு என்பது. நட்ட ஒரு ஆண்டில் பயிர் மூதிர்ந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அதாவது ஒரு ஆண்டில் கிழங்கை வெட்டி எடுக்க வேண்டும். இந்த வசம்பில் அசரோன், அகோரின் மற்றும் கொலாமினால் போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன. இது நல்ல வாசனையையுடையது. இது கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறுது.

7.மருத்துவப்பயன்கள்-வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோடு நுண்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.

நாட்பட்ட கீல்வாத நோய்களுக்கு வசம்பை காசிக் கட்டியுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றிட்டு வர குணமாகும்.

வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.

வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.

வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.

வசம்பைக் கருக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை தீரும்.

வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைக்க, உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டைக் கம்மல் இருமலை அகற்றும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் சுரம், இருமல், வயிற்றுவலி இவை குணமாக வசம்புடன் அதிமதுரம் சேர்த்து கசாயமிட்டு காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கக் குணமாகும்.

வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு திருந்தும்.

பசியைத் தூண்டவும், அஜீரணத்தைப் போக்கி வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கவும் வசம்பு ஒரு பங்கும் பத்து பங்கு வெந்நீரும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி பதினைந்து மி.லி. முதல் முப்பது மி.லி. வீதம் அருந்தி வர வேண்டும். குழந்தைகளுக்கு உண்டான கழிச்சலுக்கும், முறைக் காச்சலுக்கும் இதனை கொடுக்கலாம்.

வயிறில் சேர்ந்த வாயுவை அகற்ற வசம்பை அடுப்பில் வைத்து சுட்டுக் கரியாக்கி, அதனை தேங்காய் எண்ணையுடன் கலந்து அடி வயிற்றில் பூசவேண்டும்.

சகலவித விஷக்கடிகளுக்கும் இதன் வேரை வாயிலிட்டு மென்று வர விஷம் முறியும்.

வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்த்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சம அளவு இடித்துப் பொடித்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை கொடுத்துவர வயிற்றுவலி, மூர்ச்சை, காய்சலுக்குப் பின் உண்டாகும் பலக்குறைவு,காக்காய்வலிப்பு ஆகியவை தீரும்.
நன்றி:மூலிகை வளம் குப்புசாமி அவர்களுக்கு
Engr.Sulthan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக