நிறைவேறிய 'இயற்கை' சபதம் !
முயற்சி
பளிச்... பளிச்...
தென்னை நார்க்கழிவில்விவசாயம்.
மண்புழுக்கள் பெருக்கம்.
பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.
மண்புழுக்கள் பெருக்கம்.
பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.
இயற்கை விவசாயத்துக்குள் காலடி வைக்கும் பெரும்பாலானோர், பாரம்பரிய ரகங்கள், புதிய சாகுபடி முறைகள்... என ஏதாவதொரு புதுமையைக் கையிலெடுத்து, தங்களது நிலத்தையே பரிசோதனைக் கூடமாக மாற்றி விடுவார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், ரஃபீக். இவர், திருச்சி-தஞ்சாவூர் மாவட்டங்கள் சந்தித்துக் கொள்ளும் கல்லணை அருகில் உள்ள உத்தமர்சீலி கிராமத்தில், பெருமுயற்சியோடு இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
பசுமை விகடன் 10.02.2009 தேதியிட்ட இதழில், 'ஒருங்கிணைந்தப் பண்ணையம் லட்சியம்... மாசத்துக்கு ஒரு லட்சம் நிச்சயம்' என்ற தலைப்பில் இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.
''விவசாயம், ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை இதுக்காக மட்டுமே இந்த பத்து ஏக்கர்ல பத்து லட்ச ரூபாய் வரைக்கும் முதலீடு செஞ்சிருக்கேன். இன்னும் ஒரு வருஷம் கழிச்சி. எல்லா செலவும் போக, மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய் லாபம் சம்பாதிக்கணும்கிறதுதான் என்னோட இலக்கு. கட்டாயம் அதைவிட அதிகமாத்தான் கிடைக்கும்''
-இப்படி சபதம் போட்டபடி, 'தென்னை தவிர, வேறு சாகுபடிக்கு சரிப்பட்டு வராது' என்று ஒதுக்கிவிடப்பட்ட மணல் மேவிய வண்டல் மண் நிலத்தை விலைக்கு வாங்கிய ரஃபீக், இயற்கைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மண்ணையே மாற்றி, நெல் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் 'பத்து ஏக்கரில் ஒரு மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய்' எனும் சபதத்தை தற்போது நிறைவேற்றிக் கொண்டுவிட்டார்.
அடுத்தக் கட்டமாக, தென்னை நார்க்கழிவுகளைப் பயன்படுத்தி 'ஜீரோ பட்ஜெட்’ முறையில் வாழை சாகுபடியிலும் இறங்கியிருக்கும் இவர், தற்போது 'பத்து ஏக்கரில் மாதம் 2 லட்ச ரூபாய் லாபம்' எனும் புதிய சபதத்தோடு களத்தில் பரபரத்துக் கொண்டிருக்கிறார்!
6 அடி உயரத்துக்கு நெல்!
தன்னுடைய அனுபவங்களை ரசிக்கச் ரசிக்கச் சொல்லும் ரஃபீக்கை பார்க்கும்போது, நமக்கும்கூட உற்சாகம் பற்றிக் கொள்கிறது. ''இந்தப் பகுதியில நான் நிலம் வாங்கினப்போ... 'தென்னையைத் தவிர எந்த விவசாயத்துக்கும் சரிப்பட்டு வராத மண்ணு’னு எல்லாரும் சொன்னாங்க. இருந்தாலும், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் ஆலோசனைப்படி அமுதக்கரைசல், பஞ்சகவ்யா; 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரோட ஜீவாமிர்தம்னு எல்லாத்தையும் பயன்படுத்தி நிலத்தை வளப்படுத்தினேன்.
வரப்புல எல்லாம் வாழை, தென்னை, தீவன மரங்கள்னு நட்டு வெச்சுட்டு, நெல் சாகுபடியில இறங்கினேன். நாட்டு ரகமான வெள்ளைப் பொன்னி நெல்லைத்தான் போட்டேன். எந்த மருந்தும் அடிக்கல.. துளி ரசாயன உரமும் போடல. அருமையான விளைச்சல். பக்கத்துல தோட்டம் போட்டிருந்தவங்கள்லாம் ஆச்சரியமா பார்த்துட்டுப் போனாங்க.
ஒவ்வொரு நெல்லுப்பயிரும் சும்மா ஆறடி உயரத்துக்கு வளந்து நின்னுச்சு. இதுதவிர நான் வளர்க்கற கால்நடைகளும் சரியான முறையில கைகொடுக்க... நான் எதிர்பார்த்தபடியே பத்து ஏக்கர்ல இருந்து மாசம் ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் வர ஆரம்பிச்சுடுச்சு'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்ன ரஃபீக், தொடர்ந்தார்.
'வரப்பு’ வாழை கொடுத்த நம்பிக்கை!
''வரப்புல சும்மா சோதனைக்காக போட்டிருந்த 500 வாழையும் ரொம்பவே நல்லா வந்திருந்துச்சு. அதனாலதான் தோட்டம் முழுக்கவே வாழை போட்டா என்னா?னு அடுத்த கட்டமா வாழை சாகுபடியில இறங்கினேன்.
நிறைய பேர், 'சரியா வராது... யோசிச்சு செய்யுங்க’னு சொன்னாங்க. அதுக்குக் காரணமா மறுபடியும் அவங்க சுட்டிக் காட்டினது... என்னோட மண்ணைத்தான். 'இந்த மண்ணுல நெல்லு விளைய வெச்சாச்சு... அடுத்தாப்புல வாழையையும் நல்லபடியா வர வைக்கறதுக்கு என்ன பண்றது?'னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.
விவசாய பயிற்சிகளுக்குப் போயிருந்தப்ப தென்னை நார்க்கழிவு விவசாயம் பற்றி கேள்விப் பட்டிருந்தேன். அதையே பண்ணிப் பார்த்தா என்னான்னு தோணிச்சு. உடனே செயல்ல இறங்கிட்டேன்.
தென்னைநார் கம்பெனிகள்ல, 'எப்படி காலி பண்றது'னு தெரியாம அதை சும்மாப் போட்டு வெச்சிருப்பாங்க. போய் கேட்டதுமே 'இடம் காலியாகிடும்'னு சந்தோஷமா அள்ளிட்டுப் போகச் சொல்லிட்டாங்க.
நாலு அங்குல உயரத்துக்கு நார்க்கழிவு!
அஞ்சு ஏக்கர் நிலத்தை உழுது, 50 டிராக்டர் குப்பை அடிச்சு, இன்னொரு உழவு ஓட்டி, நாலு அங்குல உயரத்துக்கு தென்னை நார்க்கழிவைக் கொட்டினேன். வரிசைக்கு வரிசை 8 அடி, மரத்துக்கு மரம் 5 அடி இடைவெளி கொடுத்து ரஸ்தாளி, மொந்தன், பூவன், கற்பூரவள்ளி, ஏழரசினு வாழைக்கட்டைகளை நடவு செஞ்சேன். இடைவெளியில நவதானியத்தை விதைச்சு, 40 நாள் கழிச்சு, எல்லாத்தையும் பறிச்சு வாழைத்தூர்ல போட்டு திரும்பவும், நாரைப் போட்டு மண் அணைச்சு விட்டேன். இந்தப்பகுதியில வாழைக்கு கிடங்கு எடுக்கறதுதான் வழக்கம். நான் மேட்டுப்பாத்தியில இருக்கற மாதிரி வெச்சிருக்கேன். அதனால மழை கொட்டினாலும், நிலத்துல தண்ணி நின்னாலும், வாழைத்தூருக்கு பாதிப்பு வராது.
பாசனத்தோடு சாணம், மூத்திரம்!
பாசனம் பண்ணும்போதெல்லாம் தண்ணியோட சாணத்தையும் மாட்டுச் சிறுநீரையும் கலந்து விடுறேன். பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தை இலை வழி ஊட்டத்துக்காகத் தெளிச்சு விடுறேன். மாசத்துக்கொரு தடவை புளிச்சமோரையும், தேங்காய் தண்ணியையும் தனித்தனியா தெளிச்சு விடுறேன்.
ஒரு மழை பெய்தால் ஒரு மாதத்துக்கு ஈரப்பதம்!
நார்க்கழிவு கொஞ்சம் கொஞ்சமா மக்கிக் கிட்டே இருக்கு. அதோட நவதானியச் செடிகளும் சேர்ந்து மக்கி நல்ல உரமா மாறியிருக்கு. தோட்டமே 'ஸ்பான்ஞ்ச்’ மாதிரி மெத்து மெத்துனு இருக்கு. ஒரு தடவை உழவு மழை பெஞ்சாக்கூட போதும். ஒரு மாசத்துக்கு நிலம் காயாது. அந்தளவுக்கு ஈரப்பதத்தை நார் பிடிச்சு வெச்சுக்குது. மண்ணை எந்த இடத்துல கிளறினாலும், மண்புழுதான். ஒரு புழுவைக்கூட நான் வெளியில இருந்து கொண்டுவரல. ஆனா... லட்சக்கணக்குல புழுக்கள் இருக்கு. களைகளும் பெருசா முளைக்கிறதில்லை.
நவதானியச் செடிகள்தான் உரம்!
இன்னொரு ஒன்றரை ஏக்கர்ல தென்னைநார் போடாமலே வாழை ரகங்களைக் கலந்து நட்டு பரிசோதனை பண்ணிக்கிட்டிருக்கேன். ஜீவாமிர்தம், புளிச்சமோர், தேங்காய் தண்ணி எல்லாத்தையும் தெளிக்கிறேன். இடையில நவதானியத்தையும் விதைச்சுக்கிட்டிருக்கேன். ஒரு தடவை நவதானியச் செடிகளைப் பிடுங்கிப் போட்டதும், திரும்ப விதைகளைத் தூவி விட்டுவேன். இதேமாதிரி தொடர்ந்து செஞ்சு மண்ணை வளப்படுத்திக்கிட்டிருக்கேன். ஜீரோ பட்ஜெட் முறைப்படி நல்ல இடைவெளி கொடுத்திருக்கறதால, ஊடுபயிர் சாகுபடியும் பண்ணிக்கலாம். நான் தட்டைப்பயறு போட்டுப் பாத்தப்போ நல்லா வந்திருந்துச்சு.
இப்ப ரெண்டு தோட்டத்துலயும் வளர்ந்து நிக்கற வாழைகளைப் பார்த்துட்டு, 'பெரிய பெரிய தார்களாத்தான் போடும்'னு எல்லாரும் சொல்றாங்க. நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்'' என்று சிலாகித்த ரஃபீக், தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் தான் பெற்ற அனுபவங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
தெளிப்புக்கு மட்டும் ஜீவாமிர்தம்!
''ஜீரோ பட்ஜெட் பயிற்சிக்குப் போயிருந்தப்போ, சுபாஷ் பாலேக்கர், 'மனிதர்களே பட்டினியிலே கிடக்கிறப்போ... அவங்களுக்கு உணவா பயன்படுகிற பால், நெய், தயிர்... எல்லாத்தையும் கலந்து பயிருக்குக் கொடுக்கலாமா?’னு ஒரு கேள்வி கேட்டார். அது எனக்கு மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சுடுச்சு. அதனால, பஞ்சகவ்யா உபயோகப்படுத்துறதை நிறுத்திட்டேன். ஜீவாமிர்தத்துலயும் பயறு மாவு, நாட்டுச்சர்க்கரை பயன்படுத்துறதால அதையும் குறைக்கணும்னு முடிவு பண்ணினேன். இலை வழித் தெளிப்புக்கு மட்டும்தான் ஜீவாமிர்தம்னு முடிவு செய்த நான், நிலத்துக்கு ஊட்டம் கொடுக்கணும்கிறதுக்காக ஒரு தொட்டியைக் கட்டி அதுல சாணத்தைக் கொட்டி பாசனம் பண்ணும்போது கொஞ்சம் கொஞ்சமா சாணி கரைஞ்சு போற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கேன். மாட்டுப் பண்ணையில இருந்து மாட்டுச் சிறுநீர் தொட்டிக்கு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கேன்.
வரப்பிலேயே பசுந்தீவனம்!
வரப்பு முழுக்க மரங்கள நட்டு வெச்சுருக்கதால மாறி மாறி நிழல் விழுந்து நிலம் பெரியளவுல சூடாகுறதில்ல. அதேபோல தீவன சாகுபடிக்காக நிலத்தை வீணடிக்காம வரப்புலேயே மாடுகளுக்கான தீவனப்புல்லை விதைச்சு விட்டுருக்கேன். இதுவும் பாலேக்கரோட முறைதான். என்கிட்ட இருக்குற மாடுகளுக்கு இதுவே போதுமானதா இருக்கு. பத்து ஏக்கர் வரப்பு முழுக்க விதைச்ச தீவனப்புல்லே... கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் அளவுக்கு மேல மகசூல் கொடுக்குது. கால்நடைகளுக்கு உணவாகாத எந்தப் பயிரையும் நான் விளைவிக்கிறதில்லை. பயிரோட கழிவு கால்நடைக்கு உணவாகணும். கால்நடைகளோட கழிவு, பயிருக்கு உணவாகணும்கிறதுல கவனமா இருக்கேன்'' என்று சொன்ன ரஃபீக்,
சம்பளம் மட்டும்தான் செலவு!
''இயற்கை முறையில் ஒருங்கிணைந்தப் பண்ணையம்', இதுதான் என்னோட வெற்றிக்கு மூல மந்திரம். 'பத்து ஏக்கர் நிலத்துல பண்ணையம் பண்ணி, ஒரு மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கணும்'னு விவசாயத்துல இறங்கினேன். நான் எதிர்பார்த்த மாதிரி அது கை கூடிடுச்சு. இப்போ மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிக்கணும்னு அடுத்த அடியெடுத்து வெச்சிருக்கேன்.
ஏற்கெனவே வரப்புல நடவு செஞ்ச வாழைக்கே தார் ஒண்ணுக்கு 200 ரூபா வீதம் கிடைச்சுது. இப்ப, மொத்தம் ஆறரை ஏக்கர்ல 7,000 வாழை மரம் வெச்சுருக்கேன். முழு இயற்கையில விளையுறதால ஒரு தாரை எப்படியும் 200 ரூபாய்க்கு விக்க முடியும். அதுலயே வருஷத்துக்கு 14 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். இதுபோக மீன், பால், நெல், கோழி, மாட்டுக் கன்றுகள் விற்பனையிலயும் கணிசமா லாபம் கிடைக்கும். கூடுதலா செம்மறி ஆடு வாங்கி வளர்க்கறதுக்காக கொட்டகை போட்டாச்சு. அதன் மூலமாவும் ஒரு லாபம் கிடைக்கும்.
எனக்கு இடுபொருள், பூச்சிக்கொல்லி எதுக்குமே செலவு கிடையாது. பெரியளவுல உபகரணங்களும் வாங்க வேண்டிய அவசியமில்லை. வேலைக்கு 2 குடும்பங்கள் இருக்கு. அவங்களுக்கு வருஷத்துக்கு 2 லட்சத்து
40 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்குறேன். என் கணக்கெல்லாம் சரியா வந்தா... பத்து ஏக்கர்ல மாசம் 2 லட்ச ரூபாய் வீதம்... வருஷத்துக்கு 24 லட்ச ரூபாய் லாபம் எடுத்துடுவேன்'' என்று உற்சாகமாகச் சொன்னார் ரஃபீக்.
உரக்குழி...
ரஃபீக், தன்னுடைய யோசனையில் உரக்குழி ஒன்றையும் பராமரித்து வருகிறார். இதிலிருந்து கிடைக்கும் உரத்தையே அடியுரமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்!
இதற்கான தொழில்நுட்பம் இதுதான்-மாட்டுக்கொட்டகைக்கு அருகிலேயே 50 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி ஆழம் உள்ள கிடங்கு வெட்டி, அதில் ஓரடி உயரத்துக்கு தென்னை நார்க்கழிவை பரப்பி, அதன் மீது ஆட்டுச்சாணம் மற்றும் மாட்டுச்சாணம் இரண்டையும் ஓரடி உயரத்துக்கு போடவேண்டும். இப்படி, தென்னைநார்க்கழிவு, ஆட்டுச்சாணம் மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவற்றை கிடங்கு நிறையும் வரை மாற்றி மாற்றிப் போடவேண்டும். இது நன்கு மட்கி, அருமையான உரமாக மாறிவிடும். ஆண்டுக்கு ஒரு தடவை இதை எடுத்து நிலத்துக்கு அடியுரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
நாட்டுக்கேற்ற ரகம் நாட்டுரகம்தான்!
'இயற்கை விவசாயம் என்று தீவிரமாக இறங்கிய பிறகு, பயிராக இருந்தாலும் சரி... கால்நடையாக இருந்தாலும் சரி... அது நாட்டுரகமாக இருந்தால்தான் விவசாயி தற்சார்படைய முடியும்' என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார், ரஃபீக். அதைப் பற்றி பேசும்போது...
''நாட்டுரகங்கள்தான் நோய் எதிர்ப்புச் சக்தியோட இருக்குது. ஆரம்பத்துல வான்கோழி, நாட்டுக்கோழி, தலைச்சேரி ஆடு, கழிவுகளுக்காக ஒரு நாட்டுமாடு, பாலுக்காக கலப்பின மாடுகள்னு வெச்சிருந்தேன். அதையெல்லாம் இப்போ மாத்திட்டேன்.
ஒரு வினாடி கூட வீணாகக் கூடாது!
வான்கோழி வளர்ப்பை சுத்தமாக் கைவிட்டுட்டேன். எந்தத் தொழில் செய்தாலும், அதுல லாபம் மட்டும்தான் குறிக்கோளா இருக்கணும். விவசாயமும் அதுக்கு விதிவிலக்கு கிடையாது. நம்மளோட ஒவ்வொரு வினாடி உழைப்பும் வீண் போகக்கூடாது. வான்கோழி வெச்சிருந்தப்போ குஞ்சுகளைக் காப்பாத்த, ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்துச்சு. அதுல நேரம் வீணாகவே... தேவையில்லாம எதுக்கு இதுல முட்டிக்கிட்டு கிடக்கணும்னு மொத்தமா எல்லாத்தையும் வித்துட்டேன். அதேசமயம் நாட்டுக்கோழி வளர்க்கிறேன். இதுங்களுக்காக ரொம்ப மெனக்கெட வேண்டியதே இல்ல. தன்னாலயே வளர்ந்துடும். இருந்தாலும், ஒரு கொட்டகை, போட்டுத்தான் வளர்க்கிறேன்.
இப்போ, ஜமுனாபாரி நாட்டு ஆடுகளோட கலப்பின ஆடுகள்லதான் 25 ஆடுகளை வெச்சிருக்கேன். முக்கால் ஏக்கர்ல இருக்குற குளத்துல சாப்பாட்டுக்கான மீன்களை வளர்த்துக்கிட்டிருக்கேன்
பால் பாசம் தேவையில்லை!
கலப்பின மாடுக எல்லாத்தையும் கொடுத்திட்டு இப்போ நம்ம நாட்டு ரகமான கிர், ரெட் சிந்தி மாடுகளை மட்டும்தான் வெச்சுருக்கேன். எல்லாரையும் மாதிரி நானும் 'பால் பாசம்’ காரணமாத்தான் கலப்பின மாடுகளை வாங்கினேன். லிட்டர் லிட்டரா கறக்கணும்னு நினைக்கறது தப்புனு பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். நாட்டுமாடு இல்லாம விவசாயமே கிடையாது. அதோட சாணமும் மாட்டுச்சிறுநீரும்தான் நமக்கு முதல் வருமானம். ரெண்டாவது வருமானம் கன்றுகள். மூணாவதாத்தான் பால் வருமானத்தை வெச்சுக்கணும். பால் வருமானத்தை முதலிடத்துல வெச்சுதான், கலப்பின மாடுகளுக்கு நாம பலியாகிக் கிடக்கிறோம்.
கலப்பின மாடுகளில் நஷ்டம்தான்!
நான் ஹோல்ஸ்டியின் ஃபிரீஸியன் கலப்பின மாடுகளைத்தான் வெச்சிருந்தேன். அதுல பாலுக்கு பஞ்சமில்லைங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். ஆனா, கிடேரிக்கன்னு சரியான வயதுல பருவத்துக்கு வர்றது கிடையாது. பருவத்துக்கு வந்தபிறகு 20 முறையாவது ஊசி போட்டாத்தான் சினை பிடிக்குது. டாக்டரோட உதவியில்லாம பிரசவமும் நடக்கிறதில்ல. ஆகக்கூடி... விவசாயி கலப்பின மாடு வளர்க்கறதால... டாக்டர், மருந்துக் கம்பெனி, தீவனக் கம்பெனி... இவங்களுக்குத்தான் வருமானம். விவசாயிக்கு நட்டம்!
பாலைவிட கன்று விற்பனையில் லாபம் அதிகம்!
நாட்டுமாடு வளர்க்கறப்போ பிரச்னையே கிடையாது. கலப்பின மாடு வளர்த்து பால் மூலமா சம்பாதிக்கிறதைவிட, நாட்டு மாட்டுக் கன்னுக்குட்டியை விக்கிற காசுல அதிக லாபம் கிடைக்கும். அதோட நாம் கொடுக்குற புல், பூண்டைச் சாப்பிட்டுட்டு நாலு மணி நேரத்துல உரமா மாத்திக் கொடுக்குற உரத்தொழிற்சாலைகளா நாட்டு மாடுக இருக்கு. கன்னுக்குட்டியை நல்லா செழிம்பா பால் குடிக்க வெச்சு அதுக்குப் போக மிச்சம் இருக்குற பாலைத்தான் நான் கறந்துக்குறேன். குட்டி ஒன்பது மாசத்துல சினைக்கு தயாராயிடுது. வருஷா வருஷம் ஒரு கன்னுக்குட்டி நமக்குக் கிடைச்சிடுது. இதுக்கு மேல என்ன வேணும்?'' என்று நியாயமானக் கேள்வியை எழுப்புகிறார் ரஃபீக்!
நாட்டுக்கோழி வளர்ப்பில் வேலையே இல்லை!
சுலபமான முறையில் நாட்டுக்கோழி வளர்த்து வரும் ரஃபீக், அதற்கென நூறு சதுர அடியில் கொட்டகை அமைத்துள்ளார். உள்புற தரைப்பகுதியில ஒன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் சிறுசிறு அறைகளாக
18 அறைகளைக் கட்டியிருக்கிறார். தரைப்பகுதி, சிறு அறைகள் என அனைத்திலும் நெல் உமியைப் பரப்பியிருக்கிறார்.
கொட்டகையின் அடிப்பகுதியில் கோழிகள் வெளியே வருவதற்காக சிறுதுளை அமைத்து அதற்கும் ஒரு மூடி போன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். காலை நேரத்தில் கீழ்புறத்துளையை மட்டும் திறந்து விட்டால்... ஒவ்வொரு கோழியாக வெளி வந்து வயல்வெளிகளில் மேய்ந்து இரை எடுத்துக் கொள்கின்றன. சூரியன் மறையத் தொடங்கும் நேரத்தில் தாங்களாகவே வந்து திரும்ப அடைந்து கொள்கின்றன (கீழ்ப்புறத் துளையை எப்போதும் அடைத்து வைக்கவேண்டும். இல்லாவிடில், பாம்பு போன்ற உயிரினங்கள் உள்ளே சென்றுவிடுவதற்கான வாய்ப்பு உண்டு).
கொட்டகையில் உள்ள அறைகளுக்குள்ளேயே முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சுகளைத் தாங்களாகவே வெளியே அழைத்து வந்து விடுகின்றன கோழிகள். அடை காக்கும் கோழிகள் மற்றும் வெளியே சரியாக தீவனம் எடுக்காத கோழிகளுக்காக கொட்டகைக்குள் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகளை அமைத்துள்ளார். தேவைப்படும்போது இவற்றில் கம்பு, சோளம், நெல் போன்றவற்றை நிரப்பி வைக்கிறார்.
''ஒரு கொட்டகையில 20 கோழி வரை வளர்க்கலாம். இப்ப 13 பெட்டை, ஒரு சேவல் என்கிட்ட இருக்கு. குஞ்சுகளோட எண்ணிக்கை பெருகுறப்ப தனியா கொட்டகை போட்டுக்கலாம்னு இருக்கேன். இல்லனா... குஞ்சுகளா விக்கவும் செய்யலாம். ரொம்ப எளிமையான இந்த முறையில... பராமரிப்பு, தீவனம் இதுக்கெல்லாம் செலவு குறைவாத்தான் இருக்கு'' என்கிறார் ரஃபீக்
மாதம் ஒரு லட்சம்...வந்தது இப்படித்தான்!
பத்து ஏக்கர் நிலத்தில் ரஃபீக் சொல்லும் வருமானக் கணக்கு இதுதான்-
''எங்க பகுதியில வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடி செய்யலாம். நான் ஆறு ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சேன். ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு 2,400 கிலோ நெல்லுங்கற கணக்குல ஆறு ஏக்கர்லயும்
14 ஆயிரத்து 400 கிலோ கிடைச்சுது. ரெண்டு போகத்துக்கும் 28 ஆயிரத்து 800 கிலோ. அதை அரிசியா அரைச்சப்போ... 19 ஆயிரத்து
200 கிலோ கிடைச்சுது. இயற்கையில் விளைஞ்ச வெள்ளைப் பொன்னி அரிசினு 25 கிலோ பையில போட்டு, கிலோ 35 ரூபாய்னு நண்பர்கள், உறவினர்கள்னு விற்பனை செஞ்சேன். அது மூலமா 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வருமானம்.
ஒரு வருஷத்துக்கு 80 தலைச்சேரி ஆட்டுக்குட்டிகளை வித்ததுல ஒன்றரை லட்ச ரூபாய்; 35 தென்னை மூலமாக 40 ஆயிரம் ரூபாய்; 500 வாழைத்தார்கள ஒண்ணு 200 ரூபாய்னு வித்ததுல 1 லட்ச ரூபாய்னு கிடைச்சுது.
அப்புறம், 20 பால் மாடுகள் மூலமாக தினமும் எழுபதுல இருந்து 130 லிட்டர் பால் கிடைச்சுச்சு. நேரடி விற்பனை மூலமாக ஒரு லிட்டர் 24 ரூபாய்னு வித்தேன். சராசரியா ஒரு நாளைக்கு 100 லிட்டர்னு கணக்குல தினசரி 2,400 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதன்படி வருஷத்துக்கு 8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது.
ஆகக்கூடி பத்து ஏக்கர்ல கிடைச்ச மொத்த வருமானம் 18 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய். ரெண்டு குடும்பங்களுக்கான சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், நடவு, அறுவடைக்கூலி, இடுபொருள் தயாரிப்புச் செலவு, போக்குவரத்து, அடர்தீவனம், அரிசிக்கான பைகள்னு எல்லாச்செலவும் சேர்த்து 4 லட்ச ரூபாய் வரைக்கும் ஆச்சு. மீதி 11 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைச்சுது. மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய்னு வெச்சுக்கலாம்.''
தொடர்புக்கு
ரஃபீக், அலைபேசி: 94444-03662.
ரஃபீக், அலைபேசி: 94444-03662.
alhamdullillaah
பதிலளிநீக்குSuper Sir...I admired about you. I will come to your place one day soon. Thank you
பதிலளிநீக்கு