ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்… என காசை இறைத்து விவசாயம் செய்து, கண்ணீரை அறுவடை செய்வது ஒரு ரகம். கழிவுகளை இறைத்து, இயற்கை விவசாயம் செய்து காசை அறுவடை செய்வது இரண்டாவது ரகம்! இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் – விசாகுமார். தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தென்னைக்கு ஊடுபயிராக பல ரக வாழைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - குளச்சல் சாலையில் ஆசாரிப்பள்ளம் என்ற ஊரிலிருந்து, இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பாம்பன்விளை. தென்னை, வாழைகளுக்கு மத்தியில் பசுமையாகக் காட்சியளிக்கிறது, விசாகுமாரின் இயற்கைத் தோட்டம்.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
விவசாயம் எங்க குடும்பத்திற்கு பூர்விகத் தொழில், என் கூடப் பிறந்தவங்க எல்லோருமாக சேர்ந்து விவசாயம் செய்து கொண்டிருந்தோம். தனியாக வீட்டு மொட்டை மாடியிலும் தோட்டம் போட்டிருந்தேன். தோட்டத்தில் தெளிச்சது போக மிச்சமீதி இருக்கும் ரசாயனத்தை வீட்டுத் தோட்டத்தில் தெளிப்பேன். இதைப் பார்த்த என் மனைவிதான், ஏன் இப்படி ரசாயனத்தை வாரி கொட்டுறீங்க, இது உடலுக்கும் கேடில்லையா என்று அடிக்கடி கேப்பாங்க. அதனால்தான் இயற்கை விவசாயம் பற்றிய தேடல் உருவானது. அதை, யாரிடம் கற்றுக் கொள்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் ‘பசுமை விகடன்’ அறிமுகமானது. எதார்த்தமாக ஒரு முறை பேருந்தில் போகும் போது படிக்க கிடைத்த ‘பசுமை விகடன்’ இன்றைக்கு என் சுவாசமாக மாறிப் போனது.
‘பசுமை விகடன்” நடத்திய சுபாஷ் பாலேக்கருடைய ஜீரோ பட்ஜெட் பயிற்சியிலும் கலந்து கொண்டேன். தொடர்ந்து பசுமை விகடனைப் படித்துவிட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாக கத்துக் கொண்டேன். நாகர் கோவிலில் இருக்கும் ‘ரூரல் அப்லிஃப்ட் சென்டரிலும் இயற்கை விவசாயப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். என்னதான் பயிற்சி எடுத்துக் கொண்டாலும், அனுபவ அறிவும் வேண்டுமே என்று இயற்கைக்கு மாற தீர்மானித்தேன். ஆனால், தொடக்கத்தில் கூட்டுக் குடும்பச் சொத்தாக இருந்ததால், இயற்கைக்கு மாறவேண்டும் என்று சொன்னதும், மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள். பாகப் பரிவினை செய்ததும் என்னுடைய நான்கு ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இப்போது முழுவதுமாக இயற்கை விவசாயத்திற்கு வந்து மூன்று வருடமாகிறது.
இந்த நான்கு ஏக்கரில், மூன்றரை ஏக்கரில் தென்னையும், அரை ஏக்கரில் முந்திரியும் போட்டிருக்கிறேன். தென்னைக்கு ஊடுபயிராக மூன்று ஏக்கரில் மட்டும் வாழை சாகுபடி செய்கிறேன். இதுபோக என் தோட்டத்தில் பப்பாளி -3 , கிராம்பு -7, பலா - 7, மா - 7, தேக்கு - 10, ஆரஞ்சு – 2, சப்போட்டா – 2 என்று மரங்கள் இருக்கு. கொஞ்சம் பனை மரங்களும் நிற்கிறது. என் தோட்டத்து தென்னை மரங்களுக்கு 35 வயது ஆகிறது. 25 அடி இடைவெளியில் மரங்கள் இருப்பதால், செவ்வாழை, படத்தி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மட்டி, ஏத்தன், பூங்கதளி வாழை ரகங்களைப் போட்டிருக்கிறேன்.
நீரை சிக்கனமாக்கும் கேணி!
வாழைக்கு எட்டு அடி முதல், பத்து அடி வரை இடைவெளி விட்டிருக்கிறேன். இரண்டு தென்னைகளுக்கு மத்தியில் (12 அடி இடைவெளியில்) மூன்றடி ஆழம், ஒன்றரை அடி அகலத்திற்கு கேணி (குழி) அமைத்திருக்கிறேன். தென்னை ஓலை, மடடை என்று கழிவுகளை கேணிக்குள் போட்டுவிடுவேன். இதனால், என்னதான் அடைமழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தோட்டத்தை விட்டு வெளியே போகாது. கேணியில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் விடுவேன். நல்ல வெயில் அடிக்கும்போது தென்னை மர ஓலையின் நிழல், எதுவரை படுதோ, அதுவரை வேர் விட்டிருக்கும். இதனால், பனிரெண்டு அடி தள்ளியிருந்தாலும், கேணியிலிருந்து, தென்னை தண்ணீரை உறிந்து கொள்கிறது.
இந்தக் கேணிகளுக்கு பக்கத்தில்தான் வாழை இருக்கு. ஒரு ஏக்கர் என்று பார்த்தீர்கள் என்றால்… 85 தென்னையும், 125 வாழையும் இருக்கும். தோட்டம் முழுக்க சொட்டுநீர்ப் பாசனம்தான். தென்னைக்கு என்று தனியாக எந்தப் பராமரிப்பும் செய்வதில்லை. வாழைக்கு மட்டும்தான் பராமரிப்பு. தென்னையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை காய் பறிப்போம். மூன்றரை ஏக்கரில் ஒவ்வொரு வருடமும் 3 ஆயிரம் காயிலிருந்து 4 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.
விதைநேர்த்தி முக்கியம்!
வாழையில் எந்த ரகமாக இருந்தாலும், சாகுபடி காலம் வேண்டுமானால் மாறுமே தவிர, பராமரிப்பு ஒன்றுதான். 2 கிலோ தொழுவுரம், 16 லிட்டர் தண்ணீர், தலா 200 மில்லி சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து அதில் விதைக்கிழங்கை நனைத்து நடவு செய்ய வேண்டும். இந்த அளவு, 100 கிழங்களுக்கு சரியாக இருக்கும். நடவு செய்ததும், முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 3-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும்… 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
களைகளே மூடாக்கு!
15-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும் 20 கிலோ தொழுவுரம் போட்டு, சுற்றியுள்ள களைகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். இதேபோல் 3,6,9 ம் மாதங்களிலும் களைகளை வெட்டி தொழுவுரத்தைச் சேர்த்து மூடாக்கிட வேண்டும். 5-ம் மாத இறுதியில், ஒவ்வொரு கன்றிற்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி, தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குவதில்லை!
முழுக்க இயற்கை விவசாயம் என்பதால், பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இருக்காது. பழுப்பு நோய் சில நேரங்களில் எட்டிப் பார்க்கும். இந்த நோய் தாக்கிய வாழையின் இலை பழுத்துப் போயிருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில், 50 மில்லி புளித்த மோர் சேர்த்து விசைத் தெளிப்பான் மூலமாக மரம் முழுவதும் தெளிக்க வேண்டும். இதற்கும் மட்டுப்படாவிட்டால், அடுத்த 15-ம் நாளில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் கலந்து தெளிப்பான் மூலமாக தெளித்தால்… பழுப்பு நோய் காணாமல் போய்விடும்.
செவ்வாழையில் ஆப்பிள் நோய் தாக்கும். இந்த நோய் குலை போடுவதற்கு முன்பு வந்தால்… அந்த மரத்தில் குலை தள்ளாது. குலை தள்ளிய பின்பு வந்தால்… காய் சிறுத்து போய்விடும். செவ்வாழைப் பழமும் நிறம் மாறி விடும். இதனால், 40% அளவிற்கு மகசூல் இழப்பு ஏற்படும். இலைகள் சிறுத்துப் போவதுதான் இந்த நோய்க்கான அறிகுறி. இந்த நோய், ரசாயன மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை. இலை சிறுத்ததுமே தலா 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, கலவையை வாழையின் தூரைச் சுற்றிப் போட்டு தண்ணீர்விட வேண்டும். அதில் மட்டுப்படாவிட்டால்… மீன் குணபம் (மீன் அமினோ அமிலம்) தயாரித்துத் தெளிக்கலாம். செவ்வாழை 10-ம் மாதத்தில் குலை தள்ளி, 12-ம் மாத இறுதியில் அறுவடைக்கு வரும். மற்ற ரகங்களைப் பொறுத்தவரை 9-ம் மாதத்தில் குலை தள்ளி, 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.
ஆண்டுக்கு ஆறு குலை!
பொதுவாக வாழைக்கு எட்டடி இடைவெளி இருந்தால் போதும். படத்தி ரக வாழைக்கு மட்டும் 15 அடி இடைவெளி விட்டிருக்கிறேன். இதில் பக்கக் கன்றை வெட்ட மாட்டேன். ஒவ்வொரு வாழையில் இருந்தும் எட்டு முதல் பத்து பக்கக் கன்றுகள் வரைக்கும் வரும். முதல் வாழையில் ஒன்பதாம் மாதம் குலை தள்ளும். அதிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று பக்கக் கன்றுகளில் குலை வெட்டலாம். தார் கொஞ்சம் சிறிதாக இருந்தாலும்… வருடத்தில் ஆறு தார் வரைக்கும் கிடைத்துவிடும். ஒரு தார் 250 ரூபாய் வரைக்கும் விலை போகிறது.
தார் வெட்டினதும், வாழையை அப்படியே விட்டுவிடுவேன். அது, தானா முறிந்து கீழே விழுந்து மூடாக்காகிடும். என்னுடைய தோட்டத்து மகசூலுக்கு மூடாக்குதான் மூல மந்திரம். வாழை குலை தள்ளிய உடனே, தோட்டத்துக்கே நேரடியாக வந்து விலை பேசி, ஒப்பந்தம் போட்டுகிறார்கள் வியாபாரிகள். செவ்வாழைக்கு எப்பவும் நல்ல விலை கிடைக்கிறது. ஒரு தார், 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைகூட விலை போகும். மற்ற ரகங்களில் ஒரு தார் 300 ரூபாய்க்கு குறையாமல் விலை போகும். எப்படிப் பார்த்தாலும்… லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மூன்று ஏக்கரில் ஊடுபயிராக போடும் வாழையிலேயே இத்தனை லாபம் என்கிற… சந்தோஷமான விஷயம்தானே என்றார்.
தொடர்புக்கு
விசாகுமார், செல்போன் : 93605 - 97284
ஆதாரம்: பசுமை விகடன்