வேளாண் தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாண் தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு

போத்து முறையில் மரங்களை வேகமாக வளர்க்க முடியும்

 மரங்களை விரைவில் வளர்க்க வகை செய்யும் தொழில் நுட்பம் குறித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உழவர் சந்தை துணை வேளாண் அலுவலர் அய்யப்பன்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே, பாப்பநாயக்கன்பட்டி சொந்த ஊர். திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படித்தேன்.


புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்துார் கிராமத்தில், ஆனந்த ராவ் என்பவர், ஆலமரக் கிளையை வெட்டி, போத்து முறையில் நடவு செய்து, பண்ணையை சோலைவனமாக மாற்றினார். அந்த பகுதியில் பணியாற்றிய போது, ஆனந்த ராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம் தான், போத்து முறை நடவு பற்றி தெரிந்தேன்.


போத்து என்றால், எங்கள் பகுதியில், மரத்தின் கிளை என, பொருள். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை போன்ற மரங்கள், போத்து முறைக்கு ஏற்றவை; உதியன், வாதமடக்கி வேகமாக வளரும் தன்மை கொண்டவை. இந்த முறைக்கு தேர்வு செய்யப்படும் மரங்கள், 10 ஆண்டுகள் வளர்ந்தவையாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், கை மணிக்கட்டு கனத்தில், அதிக வளைவு இல்லாமல், நேராக இருக்க வேண்டும். அது, ௮ - ௧௦ அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் கொப்புகளை வெட்டி அகற்றி விட வேண்டும். மரத்திலிருந்து நடவுக்காக வெட்டும் கிளையை, கரும்பு வெட்டுவது போல, சரிவாக வெட்ட வேண்டும்.


இன்று நடப் போகிறோம் என்றால், முந்தைய நாளில் கிளைகளை வெட்ட வேண்டும். நடவுக்கு தாமதமானால், கிளையின் அடிப்பகுதியில் ஈரத்துணி சுற்றி, நிழலில் வைக்கலாம். முன்னதாக, ௪ அடி ஆழம், ௪ அடி சுற்றளவுக்கு குழி தோண்ட வேண்டும். அந்த குழியை, ஒரு வாரம், அப்படியே விட வேண்டும். நடவிற்கு முந்தைய நாள் மாலை, ஒரு குடம் தண்ணீரை அந்த குழியில் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில், ௫ கிலோ மக்கிய தொழு உரத்துடன், மேல் மண்ணை கலந்து, குழிக்குள், ௧.௫ அடி உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அந்த குழிக்குள், மரக்கிளை நட்டு, சுற்றிலும் நன்றாக மண் மிதித்து, மண்ணை குவியல் போல வைக்க வேண்டும்.


இல்லாவிட்டால், காற்றின் சலனம், நீர் சலனத்தால், வேர் பிடித்தல் தாமதாகும். கிளையின் உச்சிப் பகுதியில், பசுஞ்சாணத்தை உருண்டை போல பிடித்து வைக்க வேண்டும். அடுத்த, ௪௫ - ௫௦ நாட்களில் இலைகள் துளிர் விடும். வெப்பம் குறைந்த, ஆடி துவங்கி, மார்கழி வரை, இந்த முறையில் மரங்களை நடவு செய்யலாம். இதனால், மரமாக வளரும் காலம் குறைந்து, விரைவில் பலன் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பின், கிராமங்களுக்கு சென்று, போத்து தொழில் நுட்பத்தில் நிறைய மரங்கள் வளர்க்க உள்ளேன்.

வியாழன்

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

 பப்பாளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தொடக்கத்திலேயே கண்டறிந்து முறையாக கட்டுப்படுத்தி, உரிய மகசூல் பெறலாம்.

விட்டமின் சத்துகள் நிறைந்தும், மலிவு விலையில் கிடைக்கும் பழம் என்பதாலும் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றதாக பப்பாளி உள்ளது. ஆண்டுக்கு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் அளவில் பப்பாளி மகசூல் கிடைக்கிறது.

நோய் அறிகுறிகள்

பப்பாளியில் மாவுப்பூச்சிகள் இலை மற்றும் காய்களில் தாக்குகிறது. இப்பூச்சிகள் தாக்கப்பட்ட இடங்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும். மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும்.

அதன் மேல், சிவப்பு மற்றும் கறுப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம், இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் கேப்னோடியம் என்றழைக்கப்படும் கருநிற பூசணம் படர்ந்திருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • மாவுப்பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளைத் தனியாக எடுத்து அழித்து வயல்களைச் சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும் போதே தேவையான பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
  • ஒரு லிட்டர் தண்ணீரில், 5 மில்லி லிட்டர் வேப்பங்கொட்டைச்சாறு (ஏக்கருக்கு 10 கிலோ) என்ற அளவில் தண்ணீரில் கரைத்து, அந்த கலவையைப் பாதிக்கப்பட்ட இலை மற்றும் காய்ப் பகுதிகளில் தெளிக்க வேண்டும்.
  • அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து, அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல், தயோமீத்தாக்சாம் என்ற மருந்தை 2 கிராம் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • குளவி ஒட்டுண்ணியான அசிரோபேகஸ் பப்பாயினை வயலில் விட்டு (ஏக்கருக்கு 50 எண்கள்) கட்டுப்படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளைக் கையாண்டால், பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.

பப்பாளி பயிரிடும் முறை

 பப்பாளி

பழ வகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், பப்பாளியைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல மகசூலையும், அதிக லாபத்தையும் ஈட்டலாம்

ரகங்கள்

பப்பாளி பயிரிட கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7 மற்றும் கூர்க்கனிடியூ மற்றும் சூரியா இவற்றுள் கோ.2, கோ.5 மற்றும் கொ.6 பப்பெயின் எடுப்பதற்கும் உண்பதற்கும் உகந்தது. கோ.3, கோ.7 இருபால் ரகங்களாகும்.

மண், தட்பவெப்பநிலை

பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக் கூடியது. எனினும் களிமண் பூமியில் சாகுபடி செய்ய முடியாது. சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் சற்றே வெப்பம் அதிகமாக நிலவும் இடங்களில் நன்கு வளரும். மலைப் பகுதிகளில் சுமார் 1,200 மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வடிகால் வசதி இருப்பதன் மூலம் தண்டுப் பகுதியில் ஏற்படும் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

பருவம்

ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். இருப்பினும் ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் பப்பாளி சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்து கொள்ள வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. நீளம், 45 செ.மீ. அகலம் மற்றும் 45 செ.மீ. ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுக்களை குழியின் மத்தியில் நடவேண்டும்.

விதைப்பு

ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் விதைகள் போதுமானது.

நாற்றாங்கால்

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலிதீன் பைகளில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலிதீன் பையில் நான்கு விதைகள் விதைக்க வேண்டும். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுக்கள் 60 நாளில் நடவுக்குத் தயாராகி விடும்.

நீர் நிர்வாகம்

வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஆண், பெண் செடிகளை நீக்கியவுடன் செடி ஒன்றுக்கு 50 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும். மேலும் செடி ஒன்றுக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா அளிக்க வேண்டும். உரம் இட்ட பின் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

நுண்ணோட்டச் சத்து

துத்தநாக சல்பேட் 0.5 சதவீதம் மற்றும் போரிக் அமிலம் 0.1 சதவீதம் என்ற கலவையை நடவு செய்த 4ஆவது மற்றும் 8ஆவது மாதங்களில் தெளிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும்.

பின்செய் நேர்த்தி

செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது, 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விடவேண்டும். ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு விட்டு இதர ஆண், பெண் செடிகளை நீக்கவேண்டும். கோ.3 மற்றும் கோ.7 போன்ற இருபால் ரகங்களில் இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பெண் மரங்களை நீக்கிவிடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு

நாற்றாங்காலில் நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஒரு பாலிதீன் பையில் ஒரு கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.

வேர் அழுகல் நோய்

செடியின் மேல் பாகத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கி நின்றால் இந்நோய் பரவும். இந்நோய் தாக்கிய செடிகள் வாடி இறந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த 0.1 சதவீத போர்டோக் கலவை அல்லது 0.2 மயில்துத்தநாகம் கரைசலை வேர்கள் நனையுமாறு ஊற்ற வேண்டும். 15 நாள் இடைவெளியில் 2 அல்லது 4 முறை உபயோகிக்க வேண்டும்.

அறுவடை

பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக வரும் போது அறுவடை செய்யவேண்டும்.

வயது

24 முதல் 30 மாதங்கள்.

மகசூல்

கோ.2 ரகமாக இருந்தால் ஹெக்டேருக்கு 250 டன்களும், கோ. 3 ரகத்தில் 120 டன், கோ.5 ரகத்தில் 250 டன், கோ. 8 ரகத்தில் 160 டன், கோ.7 ரகத்தில் 225 டன்களும் மகசூல் கிடைக்கும்

கேள்வி பதில்

1. உண்பதற்கு உகந்த பப்பாளி இரகங்களை கூறவும்

கோ3, கோ-7

2. உண்பதற்கு மற்றும் பப்பையின் என்னும் நெதி பொருள் எடுக்க உகந்த பப்பாளி இரகங்கள் யாவை?

கோ-2, கோ-5, கோ-6

3. பப்பையின் என்றால் என்ன?

முதிர்ச்சியடையாத பப்பாளி காய்களிலிருந்து (75-90 நாட்கள்) எடுக்கப்படும் நெதிப்பொருளையே பப்பையின் என்று அழைக்கின்றோம்.

4. பப்பையின் பயன்கள் யாவை?

டுட்டி-புட்ரூட்டி என்னும் பொருளை அடுமனைப் (பேக்கரி) பொருட்களில் சேர்க்கவும் மாமிசப் பண்டங்களை எளிதில் வேக வைக்கும் சிறப்பு தன்மையினையும் கொண்டதாகும்.

5. ஒரு எக்டரிலிருந்து எவ்வளவு பப்பையின் கிடைக்கும்?

600-800 கிலோ

6. பப்பையின் எடுத்த காய்களை/பழங்களை சந்தைகளில் விற்பனை செய்ய முடியமா?

விற்பனை செய்யலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை

சனி

வெறும் தண்ணீரில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி?

 மண் இல்லாமல் வெறும் தண்ணீரிலேயே கொத்தமல்லி வளர்க்க முடியும். தனியா விதைகள் மூலம் கொத்தமல்லி விளைகிறது. கொத்தமல்லி விலை என்னவோ எப்போதுமே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஐந்து ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை ஒரு கொத்தமல்லி கட்டு சீசனுக்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது. அதை நாமே வீட்டில் வெறும் தண்ணீரில் உருவாக்கி விடலாம். அதற்கு என்ன செய்வது? கொத்தமல்லி, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை எப்படி அதிக நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைப்பது? என்பதைப் பற்றியும் இப்பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

தனியா விதைகளை முந்தைய நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி விதைகளை விதைக்க ஒரு சிறிய பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் பிளாஸ்டிக் கூடை போல் ஓட்டை ஓட்டையாக இருக்கும் அல்லவா? அது தான் பிளாஸ்டிக் பில்டர் அல்லது மாவு சலிக்கும் சல்லடை கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் டிஷ்யூ பேப்பர் வைத்து ஊற வைத்து எடுத்த முழு தனியா விதைகளை தூவி விடவும். அதை அப்படியே எடுத்து அந்த பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி கீழே டிஷ்யூ பேப்பரில் லேசாக கூட படாதபடி வைத்து விடவும்.

விதைகள் தண்ணீரில் மூழ்கி விடக்கூடாது அதை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மேலே இன்னொரு டிஷ்யூ பேப்பரை வைத்து விதையை மூடி வைக்கவும். ஐந்து நாட்களுக்குள் விதைகள் முளைக்க செய்திருக்கும். இப்போது வெயில் அதிகம் படாமல் ஓரளவுக்கு வெயில் படும் படியான இடத்தில் வைக்க வேண்டும். முளைவிட்ட பின் மேலே இருக்கும் டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கொள்ளலாம்.

10லிருந்து 12 நாட்களுக்குள் கொத்தமல்லி இலை நன்றாக வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் அடியில் வைக்கப்பட்ட நீரை புதிதாக மாற்றி விட வேண்டும். அதன் பின் 2 லிருந்து 3 நாட்களுக்குள் அறுவடை செய்யும் அளவிற்கு கொத்தமல்லி வளர்ந்து செழிப்பாக நிற்கும். உரக்கலவையை பயன்படுத்தி கொத்தமல்லி விதைப்பவர்கள் அதனை ஒன்றிரண்டாக நசுக்கி தூவிவிட்டு அதன் மேல் லேசாக அரை இன்ச் அளவிற்கு மண்ணை தூவி விட்டால் போதும். இதே போல் 5 நாட்களுக்குள் முளைவிட்டு 15 நாட்களில் அறுவடை செய்து விடலாம். இடையிடையே ஈரப்பதம் வற்றி விடாமல் தண்ணீர் தெளித்தால் போதுமானது.

கொத்தமல்லி, புதினா இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை அதிக நாட்கள் வரை பிரஷ்ஷாக வைத்திருக்க சாதாரண கவரில் வைப்பதை விட திக்கான பிளாஸ்டிக் கவர் அல்லது ஜிப்லாக் கவர்கள் உபயோகப்படுத்தலாம். மொத்தமாக வாங்கி வைப்பவர்கள் நல்ல இலைகளையும், நிறம் மாறி இருக்கின்ற இலைகளையும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இலைகள் பிரஷ்ஷாக இருக்கும். நல்ல இலைகளை மட்டும் கவரில் வைத்து காற்றை நீக்கி விட்டு லாக் செய்து கவரை நன்கு மடித்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் போதும். பத்து நாட்களுக்கு மேல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். கொத்தமல்லி இலைகளை வேர் நீக்கி வைக்க வேண்டும்.

ஞாயிறு

அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்

அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவனம் மற்றும் இது ஒரு மிதக்கும் நீர்வாழ் உயிரி ஆகும். இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடியது. கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர். அவர்களுக்கு அசோலா ஒரு சரியான தீர்வாகும். அசோலா கால்நடைகள், மீன், பன்றி மற்றும் கோழிகளுக்கு ஏற்ற நிலையான தீவனமாகும், இது தவிர பண்ணையில் உயிர் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே பல விவசாயிகள் அசோலா சாகுபடியை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அசோலா வளர்ப்பு மிகவும் பிரபலமானது. அசோலா தழைச்சத்தை வழங்கக்கூடிய சிறந்த மூலமாகும். அசோலா சாகுபடிக்கு குறைந்த அளவு முதலீடு போதுமானது. இது நல்ல தீவனம் மற்றும் உயிர் உரத்திற்கான குறைந்த விலை கொண்ட மாற்று தீர்வாகும். அசோலா வளர்ப்பு முறைகள் : அசோலாவை வளர்ப்பதற்கான ஒரு குளத்தை உருவாக்க வேண்டும். அசோலா சாகுபடி குளத்தை உருவாக்குவதற்கு, ஓரளவு நிழலான பகுதியைத் தேர்ந்தெடுத்தால் மிகவும் சிறப்பு, ஏனெனில் அசோலாவுக்கு 30% சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதிக சூரிய ஒளி வளர்ச்சியை பாதிக்கும். மரத்தின் அடியில் உள்ள பகுதி ஏற்றதாகும். பெரிய அளவில் அசோலாவை வளர்க்க முடிவு செய்தால், சிறிய கான்கிரீட் தொட்டிகளை உருவாக்கலாம், இல்லையெனில் நீங்கள் விரும்பும் எந்த அளவிலும் குளத்தை உருவாக்கலாம். குளத்திற்கு மண்ணைத் தோண்டி, மண்ணை சமன் செய்தபின், தண்ணீர் இழப்பைத் தடுக்க பிளாஸ்டிக் தாளை தரையில் சுற்றி பரப்பவும். குளம் குறைந்தது 20 செ.மீ ஆழத்தில் இருக்க வேண்டும். குளத்தில் உள்ள பிளாஸ்டிக் தாளில் ஒரே மாதிரியாக மண்ணை பரப்ப வேண்டும். 2 மீ x 2 மீ அளவுள்ள குளத்திற்கு 10-15 கிலோ மண் சேர்க்கவும். அசோலாவுக்கு நன்றாக வளர மணிச்சத்துத் தேவை, இதற்கு மாட்டு சாணம் + சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தலாம். அடுத்து, சுமார் 10 செ.மீ அளவிற்கு குளத்தில் நீரை நிரப்பவும். பின்னர் குளத்தை 2 முதல் 3 நாட்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். 2-3 நாட்களுக்குப் பிறகு குளத்தில் அசோலா வித்துக்களை சேர்க்க வேண்டும். 2 வாரத்திற்குப் பிறகு அறுவடை தொடங்கலாம். 2 மீ x 2 மீ அளவுள்ள குளத்திலிருந்து, நீங்கள் ஒவ்வொரு நாளும் 1 கிலோ அசோலா அறுவடை செய்யலாம். கால்நடைகளுக்கு தீவனம் அசோலாவில் மிக அதிகமான புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் (வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, பீட்டா கரோட்டின்) மற்றும் தாதுக்கள் உள்ளன, எனவே இது கால்நடைகளுக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகும். மேலும், அசோலாவில் குறைந்த லிக்னின் உள்ளது. எனவே கால்நடைகளுக்கு எளிதில் ஜீரணமாகும். கோழிகளுக்கு அசோலா அளிப்பதால் எடை மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. 1.5 – 2 கிலோ அசோலா வழக்கமான தீவனத்துடன் இணைத்து கால்நடைகளுக்கு கொடுக்கும் போது பால் உற்பத்தி 15-20% வரை அதிகரிக்கும். ஆடு, பன்றி, முயல் மற்றும் மீன்களுக்கு அசோலாவை உணவளிக்கலாம். உயிர் உரம் அசோலா வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து இலைகளில் சேமிக்கிறது. நெல் சாகுபடி வயலில் இட்டு வளர்க்கும் போது 20% மகசூலை அதிகரிக்கச் செய்கிறது. களை கட்டுப்பாடு நெல் வயல்களில், அசோலா ஒரு தடிமனான அடுக்கை உருவாக்கி, களைகளை கட்டுப்படுத்துகிறது. இது நீர் ஆவியாதல் வீதத்தை குறைக்கிறது மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு பராமரிக்கிறது. கொசு கட்டுப்பாடு அசோலா கொசு வளர்ப்பு செயல்முறையை கட்டுப்படுத்தும் மற்றொரு திறனைக் கொண்டுள்ளது. அசோலா வித்துக்கள் எங்கே வாங்கலாம்? அரசு வேளாண்மைத் துறை, கால்நடைத்துறை அல்லது வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் அசோலா வித்துக்களைப் பெறலாம். மேலும் ஆன்லைன் வலைத்தளங்களில் இருந்தும் அசோலாவை வாங்கலாம்.

புதன்

மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு

 உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தாலும் மக்கள் நகரங்களை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்காக வருகின்றனர். ஆதலால் நகரங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள் நெருக்கமாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

வாகனப்பெருக்கத்தால் காற்று மாசுபாடு ஓர் முதன்மை பிரச்சனையாக எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 16.7 லட்சம் மக்கள் காற்று மாசுப்பாட்டால் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் காற்று மாசை கட்டுப்படுத்த பல சட்டங்கள் விதிகள் இயற்றப்பட்டாலும். 100 சதவீதம் தடுக்க முடியாத சூழலே உள்ளது. ஆதலால் மரங்களே ஓர் நிரந்தர தீர்வாக உள்ளன. நகரமயமாதலால் திடக்கழிவும் பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முதன்மையாக தேவைப்படுகிறது. எனவே திடக்கழிவு மேலாண்மை, காற்று மாசு குறைக்க, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஓர் சிறந்த வழியாக மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு முறை உள்ளது.

மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு முறையில் ஒரு சதுர அடிப்பரப்பளவில் 8 முதல் 10 மர / தாவர வகைகள் நடவு செய்து வளர்க்கப்படுகிறது. குறிப்பாக உள்நாட்டு மர வகைகள்  ( Native Tree Species)  மட்டும் நடவு செய்யப்படுகிறது. இந்த மியாவாக்கி முறை குறுங்காடு வளர்ப்பு நகரங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். தற்போதைய சூழலில் குறைந்த இடத்தில் அதிக மரங்களை நடவு செய்து பராமரிக்க ஏற்றமுறை. இந்த முறையில் பரப்பளவு அதிகம் தேவையில்லை. குறைந்த இடத்தில் அதிக மரங்கள் நடவு செய்யப்படுகிறது. இந்த முறையில் மரம் நடவுசெய்ய நிலத்தில் உள்ள மேற்பகுதியில் 2 முதல் 3 அடி உயரம் வரை உள்ள மண்ணை அகற்றிவிட்டு எளிதில் மட்கக்கூடிய இலைகள், மர துண்டுகள், மரத்தூள் மற்றும் எளிதில் மட்கக்கூடிய பொருட்களால் 75% குழியை நிரப்பிவிட்டு மீதமுள்ள 25% குழியை மரத்தூள் அல்லது இலை தழைகள் கலந்த மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். முழுமையாக நிரப்பிவிட்டு ஒரு சதுர அடி பரப்பளவில் 8 முதல் 10 மர/ செடி நாற்றுக்கள் நடவு செய்ய வேண்டும். இதில் உயரமாக வளரக்கூடிய மரங்கள், மூலிகை செடிகள், புதர் செடிகள்,  உயரம் குறைவாக வளரும் மர வகைகள் என அனைத்தும் கலந்து நடவுச்செய்ய வேண்டும். மியாவாக்கி முறையில் அனைத்து மரங்களும் கலந்து நடவுச்செய்ய வேண்டும். மியாவாக்கி முறையில் அனைத்து மரங்களும் கலந்து நடவுச்செய்தால் 2 முதல் 3 ஆண்டுகளிலேயே மனிதர்கள் நுழைய முடியாத அளவுக்கு அடர்ந்த காடு போல் வளர்ந்துவிடும். மூன்றாண்டுக்கு மேல் பராமரிப்பு தேவையில்லை. 10 ஆண்டுகள் வளர்ச்சியை இந்த முறை நடவு மூலம் 2 முதல் 3 ஆண்டுகளில் பலனை கண்கூடாக காணலாம்.

மியாவாக்கி என்னும் குறுங்காடு மர நடவு முறையில் மரங்களின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. மண் வளம் மற்றும் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகமாக உள்ளது. அதே சமயம் மண்புழுக்கள் வளர ஏதுவாக உள்ளது. மியாவாக்கி எனும் குறுங்காடு மர நடவு முறை ஓர் ஆக்சிஜன் பூங்காவாக வேலை செய்கிறது.

 

பூ வகை மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் கலந்து நடப்படும் போது மக்கள் நடைப்பயிற்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மியாவாக்கி என்னும் குறுங்காடு மர நடவு முறையானது பட்டாம்பூச்சி மற்றும் பல வகை பறவைகளை அதிகம் ஈர்கின்றது. இந்த முறைக்கு மண் தயார்படுத்துதல் மழைக்காலங்களில் மழைநீர் பூமிக்குள் செலுத்த ஓர் அருமையான முறையாக மியாவாக்கி முறை செயல்படுகிறது.

நகரப்பகுதிகளில் பசுமைப் பரப்பை பராமரிக்க மியாவாக்கி முறை ஓர் சிறந்த மரம் நடவும் முறையாகும். அதேபோல் பசுமைப் பரப்பை அதிகரிக்க மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்த புங்கன், பூவரசு, அரசு, நீலத்திருவத்தி, தாந்தோன்றி, நீர்மருது ஆகியவை கலந்த மியாவாக்கி முறையிலான மர நடவு முறை நகர்ப்புறப் பகுதிகளில் மிகவும் பொருத்தமாக இருக்கும் மரம் நடும் முறை. நகர்ப்புறப் பகுதிகளில் மிகவும் நல்ல முறையில் பலன் தரும். ஒளி மாசு குறைக்க ஒரு சிறந்த நடமாடவும் முறையாக இந்த மியாவாக்கி முறை அமைந்துள்ளது.

 

முனைவர்.அ.ச.கோவேந்தன்,

சுற்றுச்சூழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை- 641 003

 

திரு.ஆ.ரமேஷ்,

முதுநிலை ஆராய்ச்சியாளர்,

சுற்றுச்சூழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை- 641 003

மரங்களும் மற்றும் அதன் பயன்கள்

 மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

கோடை நிழலுக்கு வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். 
பசுந்தழை உரத்திற்கு புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு. 
கால்நடைத் தீவனத்திற்கு ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல். 
விறகிற்கு சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல். 
கட்டுமான பொருட்கள் கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி. 
மருந்து பொருட்களுக்கு கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் 
எண்ணெய்க்காக வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம் 
காகிதம் தயாரிக்க ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல் 
பஞ்சிற்கு காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு 
தீப்பெட்டித் தொழிலுக்கு பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு. 
தோல்பதனிடவும், மை தயாரிக்கவும் வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய் 
நார் எடுக்க பனை, ஆனைப்புளி 
பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி 
கோயில்களில் நட வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு 
குளக்கரையில் நட மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை 
பள்ளிகளில் வளர்க்க நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல் 
மேய்ச்சல் நிலங்களில் நட கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி
சாலை ஓரங்களில் நட புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு 
அரக்கு தயாரிக்க குசும், புரசு மற்றும் ஆல் 
நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், வேலிக்கருவேல், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம். 

விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

 பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மானிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வரிசை எண்கருவிகள் பெயர்சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்)இதர விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்)
1.டிராக்டர் (8 முதல் ஹெச்.பி மற்றும் 15 முதல் 20 ஹெச்.பி)1 லட்சம்75,000
2.டிராக்டர் (20 முதல் 40 ஹெச்.பி மற்றும் 40 முதல் 70 ஹெச்.பி வரை1.25 லட்சம்1 லட்சம்
3.பவர் டில்லர் (8 ஹெச்.பி-க்கு கீழ்)50,00040,000
4.பவர் டில்லர் (8 ஹெச்.பி-க்கு மேல்)75,00060,000
5.நெல் நாற்று நடவு செய்யும் கருவி (4 வரிசை)94,00075,000
6.நெல் நாற்று நடவு செய்யும் கருவி (4 வரிசைக்கு மேல்)2 லட்சம்2 லட்சம்
7.சுழற்கலப்பை (ரோட்டோவேட்டர்)63,00050,000
8.விதை விதைக்கும் கருவி, உரமிடும் உழவில்லா விதைப்புக் கருவி, உரத்துடன் விதை விதைக்கும் கருவி44,00035,000
9.டிராக்டரால் இயங்கக்கூடிய வரப்பு அமைக்கும் கருவி63,00050,000
10.டிராக்டரால் இயங்கும் வைக்கோல் கட்டும் கருவி63,00050,000
11.புதர் அகற்றும் கருவி (பிரஸ் கட்டர்)25,00020,000
12.நெற்பயிரில் களையெடுக்கும் கருவியினை உள்ளடக்கிய விசை களையெடுக்கும் கருவி19,00015,000
13.தட்டை வெட்டும் கருவி (3 ஹெச்.பிக்கும் குறைவான இயந்திரம் / மின்மோட்டாரினால் இயங்க கூடியது மற்றும் 20 ஹெச்.பிக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரால் இயங்கும்)20,00016,000
14.தட்டை வெட்டும் கருவி (3 ஹெச்.பிக்கும் மேல் 5 ஹெச்.பிக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரால் இயங்கும்)25,00020,000
15.விசைத் தெளிப்பான் (பவர் ஸ்பிரேயர், பேட்டரி ஸ்பிரேயர்)10,0008,000
16.டிராக்டரால் இயங்கக்கூடிய பூம் விசைத் தெளிப்பான்கள்63,00050,000

 

      குறிப்பு: கருவிகளின் விலைக்கேற்ப மானியத்தொகை வேறுபடும். மேற்கண்டவற்றில் அதிகபட்சமான விலை குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள். அதற்குமேல் நிலம் வைத்திருப்பவர்கள் இதர விவசாயிகள்.

செவ்வாய்

பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்

 மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

இதய வடிவிலான இலைகள்… மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்… குளிர்ந்தக் காற்று… இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.

அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்… கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.

இப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு…

போத்து நடவு !

‘பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது.

பராமரிப்பு தேவையில்லை !

நடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை

வீழ்ந்தாலும் வளரும் !

”இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா… திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பன்ற பூவரசு மரங்களை நட்டு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, நமது ஆரோக்கியத்தையும் வளமாக்கிக்க முடியும்.

ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்..
நீர் வளம் பெருக்குவோம் விவசாய நிலங்களை காப்போம்..

புதன்

ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்

சுண்டியிழுக்கும் சுவை, மறக்க முடியாத ருசி, ஏகப்பட்ட மருத்துவகுணங்கள் கொண்டவை நம் பாரம்பரிய அரிசிகள்! அந்தந்த மண்ணுக்கேத்த தரம், ருசி, மணம், வடிவம் கொண்டவை நம் பாரம்பரிய அரசி ரகங்கள்! இன்றைக்கும் பாரம்பரிய நெல்ரகங்களை மட்டுமே பயிரிடும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்! அப்படிப்பட்ட பாரம்பரிய அரிசிகளைத் தவிர மற்றவற்றை விரலாலும் தீண்டமறுக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் உள்ளன! பாரம்பரிய நெல் என்பவை இந்த தமிழ்மண் நமக்குத் தந்த வரம்! அதற்கு தேவையில்லை ரசாயண உரம்! அவை அத்தனையும் உன்னதத்தரம்! அரிசி என்றால் பச்சரிசி அல்லது புழுங்கலரிசி என்பதைக் கடந்து, வேறொன்றும் தெரியாத - தங்களை மெத்த படித்த அறிவாளிகளாக கருதிக்கொண்டிருக்கும் - ஆனால் அடிப்படையில் அறியவேண்டியவற்றை அறியாமல் உழன்று கொண்டிருக்கும் - கோடிக்கணக்கானவர்கள் இன்று உள்ளனர். ஐயோ பரிதாபம்...! இந்த தேசத்தின் உண்மையான சொத்து என்ன? சுகம் என்ன? இயற்கை தந்துகொண்டிருக்கும் கற்பகத்தரு என்ன? என்பதைத் தெரியாமலே பலர் வாழ்ந்தும் மடிந்தும் போய் விடுகின்றனர்! 50 வருஷத்திற்கு முன்பு வரை கூட நாம் பாரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே உண்டு வாழ்ந்தோம் என்பது பொய்யாய் பழங்கதையாய் போனதுவோ....? மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி... பாடலில், "ஆத்தூரு கிச்சிலிச்சம்பா பாத்து வாங்கி விதைவிதைச்சு..." என்ற வரி ஞாபகம் இருக்கிறதா? தைப்பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம் தங்கச்சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம் பாடல் ஞாபகம் இருக்கிறதா? இந்தத் தலைமுறையில் எத்தனைபேர் கிச்சலிச்சம்பா, தங்கச்சம்பா சோறு சாப்பிடும் வாய்ப்பு பெற்றுள்ளனர்? அடடா, அந்தச்சுவையை எழுத்தில் சொல்லக் கைகூடுமா? அதையெல்லாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு நோய்நொடி தான் வருமா? எப்போது நம் பாரம்பரிய நெல்ரகங்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகிறதோ? அன்றைக்கு தான் தமிழர்களின் ஆரோக்கியம் சிறக்கும்! அப்போது இங்கே மருத்துவர்களுக்கும், மருத்துவ மனைகளுக்குமான வேலை ரொம்ப குறைஞ்சி போயிடும். பசுமைபுரட்சியும், ரேஷன்அரிசி விநியோகத்திட்டமும் பாரம்பரிய அரிசப்பயன்பாடு பறிப்போக காரணங்களாகி விட்டன! விலையில்லா அரிசியை பெற்று வாழக்கூடிய ஒரு சமூகத்தை இன்று அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர். ஆனால், தங்கள் ஆரோக்கியத்தை காப்பற்றுவதற்காக பெரும் விலையை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நம் சமூகம் தள்ளப்பட்டுவிட்டதே! ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள் பாரம்பரிய அரிசி ரகங்களை தேடி வாங்கிச் சாப்பிடுங்கள். அப்படிச் சாப்பிடத்தொடங்கினால் பாரம்பரிய நெல்பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கூடிவிடும்! நமது பாரம்பரிய நெல்ரகங்கள் பெரும்பாலானவை நீண்டநாள் பயிர்களாகும். அதில் தான் நீடித்த ஆயுளுக்கான வாய்ப்பையும் நாம் பெறலாம்! 
 மாப்பிள்ளை சம்பா , தங்கச்சம்பா, சம்பாமோசனம், சண்டிகார், கைவரச்சம்பா போன்றவை 160 முதல் 170 நாட்கள் பயிர்களாகும். 

நெல்ரகங்கள் - 
நாட்கள் கருடன் சம்பா - (170 -180)  
குடவாழை - (140 -145) 
 நீலச்சம்பா - (175 - 180) 
 கிச்சிலிச்சம்பா - (140 - 145) கருப்புகவுணி - (140 - 150) 
 காட்டுயாணம் - (180 - 185) 
 ஓட்டையான் - 190 நாட்கள் 
 கரைநெல் - 270 நாட்கள் 
 மூங்கிலரிசி - 12,24,30,40 என வருடக்கணக்காகும் பயிர்களாகும்! 

பாரம்பரிய அரிசிகள் பயன்கள் பிசினி அரிசி, வாலான் அரிசி - பருவ வயது பெண்ணுக்கு உகந்தத ு பூங்கார், வாலான், சிகப்புக்கவுணி - கர்பிணி பெண்களுக்கு உகந்தத கிச்சிலிச்சம்பா, நீலச்சம்பா, குழிவெடிச்சான் - தாய்பால் சுரப்புக்கு உகந்தது மாப்பிள்ளை சம்பா - நரம்புகளை பலப்படுத்த, உயிரணுக்களை அதிகரிக்க, நீரழிவைதடுக்க காட்டுயாணம் - இதயபாதுகாப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, மூட்டுவலிதீர்வு, நீரழிவு தடுப்பு நீலசம்பா ; ரத்தசோகை விலக குள்ளக்கார், பெருங்கார், கருத்தகார் ; மலச்சிக்கல்தீர, மூலம்விலக வாடான் சம்பா ; அமைதியான தூக்கத்திற்கு கோரைச்சம்பா ; பித்தசூடுவிலக, உடல்குளிரவிக்க கட்டச்சம்பா ; கடும் உழைப்பாளிகளுக்கு மூங்கிலரிசி, மிளகி, கல்லுடைசம்பா,கவுணி ; எலும்பு பலப்பட கருங்குறுவை ; இழந்த சக்தியை மீட்டெடுக்க, கொடிய நோய்களிலிருந்து மீள, புற்றுநோய், தோல்நோய் சீராக குடவாழை ; குடலை வாழவைக்கும் இலுப்பை பூ சம்பா ; பக்கவாதம் விலக, கால்வலி சரியாக தூயமல்லி ; உடலின் உள் உறுப்புகளை வலுப்படுத்தும் சேலம் சன்னா ; தசை, நரம்பு, எலும்பு பலப்பட... சூரக்குறுவை ; உடலிலுள்ள கெட்ட கொழப்பை வெளியேற்ற... தங்கச்சம்பா ; இதயம் வலுப்படும், கால்சியம் அதிகமுள்ளது நீலச்சம்பா ; ரத்தசோகைவிலகும் 

பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு அவை கிடைக்கும் இடங்கள் 
 ஸ்ரீசாராதா ஆஸ்ரமம், விவேகானந்தா நகர், உளுந்தூர்பேட்டை -9943064596 
'நெல்' இரா.ஜெயராமன் திருத்துறைப்பூண்டி - 9443320954 பி.துரைசிங்கம் பரமகுடி -9443381816 
இரா.பொன்னம்பலம் நாகர்கோவில் - 9443482599 
கோ.சித்தர் தஞ்சாவூர் - 04362 233788 
ரோஸ்தொண்டு நிறுவனம் புதுக்கோட்டை -9842093143 
ஆர். ரெங்கநாதன் டி.இ.டி.இ டிரஸ்ட் சென்னை -9443346369 
ஆர். ஸ்ரீராம் - கதிராமங்கலம் -9467188531 
இந்திய பாரம்பரிய அறிவியல்மையம் சீர்காழி புதுச்சேரி இயற்கை வேளாண் சங்கம் இலுப்பூர் வென்சர் டிரஸ்ட் பாரம்பரிய விதைகள் மையம் கலசபாக்கம் திருவண்ணாமலை பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிடுவோம். தமிழ் மக்களின் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்.

சனி

பப்பாளி சாகுபடியும் அதன் பயன்களும்

  • சத்து நிறைந்த கனி வகைகளில் பப்பாளியும் ஒன்று. தொடர்ந்து காய்க்க கூடியது. இதன் ஆயுள் காலம் சுமார் இரண்டு ஆண்டுகள்.
  • பப்பாளி நாற்று விடும்போதே நடவு வயல் சுற்றி அகத்தி செடிகளை நெருக்கமாக விதைத்து விடுவதால் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.
  • தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் வளரும் தன்மை உடையது. ஏக்கருக்கு கிட்டத்தட்ட 20கிராம் விதைகள் வரை தேவை. இடைவெளி ஆறு முதல் ஏழு அடி வரை. மண் அனைப்பது மூலம் செடிகள் சாயாமல் தடுக்கலாம்.
  • அதிகம் பயன்பாடு உள்ள ரகங்கள் ரெட் லேடி, ராயல் ரெட், ஜின்டா மற்றும் கோவை ஆராய்ச்சி நிலைய ரகங்கள். சொட்டு நீர் பாசனம் சிறந்தது. அனைத்து பட்டங்களிலும் நடவு செய்யலாம்.
  • பிளாஸ்டிக் பைகள் மற்றும் tray க்களில் நாற்று விடலாம். கண்டிப்பாக நாற்று விடும்போதே வேப்பம் புண்ணாக்கு தொழு உரத்தோடு கலந்து இடுவதால் வேர் அழுகலை தடுக்கலாம். மண்புழு உரம் இடுவதால் மகசூல் அதிகரிக்கும்.
  • நாற்பது முதல்  அறுபது நாள் நாற்று நடுவது சிறப்பு. தொடர்ந்து காய்ப்பதால்   நுன்னூட்ட சத்துக்கள் அதிகம் தேவை, ஆதலால் நாற்று விடும்போது, செடிகளை நடவு வயலில் நடும் போது மற்றும் மாதம் ஒரு முறை கண்டிப்பாக வேரில் இட வேண்டும். இதனால் அதிக திரட்சியான காய்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். உயிர் உரங்கள் கட்டாயம் இடவேண்டும் ஏழாம் மாதம் முதல் காய்ப்பு வர ஆரம்பிக்கும்.
  • சில ரங்களின் காய்களில் இருந்து பால் எடுக்க படுகிறது. இது சில கிரீம் களில் பயன் படுத்த படுகிறது. அதனால் உபரி வருமானம்.
  • ஏக்கருக்கு இருபது டன்கள் தொழு உரம் மற்றும் மண் புழு உரம் மாதம் ஒருமுறை இட வேண்டும். மேம்படுத்தப்பட அமிர்த கரைசல் வாரம் ஒரு முறை.
  • பதினைந்து நாள் ஒரு முறை சொட்டுநீர் பாசனத்தில் கோமியம், சுண்ணாம்பு தூள்  இவற்றை கலந்து விடுவதால் வேரில் ஏற்படும் நோய்களை முற்றிலும் தடுக்கலாம்.
  • இவற்றை அதிகமாக தாக்கும் நோய்கள் மஞ்சள் வைரஸ் மற்றும் மாவுப்பூச்சி. கற்பூரகரைசல்  வாரம் ஒரு முறை தெளிப்பதால் இவை நெருங்காது.
  • வாரம் ஒரு முறை அறுவடை. அதாவது ஆறு மாதங்களுக்கு பிறகு. ஏக்கருக்கு கிட்டத்தட்ட அறுபது டன்கள் வரை அறுவடை. இயற்கை முறை சாகுபடியால் மூன்று வருடங்கள் வரை மகசூல் கிடைக்க வாய்ப்பு.
  • இதன் பழங்களில் அதிக வைட்டமின் சத்துகள் உள்ளதால் நிலையான சந்தை வாய்ப்பு. வெளிநாடுகளில் அதிக தேவை.
  • தொகுப்பு: ஸ்ரீதர் ( இயற்கை வேளாண் ஆர்வலர், மேலும் பல இயற்கை வேளாண் முறைகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வெற்றியும் கண்டவர்)
    தொடர்புக்கு: 9092779779

அமுத கரைசல் தயாரிக்கும் முறை


நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும் அமுத கரைசல்


நுணுக்கமான புரிதலுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் அணுகினால், விவசாயம் நிச்சயம் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தத் தகவலில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? என்று மற்றவரிடம் கேட்காமல், மற்றவர் கேட்க நீங்களே முன்னுதாரணமாகுங்கள். இயற்கை நம் தாய். தாய் என்றுமே பிள்ளைகளை காக்கவே செய்வாள். அந்த தாய் பூமியைக் காப்பதில் முதல் அடி எடுப்போம் நம் அமுத கரைசலுடன்.
அமுத கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அது நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும். அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
அமுத கரைசலை பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
தயாரிக்கும் முறை
நாட்டுப்பசு சாணம் = 10 கிலோ
நாட்டுப்பசு கோமியம் = 10 லிட்டர்
வெல்லம் = 250 கிராம்
தண்ணீர் = 200 லிட்டர்
முதலில் நாட்டுப்பசுஞ் சாணம்  மற்றும் நாட்டுப்பசு கோமியம் (பசும் சாணம் புதியதாக இருத்தல் வேண்டும், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு அதில்  வெல்லம் மற்றும் தண்ணீரைச்  சேர்க்க வேண்டும். இந்தக்  கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அந்த கலவையில் கொசுக்கள் முட்டையிடுவதைத் தவிர்க்க பிளாஸ்டிக் (அ) அட்டையை வைத்து மறைத்துக் கொள்ளலாம்.

பயன் படுத்தும் முறை
  • ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம்.
  • வாய்க்கால் மற்றும் சொட்டு நீரிலும் கலந்து விடலாம்.
  • அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.
  • பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
  • பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.
  • பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.
  • வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.
  • இதனை 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த கலவையைக் கலக்குவதன்மூலம் நொதித்தல் அதிகமாகும். மேற்பரப்பில் இருக்கும் தெளிந்த நீரை உபயோகிக்க வேண்டும். மேலும் இக்கரைசலைத் தெளித்த 2 மணி நேரத்திற்கு அதன் மிதமான மணம் பயிர்களின் மேல் இருக்கும்.

பிர்க்கை சாகுபடி சில குறிப்புகள்

பிர்க்கை சாகுபடி செய்துள்ள வீவசாயிகள் கவனத்திற்கு பீர்க்கையில் பூ பிஞ்சு வைக்கும் பொழுது தண்ணீர் கண்டிப்பாக பாய்ச்ச வேண்டும்.
வெயில் அதிகமாக இருப்பதால் காய் வெம்பி பிஞ்சு விட்டவுடன் அவை உதிர்ந்து விடும். இவ்வாறு இருப்பதற்கு போரான் சத்து அவசியம் தேவைப்படும்.
பீர்க்கங்காய் கீழ்நோக்கி நேராகத்தான் ஓரே சீராக இருக்கும். அப்படி நேராக காய்க்காமல் கோனலாக தரமில்லாமல் இருந்தால் அவை போரான் சத்து பற்றாக்குறையாகும். 
இந்த பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் செடியில் ஆண்பூக்களின் எண்ணிக்கை அதிகமாக பூத்து பெண்பூக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அப்படி இருப்பதால் காய் கோனலாகவும், மகசூல் இழப்பு ஏற்படும் இவற்றை சந்தையில் விற்பனை செய்ய முடியாது வாங்கமாட்டார்கள்.
இதனை சரிசெய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி போரான் மாலை வேளையில் தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம். நல்ல தரமான காய்களாக கிடைக்கும்.
வெயிலின் தாக்குதல் இருப்பதால் சாறுறிஞ்சும் பூச்சிகளும் அதிகமாக இருக்கும் இவை இலையில் உள்ள சாற்றை ஊறிஞ்சுவதால் இலைகள் வெளிரி இலையில் கரும்புள்ளிகள் தோன்றி இலைமுழுவதும் கருப்பாகி காய்ந்து விடும் 
இந்த சாறுறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்த மிக குறைந்த செலவிலேயே மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்
தொடர்புக்கு
8870392422

ஞாயிறு

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை

னக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம். இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர்
திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும் கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார்.
இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும் மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார்.
மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார்.
திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின்
பெயர்கள்: சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை, நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்), அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில், அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்), ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்
திரு.பவானந்தம் அவர்கள் கூறிய சில முலிகை குறிப்புகள்: ஆடாதோடை – காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும் சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும் சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) – சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும்,
நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.
நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு, மா, பலா, கிலா மருத்துவ மரங்கள்: வேம்பு, கும்பகொடளி, ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்
செ.சி.ப மூலிகை பண்ணை ஆராய்சி மையம், 79,காமராசர் சாலை, கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் – 614 624 9629601855